விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விழா டிசம்பர் 25, 26 தேதிகளில் கோவையில் ராஜஸ்தானி சங் அரங்கத்தில் நடைபெற உள்ளது. விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படவிருக்கிறது. சென்ற முறை 2019 டிசம்பரில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விழாவில் நான் ஓர் அமர்வில் பங்கேற்றிருந்தேன். இரண்டு நாட்களும் நடந்த அமர்வுகளில் பார்வையாளராகவும் இருந்தேன். கூட்டம் கூட்டமாக அத்தனை வாசகர்களை ஒன்றுசேரப் பார்த்ததும் உரையாடியபடி இருந்ததும் அற்புதமான அனுபவமாக இருந்தது. என்னுடைய அமர்வு நவீன கவிதையை, குறிப்பாக எதிர்கவிதையைக் குறித்த என் பார்வையை வலுப்படுத்திக்கொள்ள, தொகுத்துக்கொள்ள மிகவும் உதவியது. சக கவிஞர்கள், எழுத்தாளர்களிடமிருந்து கேள்விக் கணைகள் வந்தவண்ணமிருந்த அமர்வு அது!  அத்தகைய அனுபவத்தை பெறப்போகும் எழுத்தாளர்களைக் குறித்து மகிழ்ச்சி.
கோவையில் ஜெயமோகனைச் சந்தித்தபோது ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவைப் போல இந்த இலக்கியக் கூடுகையை சர்வதேச எழுத்தாளர்கள் பங்கேற்க நடத்த வேண்டும் என்ற அவாவை அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டார். உண்மையில் தமிழகத்தில் தமிழ் நவீன இலக்கியத்தை முன்னிட்டு அப்படியொரு விழா நடந்தாலே ஒழிய, என்னைப் போன்றவர்களுக்கு சர்வதேச எழுத்தாளர்களுடன், வாசகர்களுடன் உரையாட எந்தச் சந்தர்ப்பமும் கிடைக்காது என்பதுதான் நிதர்சனம். சர்வதேச எழுத்து இருக்கட்டும், எழுதத் தொடங்கி இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் இதுவரை இந்தியாவில் அல்லது தமிழகத்தில் நடந்த எந்த இலக்கிய விழாவுக்கோ, கூடுகைக்கோ நான் அழைக்கப்பட்டதில்லை. (கேரள அரசாங்க ஆதரவில் நடந்த ஒரு இலக்கியக் கூடுகை விதிவிலக்கு.) சாகித்ய அகாதமி நடத்தும் “இந்தியன் லிட்டரேச்சர்” இதழில் என் படைப்புகள் / கட்டுரைகள் வந்திருக்கின்றன. ஆனால் அவர்களிடமிருந்து கவிதை சார்ந்த ஒரு கூட்டத்துக்கோ ஒன்றுகூடலுக்கோ இலக்கிய விழாவுக்கோ அழைப்பு வராது. ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம். இதற்கெல்லாம் தேர்வு செய்யப்பட தொடர்ந்தும் தீவிரமாகவும் எழுதுவதைத் தாண்டி நான் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்ததில்லை.
விஷ்ணுபுரம் இலக்கிய விழாவை ஜெயமோகனின் அரசியல் நிலைப்பாடுகளையும் கட்டுரைகளையும் முன்னிட்டு காட்டமாக விமர்சிப்பவர்கள் / ஒறுப்பவர்கள், எந்தவித ஊக்கமும் கிடைக்கப்பெறாத நம் இலக்கியச் சூழலில் விஷ்ணுபுரம் கூடுகை படைப்பியக்கத்தில் ஆத்மார்த்தமாக ஈடுபடும் எழுத்தாளர்களுக்குத் தரும் இடத்தையும் கவனத்தையும் வாய்ப்பையும் கணக்கிலெடுத்துக்கொள்ள மாட்டார்கள். (பல சமயம் ஜெயமோகனின் அல்புனைவு எழுத்துகளோடு நான் ஒத்துப்போவதில்லை. அவை வேறு விஷயம்.)
கடற்கரைக்கு மக்கள் வராவிட்டால் கடலலைகள் சோர்ந்துபோகும் என்பார் என் அம்மா. போலத்தான் எழுத்தாளர்கள். சுயதிருப்திக்கு என்றெல்லாம் சொல்லிக்கொண்டாலும் வாசகர்கள், வாசகக் கவனம் இல்லாவிட்டால் படைப்பு மனம் சோர்ந்துதான் போகும். நான் எழுதியிருப்பவற்றை விருது அங்கீகாரம் போன்றவற்றோடு குழப்பிக்கொள்ள வேண்டாம். சக எழுத்தாளர்களோடு, வாசகர்களோடு அளவளாவுவதற்கான தளம் என்னைப் போன்றவர்களுக்கு இல்லை என்பதைத்தான் பல வார்த்தைகளில் சொல்லியிருக்கிறேன்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயமோகனுக்கு என் அன்பு!