(courtesy: “The art of waiting,” ignant.com)

புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் ஒன்றான ‘ஆண்மை’யின்  தலைப்பே நகைமுரண். கதையின் நாயகன் ஒரு கோழை. அதாவது,  நம் ஊரில் இன்றளவும் ஆண்மை, ஆண்மை என்று பறைசாற்றுகிறார்களே அது கட்டமைக்கும் ’உயர்’ குணமான வீரம் இல்லாதவன். தான் மணம் செய்துகொண்டவளைச் சென்று பார்க்க முடியாமல் தந்தை சொல்லுக்குக் கட்டுப்பட்டிருக்கும் கோழை. ஆனால் அந்தக் கோழையையும்தான் அவன் மனைவி மருகி மருகிக் காதலிக்கிறாள்.

சிறுகதையின் பொருள் திருமணத்தின் வாயிலாக உருவான, திருமணத்துக்குப் பிறகான காதல். கூடவே பூப்படைவதற்கு முன்பான பால்ய விவாகம் என்பதால் திருமணத்துக்குப் பிறகு கணவனோடு சென்று வாழ்வதற்காகப் பெண்ணின் காத்திருத்தல். ஆனால், திருமணம் என்பதற்கு அகராதியில், சட்டத்தில், கவிதையில் என்று பல்வேறு அடங்கல்களில் அததற்கான பொருள் இருப்பதுபோல “நடைமுறை உலகத்திலே” ஒரு பொருள் இருக்கிறது என்று கதையின் முதல் பக்கத்திலேயே எழுதுகிறார் கதைசொல்லி. புதுமைப்பித்தனுக்கே ட்ரேட்மார்க்கான எள்ளல் தொனிக்கிறது: “இந்த மகத்தான கலியுகத்திலே, திருமணம் என்றால் குலப்பெருமை கிளத்தும் கலகாரம்பம் என்பது எனக்குத் தெரியும்.” கலகம் ஆரம்பிக்கிறது, சம்பந்தி சண்டை, மரியாதைமட்டு பற்றிய சம்பந்தி ஆதங்கம், இந்தக் குலப் பெருமைப் பேச்சில் சின்னாபின்னமான இளங்குருத்துகள் ருக்மிணியும் சீமாவும்.

உண்மையில் நடந்ததென்னவோ பொம்மைக் கல்யாணம். பெண் குழந்தை வயதுக்குவந்த பின்தான் கணவனோடு சேர முடியும், கணவனது வீட்டுக்கு இடம்பெயர முடியும். ”புஷ்பவதி” ஆகிற தருணம் சீர்வரிசை கேட்டுக் கொள்ளையடிக்க, அற்பப் பெருமை கிளத்த இன்னொரு தருணமாகிறது. எனவே ருக்மிணி பூத்து நின்றும் சீமாவும் அவளும் பார்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. “புஷ்பவதியானதைப் பற்றி” ருக்மிணி தனக்கேன் கடிதம் எழுதவில்லை என்று சீமாவுக்கு ஒரே ஏமாற்றம். ஒருவேளை வேறொருவனைக் காதலிக்கிறாளோ என்ற சந்தேகம்.

இந்த இடத்தில் கதைசொல்லி எனும் தோரணையில் புதுமைப்பித்தன் சமூக சீர்திருத்த ’முற்போக்கு’ எழுத்தாளர்களை ஓர் இடி இடிக்கிறார். கதைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்து நம்மிடம் இப்படிச் சொல்கிறார்: “பொம்மைக் கலியாணம் செய்யப்பட்ட பெண், நாவல் சம்பிரதாயப்படி வேறொருவனைக் காதலித்து… கடைசியாகப் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்து கலியாணம் செய்துகொள்வதுதான் சுவாரஸ்யமான முடிவு. அந்தக் கட்டத்தில்தான் கதாசிரியனும், ‘வாசகர்களே!’ என்று ஆரம்பித்துக் குழந்தைக் கலியாணத்தின் கொடுமைகளைப் பற்றி வியாசம் எழுத முடியும்…”  விதவைத் திருமணம் போன்ற சமூகச் சீர்திருத்தங்கள் குறித்தெல்லாம் புதுமைப்பித்தன் கொண்டிருந்த கருத்துகள் தனிக்கட்டுரைக்குத் தகும். இதன் பொருள் அவர் பிற்போக்குவாதி என்பதல்ல. சமூகச் சீர்திருத்தம் மனங்களின் மாற்றத்தால் வருவது, ட்ரெண்டிங்கில் இருக்கும் உடனடிச் செயல்பாடுகளால் அல்ல என்பதே அவருடைய சில கதைகளிலிருந்து அவர் எண்ணவோட்டமாக வாசகருக்குக் கிடைக்கும் புரிதல்.

ருக்மிணிக்கு வேறொருவனைக் காதலிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. கல்லானாலும் கணவன் என்பது மட்டுமல்ல, கோழையானாலும் காதலன் என்பதையே இந்தக் கதை ருக்மிணியை முன்னிட்டு அழுத்திச் சொல்வது. “பக்தி மட்டுமல்ல,” பாசத்தையும்தான் கோத்து எழுதுகிறார் புதுமைப்பித்தன். சீமாவை ருக்மிணி மனமுருகக் காதலிப்பதால், புதுமைப்பித்தனும் சமூக சீர்திருத்த வியாசத்தை எழுதுவதிலிருந்து தப்பித்துவிடுகிறார். நாமும் அதை வாசிப்பதிலிருந்து தப்பித்துவிடுகிறோம். ஆக, ருக்மிணியின் வாழ்வில் குழந்தைப் பருவத்திலிருந்தே காத்திருத்தல் தொடங்கிவிடுகிறது. பூப்படைந்ததும் அவனுடனான சிறு பருவ விளையாட்டுகள் “ஒன்றுக்குப் பத்தாக” அவள் உள்ளத்தில் மீண்டும் மீண்டும் விளையாடப்படுகின்றன. ஆனால், ஊரிலோ வாழாவெட்டி எனப் பேச்சு. அவள் காத்திருப்பு பற்றிய கதை விவரணை “கூம்பிச் சாம்பிய உள்ளத்தின் உள்ளொளி அவளுடைய துயரம் தேங்கிய கண்களில் பிரதிபலிக்கும்” எனப் போகிறது. அந்த உள்ளொளி அவள் காதலன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

ஆனால், பூப்படைந்த பின் முதன்முறை சீமாவை அவள் பார்க்கும் வரை இருந்த காத்திருத்தலும், அதன் பிறகு ரகசியமாக சந்திக்க வரும் அவனுடனான கனவு போன்ற உடலுறவு நேர்ந்த பின் அவளது காத்திருத்தலும் தாம் எத்தனை வேறுபட்டவை! முக்கியமாக, அவளது உடற்கூறு மாற்றம், விளைவாக ஊராரின் புறங்கூற்று. “நடைமுறை உலகத்திலே” கல்யாணத்தின் பொருள் மட்டும் தனி அர்த்தம் கொள்ளவில்லை; களவொழுக்கம் என்பதன் அர்த்தமும்தான். குலப் பெருமைக்கு மாத்திரமே இடமிருக்கும் அத்தகைய உலகத்தில் மணமான பின்னாலும், உறவுகொள்வது கணவனோடு என்றாலுமே வெளியே யாருக்கும் தெரியாமல் கள்ள உறவு கொள்ள வேண்டிய கட்டாயம். “நெடுவெண் நிலவாக” இல்லாமல் நிலவு மங்கிப்போன சூழல் ரகசிய உடலுறவுக்கு உறுதுணையானது, அதனால் பின்னர் அவளுக்குப் பழிச்சொல் சேர்கிறது. (இந்த உறவு நடக்கும்போது சீமா பள்ளிக்கூட மாணவன் என்றொரு விவரம் கதையில் தரப்படுகிறது, ஆக, சுயவருமானம் சாத்தியமில்லாதவன் என்பதால் இந்தப் பழிச்சொல்லுக்கான பொறுப்பிலிருந்து அவனைக் கதை விலக்கி வைக்கிறது.)

(தமயந்தியின் வனவாசம், ராஜா ரவி வர்மா)

ருக்மிணியின் முதலாவது காத்திருத்தல் முல்லைத் திணையில் தலைவி காத்திருப்பதைப் போன்றது. ரோலான் பார்த் தன் நூலொன்றில் முன்வைக்கும் காத்திருத்தலின் முதல் கட்டத்தை ஒத்தது (பார்க்க: https://perundevi.com/?p=72) பிரிவுத் துன்பத்தைப் பொறுத்தவளாயிருக்கிறாள். ஊர்ப்பேச்சை எதிர்கொண்ட அவளது அடுத்த கட்ட காத்திருத்தலோ, பொறுக்க முடியாத ஆற்றாமைப் பெருக்கு. நெய்தலின் கையறு நிலை கூடிக்கொண்டே போகும் கட்டம். அவள் கடிதங்களுக்கு அவனிடமிருந்து பதிலே இல்லை. அவளுக்கு அவனால் தரப்பட்ட வாக்கு அந்தரத்தில் நிற்கிறது. கடுந்துயரைத் தரும் நிச்சயமின்மை. “மன உளைச்சல்”, “ஹ்ருதய உடைவு”, “நம்பிக்கை இழந்த சோகம்” என்றெல்லாம் அவள் துயரைக் கூறுகிறார் கதைசொல்லி.

இடைச் செருகல்:  ஒரு கேள்வி எழலாம். பொதுவாக, பெரும்பாலும் ஏன் பெண்ணே எப்போதும் காத்திருப்பவளாக இருக்கிறாள்? “வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல் / மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” என்கிற ஸ்டீரியோடைப் கருத்தாக்கத்தை ஒரு பெண் ஏற்பது எப்படி? ஏற்று, எதிர்பாலியலுக்குத் (Heterosexuality) தன்னை ஒப்புக்கொடுத்து, ‘உயிரான ஆடவருக்காகக்’ காத்திருக்கும் சுய அடையாளத்தை ஏன் ஒரு பெண் தேர்ந்தெடுக்க வேண்டும்? பெருமூச்சுதான் இங்கே பதில். எதிர்பாலியல் என்பது சமூகத்தில் மேலாண்மை மிக்க அடிப்படை நியதி. அந்த நியதிக்கேற்ப ஆண்பாலும் பெண்பாலும் தனித்தனி குணாம்சங்களோடு கட்டப்படுவதே நடக்கும். பெண்ணுக்கு ஆண் என்பவன் உயிர், ஆணுக்கு செய்யும் வினையே (செயலே) உயிர் எனும்போது உருவாக்கப்படும் பால்படிநிலையும் இத்தோடு சேர்ந்தியங்குவதே. ஆனால், பார்த் நுட்பமாக வேறொன்றையும் சொல்கிறார். நேசிப்பவரின் இன்மையை யார் எடுத்துரைத்தாலும் அத்தகைய எடுத்துரைப்பின் வாயிலாக அங்கே பெண் தன்மை அறிவிக்கப்படுகிறது எனக் கூறுகிறார் பார்த். அதாவது, காத்திருப்பில் துயருறும் ஓர் ஆண் – ஓர் அற்புதம் நிகழ்ந்ததைப் போல – பெண் தன்மையை அடைகிறான் என்கிறார். காதல் ஆணைப் பெண்ணாக மாற்றும் விதம் இது.பெண் தன்மை இன்னது, ஆண் தன்மை இன்னது என்பது போன்ற பால் சாராம்சக் கருத்தாக்கங்கள் பிரச்னையானவை என்றபோதும் பெண் தன்மை என்ற ஒன்றைக் காத்திருப்பில் ஓர் ஆண் அடைந்துவிட முடியும் என்னும்போது, இந்தத் தன்மைகள் எல்லாமே பால் சார்ந்து இயல்பானவை அல்ல, சாராம்சமானவை அல்ல என்ற வாசிப்புக்கும் இடமிருக்கிறதே. அத்தகைய ஆறுதல் பார்த் முன்வைக்கும் பார்வை வழியாகக் கிடைக்கிறது.

‘ஆண்மை’ சிறுகதையின் கடைசி இரண்டு பக்கங்கள் சித்தப்பிரமையின் அசலான காட்சிச் சித்திரமாகத் தரப்படுகிறது. சீமாவின்பால் அவள் வைத்த காதலில் அவளது காத்திருத்தலில் கிறுக்கச்சியாக அவள் உருவாகிய சித்திரம். “பித்தம்”, “பித்தத்தின் வேகம்.” தாள முடியாத ஆற்றாமையில் அவள் தானற்றுப் போகிறாள். அவள் சுயத்தில் ஊறு ஏற்படுகிறது. அதன் ஓர்மை குலைகிறது. “அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டுவிடுங்கள்!” என்ற வார்த்தைகள் மட்டும்தாம். “ஏகாக்கிரதையான அதே புலம்பலுடன் சென்றாள்” என்கிறது கதை. அவளைச் சீமா பார்க்கிறான். அவனிடமும் அவள் சொல்வது அதே வார்த்தைகள்தாம். “அதே தொனிப்பு”தான். “கண்களில் அவனைக் கண்டுகொண்டதாகக் குறிகள் ஒன்றும் தெரியவில்லை” என்கிறது கதை.

இந்த வரிகளை பார்த் முன்வைக்கும் காத்திருத்தலின் மூன்றாவது கட்டம் குறித்த சொல்லாடலோடு இணைத்துப் பார்க்க முடிகிறது. அவர் இந்தக் கட்டத்தை “delirium” என்றே அழைக்கிறார். ஏற்கெனவே நான் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப் போல், நீண்ட காத்திருத்தலில் காத்திருக்கும் காதலர் இந்தக் கட்டத்தில் சித்தப்பிரமையுற்றவராகவும் மாறலாம். ஏனெனில் இந்த மூன்றாவது கட்டத்தில் காத்திருப்பவர் மீது நேசிப்பவர் வந்து சேராதது பாறைபோல வீழ்கிறது.  நேசிக்கும் மற்றமையின் இன்மை, காத்திருப்பவரை யதார்த்தத்திலிருந்து விலக்கி வைக்கவும் கூடியது.  ஒரு சிசு தனக்கு அறிமுகமான முதற்பொருளான தாயின் முலையைத் திரும்பத் திரும்ப நினைவில் உருவாக்கிக்கொள்ளும் கணத்துக்கு ஒப்பானது இந்த மூன்றாவது கட்டம் என எழுதுகிறார் பார்த்.  தாய் என்ற உருவத்தை, முலையாக மாத்திரமே தன் உணர்வை முன்னிட்டு, தன் அத்தியாவசியத் தேவையை முன்னிட்டு, மீண்டும் மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் கணம் போன்றது அது. அந்தக் கணத்தில் காத்திருப்பவர் மனதில் நேசிப்பவருக்குப் பதிலாக அவருடைய பிம்பமே முழுக்க முழுக்க வியாபித்துவிடுகிறது. இப்போது நேசிப்பவர் அங்கே வருவாரானால், அதாவது அவருடைய பிரசன்னம் ஒருவேளை நிஜமாகவே நிகழுமானால், காத்திருப்பவரிடம் உருவாகியிருக்கும் பிம்பத்தை நிஜமான பிரசன்னம் குலைத்துவிடும். அத்தகைய நிஜமான பிரசன்னத்தால் காத்திருப்பவரின் delirium கலைகிறது என்பதால் ஒரு வகையில் காத்திருப்பவருக்கு தொந்தரவு தருவதாக நிஜமான பிரசன்னம் ஆகிறது. பார்த் குறிப்பிடுவதைப் போல, அத்தகைய மயக்கம் நிறைந்த கணத்தில் நேசிப்பவரின் நிஜமான இருப்பை உணரவோ, அல்லது அவரது குரலை அடையாளங்காணவோ, காத்திருப்பவருக்கு சற்று நேரம் பிடிக்கலாம். காத்திருப்பவரின் மனதில் உண்டான மயக்க வெளிக்கு சம்பந்தமே இல்லாதவராக, அவர் மனத்துக்கு வெளியே நேசிப்பவர் நிற்கிறார். .

’ஆண்மை’யில் ருக்மிணியின் காத்திருத்தலில் விளைந்த அதிமயக்கம், பிரமையேறிய பித்துநிலையாக மாறிவிடுகிறது. அத்தகைய நிலையில் சீமாவின் பிம்பம் வலு மிக்கதாகி நிஜமான அவனைப் பதிலீடு செய்துவிடுகிறது. சீமாவின் நிஜமான பிரசன்னம் ருக்மிணியின் அதிமயக்கத்தில், பிரமையில் எந்த இடையீட்டையும் செய்ய முடியவில்லை. யதார்த்தத்தில் அவளால் அவன் இனி அங்கீகரிக்கப்படுவது கடினமே. ஏனெனில் அவனது யதார்த்த இருப்பு அவள் மன ஓட்டத்தில் மறுக்கப்பட்டுவிட்டது. அவ்வகையில் அவன் இறந்துபோனவன்.

‘ஆண்மை’ சிறுகதையை அணுக்கமாக வாசிக்கும்போது, ருக்மிணியின் சித்தப்பிரமையை மட்டுமல்ல, அவளைப் பொறுத்து நேசித்தவன் மறைந்துவிட்டதையும் நாம் உணர்வில் கொள்கிறோம். சித்தம் பேதலித்தவளுக்காகச் சில சம்பிரதாய வார்த்தைகளைச் சொல்லிவிட்டு உச்சுக்கொட்டிவிட்டு நகர்ந்துவிட முடியாது.  தன்னை ஒப்புக்கொடுத்து, சுயமும் ஓர்மையும் ஊறுபட்ட நிலையை அடைந்திருப்பதாலேயே, ருக்மிணியின் கதாபாத்திரம் நம்மைத் துணுக்குறச் செய்கிறது. காத்திருத்தல் என்பது ஆண், பெண் என்கிற பாலினப் பேதம் பார்க்காமல் பெண் தன்மை ஒன்றைக் கட்டமைக்கிறது என்றால், ஊறுபடத் தயாராக இருப்பதுதான் அதன் உள் சட்டகம். அபரிதமான நேசத்தில், தொடர்ந்த காத்திருத்தலின்போது, காதலித்தவரின் இன்மையின் கனம் கூடும்போது, சித்தம் பேதலிக்கும் அபாயமுண்டு என்றாலும் அதற்கு முகம்கொடுப்பதுதான் அத்தகைய பெண் தன்மையின் வெற்றி, அதுவே பெண் தன்மையைத் தன் சொரூபமாகக் கொள்ளும் காதலின் வெற்றி.  இத்தகைய பெண் தன்மை ஆண்களுக்கும் அமையலாம். தற்காலிகமாகவேனும் சித்தம் பேதலிக்கலாம். சீதையின் பிரிவினில் இராமன் அடைந்த ”மத்துறு தயிரென வந்து சென்றிடை தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும் பித்த” நிலை ஒரு காவிய உதாரணம்.

காத்திருத்தலின் மூன்று கட்டங்களின் உணர்வுக் கொந்தளிப்புகளைக் கடக்க வழியே இல்லையா, சமயத்தில் பித்துநிலைக்கும் இட்டுச்செல்லக்கூடிய காத்திருத்தலின் கணங்களைத் தவிர்க்க முடியாதா எனக் கேள்விகள் வரலாம். சில பிரகிருதிகளால் முடியும் என்பதுபோல முடிகிறது லா.ச.ராமாமிருதத்தின் ஒரு கதை (“தரிசனம்”). இந்தக் கதைப் பகுதியைக் கீழே தருகிறேன்.

“உமையைப் பிரிந்த சிவம் அங்கு இமயமலைச் சிகரத்தில் தவமிருக்கிறான்.

இங்கு தென்கோடியில் அவனை அடைய இவள் தவம் கிடக்கிறாள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். யார் முன்னால் தணிவது என்று இருவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

காத்திருப்பது என்றால் என்ன?

இங்கு இத்தனை அழகும், அங்கு அத்தனை சௌகரியமும் ஒன்றுடன் ஒன்று ஒன்றா ஏங்கி, வரட்டு காலத்தில் வியர்த்தமாகப் போவதுதானா?

வீம்புத் தவம், வீண் தவத்தில் ஒருவருக்கொருவர் ஏன் அரண் கட்டிக்கொண்டேயிருக்கிறீர்கள்?

ஏன்?”

கடவுளர்களைப் பார்த்துக் கேட்க வேண்டிய சரியான கேள்விதான் இது. ஆனால், அவர்களிடம் பதில் இருக்காது. ஏனெனில், காதலின் ஆக அடிப்படை, ஊறுபட, காயமடைய, தன்னை ஒப்புக்கொடுக்கும் தன்மை, தங்களைச் சுற்றி அரண் கட்டிக்கொள்ளாதிருக்கும் தன்மை. அப்படியான ஊறுபடக்கூடிய தன்மை அவர்களிடம் கிடையாது. ஏனெனில் அவர்கள் கடவுளர்கள், மனிதர்கள் அல்லர்.

நூல் மற்றும் கட்டுரைத் தரவுகள்

குறுந்தொகை. மூலமும் உரையும். பதிப்பாசிரியர் பேரா.மு.சண்முகம் பிள்ளை. தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், 1985.

புதுமைப்பித்தன். “ஆண்மை.” மணிக்கொடி, 18/11/1934, புதுமைப்பித்தன் கதைகள், பதிப்பாசிரியர் ஆ. இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம், 2000.

பெருந்தேவி. “காத்திருத்தல் எனும் துக்கம், துக்கம் தவிர்த்தல்,” காலச்சுவடு 83, நவம்பர், 2006.

லா.ச. ராமாமிருதம். “தரிசனம்,” பச்சைக்கனவு, நற்றிணை பதிப்பகம், 2015.

Barthes, Roland. A Lover’s Discourse: Fragments. Trans. Richard Howard. New York: Farrar, Straus and Giroux, 1978

பின் குறிப்பு: என் கட்டுரை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘புதுமைப்பித்தன் கதைகள்’ முழுத் தொகுப்பை (2000) அடிப்படையாகக் கொண்டது. அதில் பதிப்பாசிரியர் (ஆ.இரா.வேங்கடாசலபதி) தந்திருக்கிற மூன்றாவது பின்னிணைப்பில் (“புதுமைப்பித்தன் கதைகள்: வெளியீட்டு விவரங்களும் பாட வேறுபாடுகளும்”) இந்தச் சிறுகதையின் மூலபாடமாக ”புதுமைப்பித்தன் கதைகள்” (நவுயுகப் பிரசுராலயம், 1940) தரப்பட்டிருக்கிறது. பதிப்பாசிரியர் குறிப்பு ஒரு முக்கியத் தகவலைத் தருகிறது. இந்தக் கதை மூலபாடத்தில் “எனக்கு அது தெரியாது” என்ற வாக்கியத்தோடு முடிகிறது. (கதை வெளிவந்த மணிக்கொடி இதழிலும் (18.11.1934) இப்படி முடிவதாகத்தான் தெரிகிறது) ஆகவே, காலச்சுவடு வெளியீட்டிலும் இந்த வாக்கியத்தோடுதான் கதை முடிகிறது.

ஆனால், 1947இல் வெளிவந்த ‘ஆண்மை’ தொகுப்பில் (தமிழ்ப் புத்தகாலயம், 1947) “ஆனால் சீமா பரமேச்வரய்யரிடமும் உலகத்தினர் முன்பும் ஆண்மையுடன் நடந்துகொண்டான்” என்ற ஓர் இறுதி வரி சேர்க்கப்பட்டிருப்பதைப் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார்.

(மின்னம்பலம் மின்னிதழில் வெளிவந்த கட்டுரை திருத்தப்பட்டு மறுவரைவு செய்யப்பட்டிருக்கிறது.)