முன்னொரு இரவில்

 

உடல்கள் ஒளிர்ந்தன
புவியீர்ப்பு விசையிலிருந்து
விடுபட்டுச் சுழன்ற உடல்கள்
இரு ஜோடி ஒளிர் கால்கள்
கால்களைப் பின்னின கொடிகளாக
இரு ஜோடி ஒளிர் கைகள்
முகங்களை ஏந்திக் காற்றில் அலைந்தன
நானாகவும் இன்னொருத்தியாகவும்
அவனோடும் அவனோடும் இருந்தபோது
நாளங்களின் செம்பொன் திரவத்தில்
கடவுளை விட இனிய இருப்பின்
பெயரெழுத்துகள் வரையப்பட்டன
நானாக இன்னொருத்தியாக
அவனோடும் அவனோடும்
ஒருமையான அன்று
மரம் என்றவுடன் மரம் தலையசைத்தது
பறவை என்றவுடன் கூரை மறைந்தது
வாழ்க்கை என்றவுடன்
தந்தேன் என்றது
ஒரு முறை மட்டும்

 

Separation, by Edvard Munch, 1896

இடம்

 

ஒரு வெதுவெதுப்பான உள்ளங்கை
எனக்கான இடம் அதைத் தவிர
வேறெங்கிருந்தாலும் நான்
இசைக்குப் பொருந்தாத ஸ்வரம்
வனையும்போது உடைபடும் கூடை
மூன்று காலத்துக்குமான
விபத்தின் வடு
அந்த உள்ளங்கை
உன்னுடையதென்றால் மட்டும்
நான் தேன் சிட்டு
என் சிகப்பு மூக்கால்
உன் உள்ளங்கை முழுக்க
குறுகுறுக்க அளப்பேன்

 

காரணம் புரிவதில்லை

 

ஒருவர் தற்கொலையில் வெற்றிபெறுகிறார்
விடப்பட்டவர்கள் தோற்றுப்போகிறார்கள்
தன் நீரை உள்ளிழுத்து ஒரு நதி
காணாமல் போகிறது
காரணம் புரியாத கடல் அலைக்கழிகிறது

தோற்றுப்போனவர்கள்
தலை குனிந்து நடக்கிறார்கள்
தனித் தனியாக
தம் நிழல்களை அளந்தபடி
சில நிழல்கள் இரையாகிவிடுகின்றன
ஒரு பூதாகாரமான பறவையின் நிழலுக்கு

தற்கொலை ஒரு தொற்று
தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை
இறந்துவிட்ட ஒரு மருத்துவர்
அவர் வீடு பூட்டிக்கிடக்கிறது