கோணங்கியின் மீது பல இளைஞர்களாலும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் வன்முறை புகார்களுக்கு இலக்கியவாதிகள் முன்வைத்திருக்கும் எதிர்வினைகள் அவருக்கு வெளிப்படையான, மறைமுகமான ஆதரவாகத் தொனிக்கிறது. குறிப்பாக ஜெயமோகன். இந்த எதிர்வினைகளில், ஜெயமோகனின் கட்டுரையில், நான் ஒன்றுபடும் இடங்கள் சில உள்ளன. அதே நேரத்தில் கடுமையாக மறுக்க வேண்டிய கருத்துகளும் வாதங்களும் உள்ளன. இவை குறித்து மட்டும் என் பார்வையை தெளிவுபடுத்தவும் பகிரவும் எண்ணுகிறேன்.
கருத்துகளையும் வாதங்களையும் இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன். தமிழ்ப் பொதுச் சமூகத்தில் பெருமளவுக்கு எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்துக்கும் மரியாதையோ இல்லாத நிலையில் பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள், புகார்கள் ஒரு இலக்கியவாதியை வேட்டையாட வழி ஏற்படுத்தித் தரும் என்பது முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற ஒரு வாதம்.
இரண்டாவது, குறிப்பிட்ட எழுத்தாளரைப் பொறுத்து இத்தகைய குற்றச்சாட்டுகள் (இதே வார்த்தைப் பிரயோகத்தில் சொல்லப்படாவிட்டாலும்) நிராகரிப்புக் கலாச்சாரத்தை புகுத்திவிடும் என்பது.
மூன்றாவது, ஒரு நவீன இலக்கியவாதியைப் பற்றிப் பொதுவெளியில் இத்தகைய விவகாரம் உருவாக்கும் பிம்பம் இலக்கியத்துக்குப் பாதகமாக முடியும் என்பது. முக்கியமாக, எழுத, வாசிக்க முன்வரும் மாணவர்கள், இளைஞர்கள் இலக்கியவாதிகளை எப்படி இனி அணுகுவார்கள், இளைய தலைமுறைக்கும் நமக்கும் இதனால் விரிசல் விழுந்துவிடாதா என்ற கேள்வி, கவலை.
நான்காவதாக, சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு இதனால் ஏற்படக்கூடிய பாதகங்கள், நம்பிக்கை இழப்புகள், அதைவிடவும் தன் குடும்பத்தால் கைவிடப்படக்கூடிய நிலை, இந்த நேரத்தில் நண்பர்களும் கூட நிற்காவிட்டால் எப்படி என்பதால் கூட நிற்க வேண்டும் என்று எடுக்கக்கூடிய நிலைப்பாடு.
மேற்கூறியவற்றில் முதல் இரு வாதங்களும் எனக்கு ஒரு அளவு வரை உடன்பாடானவை.
சின்ன சாக்கு கிடைத்தால் போதும், நவீன இலக்கியத்தின் மேல் கல்லெறிபவர்கள்தான் தமிழ்ச்சூழலில் அதிகம். தவிர, பல காலமாக பல பெண்கள் வைத்த குற்றச்சாட்டுகளையும் மீறி வெகுஜன எழுத்துத்தளத்தில் கம்பீரமாக உலாவரும், இப்போது இலக்கியவாதிகளின் அங்கீகாரத்தையும் வென்றெடுத்திருக்கும் வைரமுத்து போன்றவர்களை கண்முன்னால் பார்க்கிறோம். வைரமுத்து விவகாரம் வெடித்தபோது நான்கைந்து பேர் சமூகவலைதளத்தில் விமர்சித்திருந்தால் அதிகம். எழுதிய அந்த சிலரது விமர்சனங்களுக்குக்கூட பெரிய ஆதரவு எதுவுமில்லை. சின்மயி-வைரமுத்து என்று இருவரது தனிப்பட்ட விஷயமாக குறுக்கிய அவலம்தான் நடந்தது.
அதே நேரத்தில், கோணங்கி என்று வரும்போது ஒவ்வொருவரும் வீசுகிற வாட்களும் அவர்கள் காட்டுகிற வீரமும் கண்டு ஆஹாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி என வியக்கிறேன்! வெகுஜன எழுத்து x நவீன இலக்கியம் இரண்டுக்குமான வேறுபாடும் ஓப்பிடுகையில் முன்னதன் அரசியல் அதிகார இடமும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.
நிராகரிப்புக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை அதை முழுதும் எதிர்க்கிறேன். கோணங்கிக்குத் தரப்பட்டிருக்கும் விருதுகள் திரும்பப் பெறவேண்டும், அவரது எழுத்து பாடநூலிலிருந்து எடுக்கப்பட வேண்டும் போன்ற குரல்களை நான் ஏற்கவில்லை. நிராகரிப்புக் கலாச்சாரம் நிறுவ முயலும் சுத்திகரிப்புவாதத்தில் எனக்கு நம்பிக்கையோ ஈடுபாடோ இல்லை. தவிர, ஒருவரது ரத்தத்தைக் கேட்கும் சமூகவலைதளக் கூக்குரல்கள் எனக்கு ஒவ்வாமையைத் தருகின்றன. என்னுடைய வாதங்கள் அவ்விதமாகச் சற்றும் புரிந்துகொள்ளப்படக்கூடாது.
ஆனால், கோணங்கிக்கு ஆதரவாகக் கூறப்படும் மூன்றாவது, நான்காவது வாதங்கள் மிகவும் பிரச்சினைக்குரியவை.
இலக்கியவாதிகளின் பிம்பத்தைப் பற்றிப் பேசும்போது எழுத்துக்கும் எழுத்தாளருக்குமான உறவை எப்படி அணுகுகிறோம் என்பதும் அவசியமாகிறது. எழுத்தின் ஆதிமூலமாக, படைப்பாளியை கடவுள் ஸ்தானத்தில் வைத்து கருதிப் புரிந்துகொள்ளும்போது, அந்த உறவை அப்படி முன்னெடுக்கும்போது, இலக்கியவாதியின் பிம்பம் உடையும்போதெல்லாம் இலக்கியத்தின் அஸ்திவாரம் உடைவதைப் போலத்தான் தெரியும். ஒரு தளத்தில் எழுத்து வேறு, எழுத்தாளர் வேறு என்ற புரிதல் நிதர்சனத்துக்கு நெருக்கமானது. எழுத்து உருவாக்கத்தில் மரபு, தற்காலம், வரலாறு, சமூக இயங்கியல் (சில சமயம் யதேச்சை, ஏன் நம்பிக்கையாளர்களுக்கு இறையும்தான்) போன்ற பல படைப்பூக்க விசைகள் ஊடுபாவும் சாதனமாக, ஒரு prism போல எழுத்தாளர் இருக்கிறார் எனப் புரிந்துகொண்டால் “ஐயோ எழுத்தாளரின் திருவுரு உடைகிறதே” என்று சொல்லத் தோன்றாது.
மேலே கூறியவகையில் படைப்பாளி-வாசக உறவைப் புரிந்துகொள்வோம் என்றால் ’கலைஞன் என்றால் அதீதமாகப் பிறழ்வு கொண்டவனாக இருப்பான்’ என்று வரையறை செய்யத் தயங்குவோம். அதை கலைக்குத் தரும் வெகுமதியாகப் பிறர் (’பாமரர்கள்’) பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லத் தயங்குவோம். இந்த வரையறை ஏன் தவறு என்றால் இதைப் பிழையாக்கும் வகையில், இந்த எழுத்தாளர்கள், கலைஞர்களைவிட அதிக எண்ணிக்கையில் பல உன்னதமான கலைஞர்கள், எழுத்தாளர்கள் உலகத்தில் செயல்பட்டிருக்கிறார்கள், செயல்படுகிறார்கள் என்ற யதார்த்தம்தான். கூடவே எழுத்தின் ஆதிமூலமாக எழுத்தாளரைக் கருதாதபோது எழுத்தாளரும் பிற மனிதர்களைப் போலத்தான், அவரும் தவறுகள், குற்றங்கள் செய்யக்கூடும் என்ற உண்மையை அதன் முகத்துக்கு நேராக, ஒளிந்துகொள்ளாமல் நம்மால் பார்க்கமுடியும்.
மேலே கூறியிருப்பதன் அர்த்தம், மற்றவர்களைவிட எழுத்தாளர்கள், கலைஞர்கள் நுண்ணுணர்வு கொண்டவர்கள் என்பதை மறுத்தல்ல. நிச்சயமாக எழுத்தாளர்களும் பிற கலைஞர்களும் நுண்ணுணர்வு கொண்டவர்கள்தாம். ஆனால் அந்த நுண்ணுணர்வு மாத்திரமே கலைக்கு, எழுத்துக்கு ஆதாரமில்லை. அந்த நுண்ணுணர்வின் காரணமாக, மேற்பத்தியில் நான் எழுதியபடி அவர்களால் பல விசைகள் ஊடுபாவும் சாதனமாக இருக்க முடிகிறது, prism ஆக இயங்க முடிகிறது. (என்னைப் பொறுத்தவரை ஒரு கவிஞராக, எழுத்தாளராக கலை என்ற விசை என் மூலமாக[வும்] இயங்குகிறது என்றே இன்றுவரையில் பார்க்கிறேன். அவ்வாறு கருதுவது பல வகைகளில் எனக்கு நன்மையையே செய்திருக்கிறது.)
சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், கைவிடப்படுதல் குறித்தெல்லாம் விசாரப்படுகிறோம். அந்த அச்சத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தாளரால் அத்துமீறலுக்கு துன்புறுத்தலுக்கு ஆளாகித் தப்பிப் பிழைத்தவர்கள் பட்ட அஞர், அச்சம், உறவுகளில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அவநம்பிக்கை, ஊறுற்றதன் பக்க விளைவாக தொடரும் குற்றவுணர்ச்சி, அவர்கள் குடும்பங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்பு இதையெல்லாம் பற்றி யார் விசாரப்படுவது? எழுத்தாளர்கள் பிற வகை ப்ரொஃபெஷனல்களைப் போல, அல்லது தொழிற்சங்கவாதிகளைப் போல என் தரப்பு ஆளுக்கு நான் நிற்பேன் என்று பேசுவது சரியா என்ன? உண்மையில் எழுத்தாளர்களின் நுண்ணுணர்வு என்பது எளியவர்கள் சார்ந்த தரப்பின் நியாயத்தையும் பரிசீலிக்க முனைவதிலும் துணிவதிலும் கூட அல்லவா இருக்க வேண்டும்?
“Me too” வின் நோக்கம் ஒரு தளத்தில் பட்ட துயரங்களைக் காதுகொடுத்துக் கேட்க வைப்பதுதான். எடுத்தவுடன் தற்காப்புத் தயார் நிலைக்குச் சென்றுவிட்டால் எப்படி செவிகொடுக்க முடியும்? குறைந்தபட்சம் அதையாவது நுண்ணுணர்வு இருக்கிறவர்கள் செய்ய வேண்டாமா? பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்தவர்கள் பெரும்பாலோனோருக்கு நீதிமன்றங்களில் நீதி கிடைத்ததில்லை. அவர்களது சாட்சியங்கள் “கறைபடிந்த சாட்சியங்களாகவே” நீதிமன்ற வளாகங்களில் பெரும்பாலும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகப்படுகின்றன. அதை விடுங்கள், தப்பிப் பிழைத்தவர்கள் தங்கள் துயரங்களை நினைவுகூர்ந்து கூறும்போது, அவற்றைச் செவியுறுபவர்களிடமிருந்து கிடைக்கும் solidarity தான் சிறிய பற்றுக்கோடு. சொல்லப்போனால் solidarity networks போன்றவற்றைக் கட்டுவதன் முதலடி கூட தமிழ்ச்சூழலில் இன்னும் நடக்கவில்லை. அதுதான் இங்கே நிலவரம். அந்தப் பற்றுக்கோட்டையாவது நாம் அழிக்காமல் இருக்கவேண்டும்.
இக்கேள்விகள் எதற்கும் பதில்களைக் கோரி எழுதவில்லை. நிலைப்பாடுகளை எடுத்துவிட்டவர்களை மாற்ற முயல்வது என் நோக்கமல்ல. அது கடினமும் கூட. மேலும் நன்னம்பிக்கையில் தொடங்கும் உரையாடல்கள் பல சமயம் மனக்கசப்பில் முடிந்திருக்கிறது. அப்படி இதுவும் ஆகிவிடக்கூடாது என்றும் நினைக்கிறேன்.
முக்கியமாக, இப்பதிவை பெண் எழுத்தாளர் என்ற அடையாளத்தை முன்நிறுத்தி நான் எழுதவில்லை. போகிற போக்கில் ஒலிக்கும் ஒரு குரல் என்று எடுத்துக்கொண்டால் போதுமானது.