தென்னிந்தியப் பகுதியில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் பசவண்ணரின் சைவ பக்தி இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவருமான அக்கமகாதேவி அவரது செறிவான, அழகியல்கூடிய வசனங்களுக்காக அறியப்பட்டவர் (1). அதே நேரத்தில் ஒரு பெண்ணாக கடுமையான, இன்றுவரையிலும்கூட மாறாதிருக்கும் ஆண்மையச் சமூகச் சூழலுக்குத் தன்னை ஒப்புத்தராமல் வாழ்ந்தவர். திசைகளையே ஆடையாக அணியத்துணிந்ததால் வந்த இன்னல்களை துணிச்சலோடும் விவேகத்தோடும் பக்தியின் வாயிலாக அல்லது பக்தியின் பெயரால் எதிர்கொண்டவர் அக்கமகாதேவி. தமிழ்ப் பண்பாட்டுச் சமயச் சூழலில் அவர் முன்வைக்கப்படுகிற விதத்தை இக்கட்டுரை அணுகுகிறது
இதன் பொருட்டு இக்கட்டுரை ஒரு தமிழ் நாடக ஆக்கத்தையும் அக்கமகாதேவி பற்றிய சில புராண, வரலாற்றுத் தகவல்களையும் கதையாடல்களையும் பரிசீலிக்கிறது. நெத்தினாங்குப்பம் கம்மவார் ஆ. கேசவநாயகர் இயற்றிய ‘பிரபுலிங்கலீளை என்னும் அக்குமாதேவி சரித்திர நாடகம்’ என்ற தலைப்பிலான நூல் ஒன்று சி.சொக்கலிங்கப்பிள்ளை அவர்களால் பார்வையிடப்பட்டு, மயிலை சி. இரத்தினமுதலியார் அண்டு பிரதர்ஸ் அவர்களால் 1924இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடகம் அந்நாளில் அரங்கேற்றப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் அக்கமகாதேவியின் வரலாற்றைக் கூறுகிற போக்கில், சமணத்துக்கும் சைவத்துக்கும் இடையிலான சச்சரவை இந்நாடகம் சற்றே கொச்சையாக முன்வைக்கிறது. ’பிரபுலிங்கலீலை’ என்றொரு நூல் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகளால் இயற்றப்பட்டிருக்கிறது. இருபத்தைந்து ‘கதி’களைக் கொண்ட இந்த நூலில், முதல் பத்து ‘கதி’களில் மாயை, விமலை, பிரபுதேவர் (அல்லம பிரபு) ஆகியோர் பற்றி பேசப்படுகிறது. நூலின் ஒன்பதாம், பத்தாம் ‘கதி’கள் ‘அக்கமாதேவியுற்பத்தி கதி’, ‘அக்கமாதேவி துறவு கதி’ ஆகியவை. சிவப்பிரகாச சுவாமிகளின் நூலுக்கும் அக்குமாதேவி சரித்திர நாடகத்துக்குமான சொல்லாடல் வேறுபாடுகள் ஒரு தனிக்கட்டுரையாகத் தக்கவை. இங்கே ஒருசில இடங்களில் மட்டும் சிவப்பிரகாசசுவாமிகளின் நூல்பகுதிகளைச் சுட்டிச் செல்கிறேன்.
சில அடிப்படைத் தகவல்கள் முதலில். பசவண்ணர், அல்லம பிரபு போன்ற பிற முக்கியமான சரணர்களைப் போலவே அக்கமகாதேவி குறித்த உறுதியான வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருக்கும் தரவுகளும் புராண, கற்பனைக் கூறுகள் கலந்திருப்பதாகவே உள்ளன. என்றாலும் ஒரு வரலாற்றுப் பாத்திரத்தின் சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பைப் பற்றிய புரிதலில் இந்தக் கூறுகளின் பங்களிப்பை நாம் மறுத்துவிடமுடியாது. அக்கமகாதேவியின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் பொறுத்தவரை பெரிதும் நம்பத்தகுந்ததாகக் கருதப்படும் பதின்மூன்றாம் நூற்றாண்டு கன்னட நூல்களான பிரபுதேவர ரகலை, மகாதேவியக்காகலே ரகலை போன்ற நூல்களோடு கூடவே பதினைந்தாம் நூற்றாண்டு நூல்களான சூன்ய சம்பாதனை, பிரபுலிங்க லீலை உள்ளிட்டவையும் தகவல்களுக்காகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. (சாமராசரின் பிரபுலிங்க லீலையின் மொழிபெயர்ப்பாக்கமாகவே சிவப்பிரகாசசுவாமிகளின் தமிழ்நூல் கருதப்படுகிறது.) வசனங்களைப் பொறுத்தவரை, அக்கமகாதேவி உள்ளிட்ட படைப்பாளிகள்-சரணர்களின் வசனங்கள் வாய்மொழிமரபாகவே கிடைத்திருக்கின்றன. வசனங்களைச் சேகரித்து தொகுத்தவர்கள் இயற்றியவர்களாக அன்றி பக்தர்களாகவே இருந்ததால் பின்னர் பதினைந்தாம் நூற்றாண்டில் பல பாடவேத வடிவங்களில்தாம் அவை கிடைக்கப்பெற்றன என எம்.எம். கல்புர்கி கருதுவது குறிப்பிடத்தக்கது (முகுந்தராவ்).
ஷிமோகா மாவட்டத்தில் உதுத்தடி என்ற ஊரில் 1130-1150 CE ஆண்டுப்பகுதியில் சிவபக்தர்களான நிர்மல ஷெட்டிக்கும் சுமதிக்கும் பிறந்த அக்கமகாதேவி சிறுவயதிலிருந்தே சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பிறந்த ஊரில் கோயில் கொண்ட சென்னமல்லிகார்ச்சுனன் என்ற பெயரிலான சிவனிடம் ஈர்ப்பும் பக்தியும் கொண்டு அவனைக் கணவனாகவே மனதில் தரித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு குருவும் அவருக்கு இருந்திருக்கிறார். சிவனோடு கூடலைக் கற்பனை செய்த களிப்பும் எதிர்பார்ப்பும், சிவனைப் பிரிந்திருத்தல் தரும் துயரமும் அவநம்பிக்கைத் துவளலும் கூடிய வசனங்கள் அக்கமகாதேவியுடையவை. இறைவன் மேல் கொண்ட காதலால், தன் ஒவ்வொரு வசனத்திலும் ‘சென்னமல்லிகார்ச்சுனனை’ கவிமுத்திரையாகப் பதித்திருப்பவர் அக்கா. ’சென்ன’ என்பது அழகையும் ’மல்லிகை’ மல்லிகைப் பூவையும் குறிப்பது. ’ஒளிமிகுந்த’ என்பதைக் குறிக்கும் அர்ச்சுனன் என்கிற பதத்தின் பயன்பாடு மகாபாரதத்தில் பாண்டவ வீரனான அர்ச்சுனனைக் குறிப்பதும் ஆகும் (வினய சைதன்யா, முன்னுரை). மீராவிடமும் ஆண்டாளிடமும் காணக்கூடிய, இறைவனையே மணாளனாக எண்ணும் பாங்கை, அக்கமகாதேவியின் வசனங்களிலும் நாம் காணமுடியும். ‘மானுடர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்’ என்ற ஆண்டாள் கூறியதைப் போல மானிட ஆண்களன்றி சென்னமல்லிகார்ச்சுனனே தனக்குப் பொருத்தம் எனும் அறிவிப்பையும் அக்கமகாதேவியின் வசனங்களில் நாம் பார்க்கிறோம். அவரது ஒரு வசனம் இவ்வாறு முடிகிறது:
“சென்னமல்லிகார்ச்சுனனைத் தவிர
வேறெந்த ஆண்களும் நமக்குப் பொருந்த
மாட்டார்கள், சகோதரனே!”
அக்கமகாதேவியின் முழு வாழ்க்கை வரலாற்றைப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அவர் வாழ்க்கையில் ஆண்கள் சம்பந்தப்பட்ட இரு முக்கியமான கட்டங்களை மட்டும் பார்த்துவிட்டு நாடகத்துக்கு நகரலாம். ஒன்று, கௌசிக மன்னனை அவர் எதிர்கொண்ட விதம், மன்னனோடு அவருக்கிருந்த உறவு. அவருக்கும் கௌசிக மன்னனுக்கும் திருமணம் நடந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இன்றளவும் அத்தகவல் குறித்த சர்ச்சை தொடர்கிறது. ஆனால் கௌசிக மன்னன் அவரிடம் கொண்டிருந்த ஒருதலைக்காதலும் மன்னன் சமண சமயத்தைச் சேர்ந்தவன் என்பதும் நமக்குத் தெரிகிறது. தன்னை விரும்பிய மன்னனை மணக்க சில நிபந்தனைகளை விதிக்கிறார் அக்கமகாதேவி. தனக்கு உகந்தபடி சிவனை தியானம் செய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்வதையும் சிவ வழிபாட்டாளர்களோடு நேரம் கழிப்பதையும் தன் குருவுக்கு சேவை செய்ய நேரத்தைச் செலவிடுவதையும் ஒருபோதும் மன்னன் தடுக்கக்கூடாது என்பவையே அவை (சைதன்யா, முன்னுரை). அவற்றை மன்னன் மீறியதால் தன் அணிகளையும் உடுத்தியிருந்த ஆடையையும் களைந்து, தன் கூந்தலையே ஆடையாக மூடிக்கொண்டு துறவுக் கோலத்தில் கௌசிகனைவிட்டு நீங்குகிறார் (சைதன்யா, முன்னுரை; முகுந்தராவ்) (2).
இரண்டாவது, அல்லமரோடு அவருக்கு நேர்ந்த சந்திப்பு, அக்கமகாதேவி கல்யாணா நகரத்தில் ’அனுபவ மண்டபத்தில்’ அல்லம பிரபு உள்ளிட்ட சரணர்களை சந்திக்கிறார், அங்கே அவரை அவர்கள் கேள்விகளாலும் தங்கள் செய்கைகளாலும் சோதிக்கிறார்கள் (முகுந்தராவ்). அவர் அந்த சோதனைகளை வெற்றிகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெற்றபின், ஆந்திரப்பகுதியில் ஸ்ரீசைலத்தை நோக்கிச் செல்கிறார். ஸ்ரீசைலத்தில் ஒரு வாழைத் தோப்புக்குள் சென்ற அவர் அதன்பின் காணவில்லை என்று சொல்லப்படுகிறது (சைதன்யா, முன்னுரை). குகையில் தங்கி வாழ்ந்த அவருக்கு அங்கேயே முக்தி கிடைத்ததாக ஸ்ரீசைலம் சென்றபோது நான் கேள்வியுற்றேன். ‘அக்கமகாதேவி குகைகள்’ என வழங்கப்படும் குகைகள் ஸ்ரீசைலத்தில் இருக்கின்றன.
’அக்குமாதேவி சரித்திர நாடகத்தில்’ அல்லமா பிரபு அல்லது அல்லம தேவருக்கு தரப்படுகிற முக்கியத்துவம் அக்கமகாதேவிக்குத் தரப்படவில்லை. அல்லம தேவர் சிவனின் அவதாரமாகவே நாடகத்தில் வருகிறார். நாடகத்தை விரிவாகவே அறிமுகப்படுத்த நினைக்கிறேன். மமகாரமகாரஜன் என்ற மன்னன், தன் மனைவி நங்கை மோகினியோடு ஈசனை நோக்கி குழந்தைப்பேற்றுக்காகத் துதிப்பதில் தொடங்குகிறது. அதன்பின் ஈசனுக்கும் பார்வதிக்கும் ஒரு விவாதம் நடக்கிறது. தன்னை நோக்கி தவம் செய்யும் மன்னனைக் காண ஈசன் புறப்படுகிறான். ஆனால் பார்வதிக்கு ”சரசமாக விளையாட” மனம் செல்கிறது. தொடர்ந்து, ஈசனை “சுகம் தர அழைக்க,” “கெட்ட எண்ணம் கொள்ளாதே” என ஈசனும் தடுக்க, வாக்குவாதம் வலுக்கிறது. “பருந்தைக் கண்டதும் காக்கை பயப்படுவது போல / தெரிந்தே பாசவலையில் சீக்கிரம் கட்டுவேன்” எனப் பார்வதி சூளுரைக்க, ஈசன் மறைந்துவிடுகிறான். மறைகிற ஈசன் அல்லம தேவன் எனும் நட்டுவனாகப் பூமியில் தோன்றுகிறான்.
மறைந்த ஈசனைக் கண்டுபிடிக்க முனையும் பார்வதிக்கு நந்திதேவன் “தாமதம் றாக்ஷதம் சாத்மீகம்” என்ற மூன்று குணங்கள் ஒவ்வொன்றையும் பெண்ணாக அனுப்பி ஈசனைத் தேட அனுப்பச் சொல்கிறான். அவ்விதம், தவம் செய்துகொண்டிருக்கும் மமகார மகாராஜனுக்கும் நங்கை மோகினிக்கும், தாமத குணம் மாயை எனும் பெண்ணாகப் பிறக்கிறது. மாயை சிவபக்தியோடு வளர்ந்து, இல்வாழ்க்கையை மறுத்து, சிவாலயத்தில் தொண்டுசெய்யும்போது, அல்லம தேவர் நட்டுவனாராக அங்கே தோன்றுகிறார். “பேதகங்கொண்டதினாலே உமையாள் தன்னை / பாதகங் கண்டதினாலே / நானே ஈசனுருவை தானே மறைத்துவிட்டு / நட்டவரூபமாகினேன் உமையாளுக்கே / திட்டவடிவ மாகினேன்” எனக் கதாபாத்திரத்தின் கூற்றாக வருகிறது. மாயை மதிகேசர் எனும் ஈசன் முன் “நிர்த்தனஞ் செய்யும்போது” அல்லம தேவர் மிருதங்கம் கொட்டிக்கொண்டு வர, அவன்மேல் இச்சையுறுகிறாள் மாயை. மாயையிடமிருந்து நகர முயலும் அல்லம தேவரை தன்னிடம் மிருதங்கம் கொட்டிக்கொண்டு இருக்கச் சொல்லி மாயை கேட்கிறாள். தாம்பூலம் கொடுக்கச் சொல்லியும், “தினபரியந்தம்” வரும்போது “கூடுவாய்” என்று கேளாதிருக்கச் சொல்லியும் அல்லம தேவர் கேட்க, மாயை சம்மதிக்கிறாள்.
ஒருநாள் அல்லம தேவரான ஈசன் வராமல் “வேண்டுமென்று” வராமல் மாயையை பரிதவிக்கவிட்டுப் பிறகு வரும்போது, மாயை தன் ஆசையை அவரிடம் வெளிப்படுத்த, அல்லம தேவர் அதை ஏற்காமல் நகரப் பார்க்கிறார். அப்போது இருவருக்குமிடையே வாதம் நடக்கிறது (3). வாதத்தின் முடிவில் அல்லம தேவர் மீண்டும் மறைகிறார். அவர் மறைந்ததால், பூமியில் மாயை வருந்தியிருக்க, பார்வதி இராஜத குணத்தை விமலை என்ற பெண்ணாகச் செய்து அனுப்புகிறாள். பூமிக்கு வரும் விமலையும் மாயையும் சேர்ந்து ஈசனைத் தேடுகிறார்கள். நட்டுவனார் மீண்டும் அவர்கள் முன் தென்பட,, விமலையும் அவரைப் பார்த்து மோகிக்கிறாள். அவர் வடதேசம் நோக்கி ஓட, இருவரும் அவரைத் துரத்துகிறார்கள். பின்னர், விமலையும் மாயையும் வடகாசிக்கு அருகில் உள்ள கொக்கியர் மடத்தில் பாகவதராய் உருமாறியிருக்கும் அல்லம தேவரைக் கண்டுபிடிக்கிறார்கள். திரும்பவும் அவர்களிடமிருந்து ’தப்பித்து’ இன்னும் வடக்கே கோமளராஜன் பட்டணத்தருகில் “முத்தாயம்மாள் மடத்துக்கு” அல்லம தேவர் செல்கிறார்.
இப்போது பார்வதி ஈசனைத் தேடும் வகையில் மூன்றாவது குணமான “சாத்மீக” (சாத்வீக) குணத்தை கோமளராஜன் பட்டணத்தில் பிறக்கும் வண்ணம் அனுப்புகிறாள். “பிராமண ஜாதியில்” நிர்மலனுக்கும் சுமதி அம்மாளுக்கும், ”அக்குமாதேவியாக” அந்தக் குணம் பிறப்பு கொள்கிறது. ஈசனிடம் பக்தி கொள்ளும் அந்தப் பெண்ணின் கூற்று இது: “நாமென்னா பிராமணகுலத்தி லவதரித்து நாலுவேதம் ஆறு சாஸ்திரம் மனுவிக்ஞான முதலிய சகலகலையுங் கற் றுணர்ந்து தாய்தந்தையைவிட்டு இல்வாழ்க்கையை வெறுத்து காவிகமண்டல ருத்திராக்ஷம்பூண்டு எங்குந்தேடி ஈசனைக்காணாமல் இவ்வசுவேசர் ஆலயத்தைநாடி பரம்பொருளாகிய ஈசனைக்காணவேண்டி வந்திருக்கின்றேன் கிருபைபுரிவாய் ஜகதீசா.”
கோமளராஜன் பட்டணத்திலிருந்து வசுவேசர் ஆலயத்தில் அக்கமகாதேவி பூஜை செய்துவரும்போது கல்யாணபுரத்தைச் சேர்ந்த சமணராஜனும் இன்னும் சில சமணராஜர்களும் அங்கே “மமதையோடு” வருவதாக நாடகம் கூறுகிறது. இதன்பின்னர் நாடகம் கடுமையான சமண வெறுப்பைப் பேசுவதாக உள்ளது. சமணர்கள் “பல்லைத்துலக்கமாட்டமே பரதேசி வந்தால் / பார்த்து உதைப்போம்” என்றெல்லாம் கூறியபடி “அதிக கோரமாக” ஈச்சம்பாய்களை ஆடைகளாக அணிந்துகொண்டு வருகிறார்கள். சமணர்கள் அக்கமகாதேவி மீது ஆசைப்படுகிறார்கள். அத்தகைய ஆசை “பாவமென்று” அக்கமகாதேவி கூற, “கோபமும்வந்தாலே கொலைகளும்செய்வோமே” என்று பேசுகிறார்கள். “பாரடி,” “சேரடி” என “அடி” போட்டு அவர்கள் பேசுவதாக நாடகம் காட்டுகிறது. அதை எதிர்க்கிற அக்கமகாதேவியின் “மண்டையையுடைத்திடுவோம்” என்கிறார்கள். அக்கமகாதேவியை அவர்கள் கும்பலாகத் துரத்துவதாகக் காட்டப்படுகிறது. ஒரு கட்டத்தில் சமணர்களுக்கும் அக்காவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. “மலஜலசுத்தமுமில்லை துர்க்கந்த / மர்மத்தைக்கழித்திடுங்கள் தொல்லை / கலமறிவில்லாத கசடரே” எனச் சாடுகிறார் அக்கமகாதேவி. அவர்களைப் “பல்லை விளக்கச்” சொல்கிறார், சமணர்கள் அருகனுக்காகாது என்கிறார்கள். இந்தக்கோலத்தில் இருந்தால் வரமாட்டேன் என்றவுடன் பல்லை விளக்குவதாகக் கூறுகிறார்கள். சமணர்களைக் குளிக்கச் சொல்கிறார். குளித்தால் “அழுக்கு போகும்,” “சலமது குளிருமே” என்று சமணர்கள் தயங்குகிறார்கள். இல்லாவிட்டால் தான் நிற்கமாட்டேன் என அக்கமகாதேவி கூறுவதால் குளிக்கச் சம்மதிக்கிறார்கள். இதேபோல, துணி துவைக்க, பூசை விபூதியை அணியக் கேட்கிறார் அக்கமகாதேவி. அந்தக் கோரிக்கைக்ளுக்கு அவர்கள் பணிகிறார்கள்.
இவ்விதமாக சமணர்களை “சைவபதமாக்கி விபூதிருத்திராக்ஷம்தரித்து சிவபஞ்சாக்ஷரம் உச்சரிக்கச்செய்த” அக்கமாகாதேவி, மற்ற இரண்டு குணங்களையும் சேர்த்துக்கொண்டு “அகோரரூபம்” எடுக்கிறார். அந்த அகோர ரூபத்தில் அக்கமகாதேவி கூறுவதாக இது:
ஆரடா சமணர்களே – இங்கே – அக்குமாதேவியென்று வந்தீரோ – பாரடா நான் அவள்தான் – உங்களைப்பழிக்கு பழிவாங்க – பார்க்கிறேன்பார்-கூரடாஎனக்குப்பதில் – இப்போகொலைசெய்வேன் உங்களைஓடாதீர் – சீரடாசைவமொன்றே – சீக்கிரத்தில்சிவசிவா என்றிடுங்கள் – பேரடாகேட்டீர்களா – இப்போபேசுங்கள் லிங்கபூசைசெய்வோமென்று – தூறடாஅருகனையும் – தொழுகாதே எப்போதும் மடையர்களே – ஏறடாஉங்களாலயத்தில் அருகனை – இடித்துநிறவியே போட்டிடுங்கள் – ஆரடாஎன்றுஎன்னை – அணைந்திடவாவென்று அழைத்தீர்களே சாரடாஎன்சிவனை – நீங்கள் – சாராவிட்டால் உங்களை கொலைகள்செய்வேன் – நீரடாபஞ்சாக்ஷரம் – அதைநெற்றியில் இட்டிடுங்கள்மூடர்களே – வீரிடஓடாதீர் – தேவி – விடுவேனோதான் உங்களை சமணர்களே – தந்தினதனதனனம்
இதைக் கேட்ட சமணர்கள் வீரசைவமே மெய்ச்சமயம் என அறிந்துகொண்டதாகக் கூறி பயமுறுத்த வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறார்கள். அக்கமகாதேவி சமணர்களை வீரசைவத்தைத் தழுவி முக்தியடையச் சொல்கிறார்.
நாடக இறுதியில் பொதுவசனமாக வசுவண்ணராய் (பசவண்ணர்) அவதரித்த நந்திதேவருக்கும் அக்கமகாதேவி முதலானவர்களுக்கும் சமணத்திலிருந்து வீரசைவத்தைத் தழுவிய சமணர்களுக்கும் பரம்பொருளுணர்த்திவிட்டு முக்தியடைந்து கைலாயம் அடைகிறார் அல்லம தேவர். இந்தப் ”பிரபுலிங்க லீலையை” ஈசன் சொல்ல உமை கேட்டுத் துதிப்பதாக, தேவர்கள் மகிழ்வதாக நாடகம் முடிகிறது.
இந்த நாடகத்தில் அக்கமகாதேவிக்கும் சமண ராஜர்களுக்கும் நடக்கும் போராட்டத்தில் கௌசிக மன்னன் என்ற பெயர் கூறப்படுவதேயில்லை. மாறாக, கன்னட மூலத்திலிருந்து வந்திருக்கும் பிரபுலிங்கலீலை நூலில் மன்னனின் பெயர் சுட்டப்படுகிறது. பிரபுலிங்கலீலையில். சமண மன்னன் கௌசிகன் உலா வருகையில் அக்காவைப் பார்த்து மையலுறுகிறான். முறைப்படி பெண் கேட்டு அவள் தந்தைக்கு தூது அனுப்புகிறான். தந்தை நிர்மலன் முதலில் மறுத்து பின் மகளிடம் கேட்கச் சொல்ல, அக்கமகாதேவி மன்னனிடம் ஒரு சபதம் செய்யக் கேட்கிறார். “வலிந்து புல்லாதிருத்தல்” என்பதே அது. அதை ஏற்கும் மன்னன் பல்வேறு உவமானங்களைக் காட்டி (கன்றுக்குத் தராமல் பால் கறத்தல், மனம் கலந்தவர்களைப் பிரித்துக் கலகம் செய்தல், அடைக்கலம் கோரி வந்தவர்க்கு அடைக்கலம் தராதிருத்தல் என்பவை போல), தான் சபதத்தை மீறினால் அத்தகைய பாவத்துக்கு ஒப்பாகும் என்பதுபோல கூறுகிறான். அக்கமகாதேவி சொல்வதைத் தான் செய்யாமல் புணரமாட்டேன் என்றுரைக்கிறான். அதை ஏற்று, அவனோடு அக்கமகாதேவி அரண்மனைக்குப் போகிறார். திருமணத்தைப் பற்றி தெளிவான குறிப்பில்லை. அரண்மனையில் என்ன செய்யவேண்டும் என்று மன்னன் கேட்க, அவன் சோதிமகாலிங்கத்தை உள்ளங்கையில் வைத்து பூஜிக்க வேண்டும் என்கிறார் அக்கமகாதேவி. தான் சிவபூஜை செய்யத்தகாது என்று மன்னன் கூறுவதால், ”இல்லறத்தை நீத்து” அல்லமனைத் தேடிப் போகிறார் அக்கமகாதேவி. அப்போது, ஆபரணங்களை நீக்கிவிட்டு, உடுத்தியிருந்த வஸ்திரத்தை அகற்றி, கூந்தலை அவிழ்த்து உடல் மறையவிட்டு, உள்ளங்கையில் சிவலிங்கத்தை ஏந்தியபடி அங்கிருந்து நீங்கிச் செல்கிறார். மருள் பிடித்துவிட்டதோ என மன்னன் திகைக்கிறான். விஷயம் தெரிந்து வந்து தந்தையும் தாயும் மகள் பின்னால் சென்று விசனப்பட, தான் சத்குருநாதனைத் (அல்லம தேவர்) தேடிச் செல்வதாகக் கூறுகிறார் அக்கமகாதேவி. “கண்டவரெல்லாம் நெஞ்சங் கரைந்துகக் கண்ணீர் மல்க” “பேய்க்கோலம் பெற்று” அவர் போவதை எண்ணி மருகவதாக பிரபுலிங்கலீலை கூறுகிறது. காரைக்கால் அம்மையாரின் பாதிப்பு இந்த விவரிப்பில் தெரிகிறது. நூலின் ’கதலிவன கதியில்’ கல்யாணபுரியில், அக்கமகாதேவி “வெற்றரையாய்” அல்லமரைச் சந்திக்கிறார். வீடடைய முனைவதில் ஆணென்றும் பெண்ணென்றும் பேதமுண்டோ என ஞானத்துக்குரியவர் அவர் என அல்லமர் சிலாகிக்கிறார். பிறகு அங்கிருந்து விடைபெற்று ஸ்ரீசைல மலையில் கதலி வனத்தில் சென்றிருக்கிறார்.
‘அக்குமாதேவி’ நாடகத்தில், கௌசிக மன்னன் என்ற தனியொரு சமணனின் காதல் சொல்லப்படுவதில்லை; சமண ராஜர்கள் என்று பன்மையில், அக்கமகாதேவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் கும்பலைப் போல அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். பல் விளக்காதிருத்தல், குளிக்காதிருத்தல், ஈச்சம்பாயை அணிந்திருத்தல் போன்ற விவரணைகள் கொலை செய்யத் துணிதலோடும் பெண்ணை வல்லுறவுக்காளாக்க துரத்துதலோடும் இணைக்கப்படுகின்றன. சமணம் என்கிற சமயம் உடல், மன அழுக்கோடும் நாகரிகமற்ற தன்மையோடும் காட்டப்படுகிறது. ”சமணர்களைத் திருத்தி நல்வழிப்படத் திருவுளமிறங்கி” அருள்செய்யவேண்டுமென ஈசனை அக்கமகாதேவி வேண்டுகிறார்.
நாடகத்தில் அல்லம தேவரை மயக்கும் மாயையின் வஸ்திரங்கள் நழுவுகின்றனவே அன்றி, அக்கமகாதேவி தன் ஆடைகளைக் களைவதில்லை. “காவியிடுத்தி சாம்பல்பூசி கொட்டைகளைக் கட்டிக்கொண்டு பாஷாண்டி மதத்தில்” அவர் இருப்பதாக சமணர்கள் பேசிக்கொள்கிறார்கள். மேலும் நாடகத்தில் அல்லம தேவரை அவர் சந்திப்பதெல்லாம் பெரிதாகப் பேசப்படுவதில்லை. பிரபுலிங்கலீலையிலும் அல்லம தேவரோடு அக்கமகாதேவியின் சந்திப்பு, ஆடையற்ற கோலத்திலும் சுமுகமாக நடக்கிறது. ஆனால், கன்னட ‘சூன்யசம்பாதனே’ நூலில் ஒரு வடிவத்தில் (ஹலகேயர்யனா), கல்யாணா நகரத்தில் அனுபவ மணடபத்தில் அக்கமகாதேவி நுழைவதற்குமுன் உடல் பரிசோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கவிஞரும் சரணருமான கின்னரி பொம்மையா, அக்கமகாதேவி உடல் / பால் உந்துதலைத் தாண்டி விட்டாரா எனப் பரிசோதிக்க, அவர் உடலின் பகுதிகளை, பாலுறுப்பு உட்பட, தொட்டு சோதிக்கிறார். தொடும்போது வெட்கமோ, பதட்டமோ, பயமோ இருந்தால் அவர் பொய்யானவர் எனத் தெரிந்துவிடும் என நினைக்கிறார்.
முதலில் அக்கமகாதேவியின் உடலழகு அவரை மயக்கிவிட்டதென காம வார்த்தைகளைக் கூறுகிறார். அக்கமகாதேவி அவரிடம் அப்போது கூறுகிறார்: “வெட்கமில்லாமல் எதை இப்படி உற்று நோக்குகிறாய்? தளர்ந்த முலைகள், முடிக்கப்படாத கூந்தல், பள்ளமான கன்னங்கள், உலர்ந்து வாடிய கரங்கள், இது, இது வெறும் மூத்திரத்துக்கான பாதை, முட்டாளே, என் பாதையை விட்டு விலகு.” அவர் வார்த்தைகளைக் கின்னரி பொம்மையா ஏற்க மறுக்கும்போது, அக்கமகாதேவி அவரை “சகோதரனே” என்றழைத்து உரைக்கிறார்: “நான் வேசியல்ல, உண்மையில் நான் பெண்ணேயல்ல. என்னை என்னவென்று நினைக்கிறாய்? இறைவன் சென்னமல்லிகார்ஜுனன் சேர்ந்த நான் பெண்ணாக இருப்பது முடிந்துவிட்டது.” அப்போதும் பொம்மையா அவர் கழுத்து, கைகள், உடல்பகுதிகளைத் தீண்டுகிறார். அக்கமகாதேவியின் கனிந்த உடலில் விபூதியின் தடங்கள் அவருக்குக் கிடைக்கின்றன. அவரது யோனியிலும்கூட (இத்தகவல்களுக்குப் பார்க்க, முகுந்தராவ்).
இந்தக் கட்டுரையாளருக்கு எண்ணிப்பார்க்கும்போதே பதற்றமூட்டும் காட்சியாக இது இருக்கிறது. எந்த ஆணுக்கும் செய்யப்படாத சோதனை என்ற பெயரிலான அத்துமீறல் அக்கமகாதேவிக்கு நடந்திருக்கலாம் என்பதற்கான புராணத் தரவு இது. அதுவும் சக வீரசைவ பக்தர்களால், சரணர்களால் இது நடக்கிறது. ஆனால் அக்குமாதேவி தமிழ் நாடகத்திலோ பாலியல் அத்துமீறல் செய்ய முனைபவர்கள் பிற சமயத்தினராக சமணர்களாக மாற்றப்படுகிறார்கள். சைவத்தின் எதிரியான, மற்றமையான சமணத்தைக் குறைத்துக் காட்டும் சொல்லாடல் உத்தியாக பாலியல் அத்துமீறல் மடைமாற்றப்படுகிறது.
முக்கியமாக, நாடகம் அக்கமகாதேவியை அம்மன் தெய்வம் நிலையில் வைத்துக் காட்டுகிறது. பிரபுலிங்கலீலையில் இல்லாத தன்மை இது. பிற கன்னட நூல்களில் அக்கமகாதேவி இவ்வாறு கட்டமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் சைவத் தலபுராணங்களில் அசுரர்களை, இராட்சதர்களை எதிர்கொள்ளும் அம்மன் தெய்வத்தைப் போல சமணர்களை ஆங்காரத்தோடு எதிர்கொள்கிறார் அக்கமகாதேவி. பிரபுலிங்கலீலையில் இல்லாத வகையில், தமிழ் நாடகத்தில் அல்லம தேவர் சிவனின் அவதாரமாகக் காட்டப்படுவதோடு இதை இணைத்து வாசிப்பது அவசியம்.
தென்னிந்தியா சார்ந்த சமயவியல் ஆராய்ச்சியாளரும் சிந்தனையாளருமான டேவிட் ஷூல்மன், தன் தமிழ் கோயில் புராணங்கள் பற்றிய நூலில் (1980), தமிழ்ப்பண்பாட்டில் சிவன் தெய்வமாக முன்நிறுத்தப்படுகிற விதம், வட இந்திய மாதிரிகளிலிருந்து வேறுபட்டதெனக் காட்டுகிறார். சாதியிலிருந்து விலக்கப்பட்டவராக, சுடுகாட்டில் பித்துப்பிடித்த நடனக்காரராக, தூய்மையில்லாதவராக, பெண்களை மயக்குபவராக, எதிராளிகளை சூதாட்டத்தில் தோற்கடிப்பவராக, பிராமணர்களைக் கொலைசெய்பவராக வடநாட்டு மரபுகளில் இருக்கும் சிவன், ஒப்பீட்டளவில் அந்த வகையில் தமிழ்ப்புராணங்களில் இல்லை என்கிறார் ஷூல்மன். தமிழ் சைவத் தலபுராணங்கள் நிர்மலமான சிவனையே முன்வைக்கப் பார்க்கின்றன என்பது அவரது ஒரு வாதம். நிர்மலமான சிவன் என்கிறபோது, குருதி, குருதிப்பலி, வன்முறை, சாவு, தூய்மையற்ற நிலை போன்றவற்றோடு பொருண்மையான தொடர்புடைய உலக வாழ்க்கையோடு எவ்வாறு அவனைக் கடவுளாகத் தொடர்புறுத்துவது என்றொரு சவால் எழுகிறது. ஒருவகையில் இந்தச் சவால், தலபுராணங்களில் சிவன் இடத்தில் மகிடாசுரன் போன்ற அசுரர்களின் பதிலீட்டால் எதிர்கொள்ளப்படுகிறது எனக் கருதுகிறார் ஷூல்மன். இத்தகைய அசுரர்கள் அம்மன் தெய்வத்தால் வதை செய்யப்படுவதும் குருதி சொரிவதும் புராணங்களில் நாம் தவறாமல் பார்க்கிற ஒன்று. புராணத்தில் தேவிக்கும் சிவனுக்குமான தெய்வத் திருமணத்தின் தலைகீழாக்கம் அசுரனுக்கும் தேவிக்குமான சரசம் அல்லது காமம் சார்ந்த உறவில் நடக்கிறது (ஷூல்மன் 1980, குறிப்பாக ப. 352).
அக்குமாதேவி நாடகத்தில் நடப்பதை மேற்கூறியதன் அடிப்படையில் புரிந்துகொள்ள முயலலாம். சிவனோடு அடையாளப்படுத்துப்படும், சிவலிங்கத்தைத் தரிக்கும் வீர சைவ சரணர்களைப் புராணக் காட்சியிலிருந்து அகற்றி அவர்களுக்குப் பதிலீடாக சமணர்கள் அசுரர் இடத்தில் வைக்கப்படுகிறார்கள். அவர்களை வதம் செய்வதாக அறிவிக்கும் அக்கமகாதேவி தன் இயல்பான சாத்வீக குணத்தோடு, இராஜத, தாமதக் குணங்களை இணைத்துக்கொண்டு அகோரரூப அம்மனாகவே மாறுகிறார். தாமதக் குணமான மாயையிடமிருந்தும் இராஜத குணமான விமலையிடமிருந்தும் தொடக்கத்திலிருந்து விலகியே இருக்கிறார் அல்லம தேவராகிய சிவன். அதே நேரத்தில் சாத்வீக குணத்தோடும் (அக்கமகாதேவியோடும்) பொருண்மையான தொடர்பு அவருக்கில்லை. பிரகிருதியின் முக்குணங்களிலிருந்து விலகியிருக்கும் சிவன்-அல்லமர் சமணர்களோடு மதமாற்றம் என்கிற விவகாரத்தில் ஈடுபடுவதில்லை. ”…முன் வசுவண்ணரால் சமண மதத்திலிருந்து சைவமதமடைந்த சமணர்களுக்கு பரம்பொருளுணர்த்தி சைவ சமயமே சைவம்” என்று அல்லம தேவர் அறிவுறுத்துவதாக மட்டும் சொல்லப்படுகிறது. இவ்வாறாக, சிவன் – அல்லம தேவரின் வன்முறையிலிருந்து அறுபட்ட நிர்மலமான தன்மையை தமிழ் நாடகம் காப்பாற்றி வைக்கிறது. இதனால் தமிழ் சைவத் தலபுராணங்களோடு சொல்லாடல் தொடர்ச்சியில் அக்குமாதேவி நாடகம் தன்னை வைத்துக்கொள்கிறது எனலாம்.
நாடகம் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பண்பாட்டுச் சூழல் வரலாற்றைப் பொறுத்தவரை ஒரு இன்றியமையாத கேள்வி உண்டு. அது பிறிதொரு ஆய்வுக்கானது. சமண சமயத்துக்கும் சைவ சமயத்துக்குமான போராட்ட வரலாற்றில் சைவம் சமணத்தின் மேல் செலுத்தியிருக்ககூடிய வன்முறையைப் பற்றியது அது. சமணர்களுக்கு உயிர்மிரட்டலையும் சமணக்கோயில்களைத் தரைமட்டமாக்கும் அச்சுறுத்தலையும் நாடகம் எடுத்துரைக்கிறது. நாடகத்தில் மொழியப்பட்டிருக்கும் உயிர்மிரட்டலும் அச்சுறுத்தலும் சைவப் பெருமையைக் காட்டுவதற்கா, அல்லது வரலாற்றில் நடந்தது புனைவாக மீளுருவாக்கப்பட்டிருக்கிறதா என்பது மேற்கொண்டு விரிவான ஆய்வுக்கு உகந்தது.
(கூடு ஆய்விதழில் வெளிவந்த கட்டுரை இது. சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன)
அடிக்குறிப்புகள்
- வசனம் என்றால் ‘வாக்கு’ அல்லது ’கூறப்பட்ட கூற்று.’ வீரசைவ இயக்கமாக பின்னர் அறியப்பட்ட பசவண்ணரின் இயக்கம் பெரிதும் சைவ சரணர்கள் இயற்றிய வசனங்களால் பரப்பப்பட்டது. 12ம் நூற்றாண்டில் ஆக்கப்பட்ட வசனங்களில், இன்றைக்குக் கிட்டத்தட்ட 130 வசனக்காரர்களால் ஆக்கப்பட்ட 15,000 சொச்சம் வசனங்கள் கிடைத்திருக்கின்றன. இந்த வசனக்காரர்களில் முப்பத்து மூன்று பெண்கள் (வசனகர்த்திகள்) இருந்திருக்கிறார்கள் (சைதன்யா, முன்னுரை). பசவண்ணர் முன்நிறுத்திய, சமய வழியில் வைதீக மதம் வலியுறுத்திய ஐந்து வகைத் ‘தீட்டுகள்’ (தூமைத் தீட்டு, சாவுத் தீட்டு, குழந்தைப் பேறுத் தீட்டு, சாதித் தீட்டு, மற்றும் வைதவ்யம் எனப்படும் கைம்பெண் கோலம்) புறந்தள்ளப்பட்டன (முகுந்தராவ், 2018). இது பெண்களை ஓரளவுக்கு ஆணாதிக்க நியதிகளிலிருந்து வெளிவர உதவியாக இருந்தன எனலாம். பசவண்ணரின் இயக்கத்தில் பெண் சரணர்களின் கணிசமான பங்களிப்பையும் இவ்வகையில் புரிந்துகொள்ள முடியும்.
2. அக்கமகாதேவியின் ஆடை களைந்த உடல், பாலியல் அரசியலுக்கு பார்க்க, பெருந்தேவி 2018.
3. நாடக வசனத்தின் சுவைக்காக இப்பகுதியைத் தருகிறேன்.
மாயை: ஜாலங்கள் செய்யாதே
நட்டுவர்: கோலங்கள் வையாதே
மா. தாளாத தொல்லையே
நட். ஆளானானில்லையே
மா. சொல்வது சரியா
நட். பொல்லாத வெரியா [பிரதியில் இருக்கிறபடி]
மா. எட்டிப் போகாதே
நட். கிட்டி நீ வராதே
மா. பார்ப்பது பரிதாபம்
நட். சேர்ப்பது பெரும்பாவம்
மா. பாவம் இல்லையே
நட். கோபம் தொல்லையே
மா. சரணம் சாமியே
நட். மரணம் காமியே
நூல் மற்றும் கட்டுரைத் தரவுகள்
தமிழ்
ஆ. கேசவநாயகர். பிரபுலிங்கலீளை என்னும் அக்குமாதேவி சரித்திர நாடகம்.
சென்னை: மயிலை தி.இரத்தினமுதலியார் அண்டு பிரதர்ஸ், 1924.
துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள். பிரபுலிங்கலீலை. சென்னை:
ஸ்ரீசச்சிதாநந்தசுவாமிகள் தர்மபரிபாலன சபை, 1905.
பெருந்தேவி. “அக்கமகாதேவி.” விகடன் தடம். 01 ஜுலை 2018.
ஆங்கிலம்
Chaitanya, Vinaya. Songs of Siva: Vacanas of Akka Mahadevi . New York: Harper
Perennial, 2017.
Rao, Mukunda. Sky-clad: The Extraordinary Life and Times of Akka Mahadevi.
Chennai:Westland, 2018. (kindle ebook)
Shulman, David. Tamil Temple Myths: Sacrifice and Divine Marriage in the South Indian
Saiva Tradition. Princeton: Princeton University Press, 1980.