கோணங்கி மீதும் நாடகக் கலைஞர்கள் மீதும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி சீனிவாச ராமாநுஜம் அருஞ்சொல் மின்னிதழில் எழுதியிருக்கும் பதிவைப் படித்தேன். சுட்டி:  https://www.arunchol.com/srinivasa-ramanujam-on-writer-brahmins?fbclid=IwAR3iK7XPmyMFmvXJ0-49PGRcQoNFEh7qzeKn5Qpu5YBcgPcGfgtJzZebSQI

ராமாநுஜம் எழுதியிருக்கும் பதிவின் தலைப்பு, பதிவின் புதிய ’கண்டுபிடிப்பு.’ இரண்டும் ஒன்றுதான். ”உருவாகிறார்களா எழுத்தாளப் பார்ப்பனர்கள்?” என்ற தலைப்பு. உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மையவாதம்:   “பார்ப்பனர்களைப் போலவே எழுத்தாளர்கள் தங்களை கறைபடியாதவர்களாக வெளிப்படுத்திக்கொள்ள யத்தனிக்கிறார்கள். எல்லா மனிதர்களையும்போல் அவர்களும் கொண்டிருக்கும் அற்பத்தனங்களை, சயநலங்களை, ஊர்ப் பெருமையை, சாதிப் பெருமையை, குலப் பெருமையை, குடும்பப் பெருமையை, தன் பெருமையை எழுத்தாளர் என்ற முகமூடி கொண்டு மறைத்துக்கொள்ள முயலுகிறார்கள். வாசகர்களையும் மற்றவர்களையும் தேவைக்கு ஏற்றாற்போல் சூத்திரர்களாகவோ, தலித்துகளாகவோ நடத்துகிறார்கள்.”

கோணங்கி விவகாரத்தில் நான் உட்பட பலரும் விமர்சித்திருந்த ஜெயமோகனோ, வேறு எந்த பொருட்படுத்தத்தக்க எழுத்தார்களோ  எழுத்தாளர் ”கறை படியாதவர்” என்று கூறியதாக எனக்குத் தெரியவில்லை. ஜெயமோகனின் கட்டுரையில் பல இடங்கள் எனக்கு ஒப்பவில்லை என்றாலும் கூட, அவர் எழுத்தாளனின் பிறழ்வை கலைஞனின் மாறாத ‘இயல்பாக’ வைத்துப் பேசினார் என்றபோதும் கூட கோணங்கியின் மீது கறையே இல்லை என்று கூறவில்லை. அதைப் பிறழ்வு என்றே எழுதியிருந்தார்.

இந்தப் பதிவின் பிரச்சினை பார்ப்பனர்களோடு தங்களை ஒப்பிட்டு, ஒப்பிடும்வகையில் தமிழ் எழுத்தாளர்கள் தங்களை வைத்துக்கொள்வதாகக் ‘கண்டுபிடித்திருக்கும்’ சாக்கில் நடந்திருக்கும் திசைமாற்றம்.

முதல் விஷயம். இன்று வரையிலும் இலக்கியவாதிகள் நம் சூழலில் விளிம்புநிலைக் கலைஞர்கள்தான். இன்று தமிழக அரசு விருதுகள், அங்கீகாரங்கள் என்று முன்னெடுக்கத் தொடங்கியிருந்தாலும், எழுத்தாளர்கள் எந்த வகையிலும் அரசியல்வாதிகள், திரைத்துறை நடிகர்கள், பாடலாசிரியர்கள், ஏன் யுடியூபர்கள் போன்றோரோடு  ஒப்பிடத்தக்க சமூக அந்தஸ்து படைத்தவர்கள் அல்ல. இலக்கியவாதியும் திரைத் துறை ஆளுமையும் உரையாடும்போது எப்படி பேசிக்கொள்கிறார்கள், யாருடைய இடத்துக்கு யார் தேடி வருகிறார்கள், எப்படி ஒருவர் மற்றவரை அழைக்க முடிகிறது என்று பலதைச் சுட்டிக்காட்டலாம்.

இரண்டாவது, பார்ப்பன அதிகாரத்தைக்  கொண்டுவந்த நோக்கம்—it may be an inadvertent goal—அதுவாக நிறைவேறிவிட்டது என்றே கருதலாம். இன்று கோணங்கியின் மீது வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தமிழ் ஃபேஸ்புக் விவாதங்கள் நகர்ந்து பதிவின் ஆசிரியருடைய ’சுயசாதி விமர்சனத்தை’ நோக்கிப் போய்விட்டன. இங்கே நடந்திருப்பது பேசுபொருள் இலக்கை திசைமாற்றுவது. shifting the goalposts. கோணங்கியிடமிருந்து பாலியல் வன்முறையை அத்துமீறல்களை சந்தித்து மீண்டவர்கள் கோரியபடி, இன்று வரையிலும் கோணங்கியோ முருக பூபதியோ மணல்மகுடி நாடகக் குழுவின் நிர்வாகியோ இன்னும் மன்னிப்பு கோரவில்லை. இது குறித்து பொதுத்தளத்தில் அறிவுஜீவிகளால், பத்திரிகையாளர்களால்  பெரிய நிர்ப்பந்தம் எதுவும் இன்றுவரையில் முன்வைக்கப்படவில்லை. சில அறிக்கைகளைத் தவிர. ஆனால் மாறாக, பாலியல் குற்றச்சாட்டுகளைக் கைகழுவிவிட்டு சாதிச் சொல்லாடலை நோக்கி விவாதத்தை திசைதிருப்புதல் நம் சூழலில் சாத்தியமாகிறது.

வேள்வி செய்யும்போது மட்டும்தான் பார்ப்பனர்கள் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். மற்ற நேரத்தில் தாங்கள் பார்ப்பன அதிகாரத்தைக் காட்டுவதற்காக அன்றாட வழிமுறைகளை-உடலுறவு கொண்டபின் எப்படி குறியைக் கழுவுவது போன்றவை—அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகிறார் பதிவின் ஆசிரியர்.  உடல் ஆசாரம் பற்றிய சுகாதாரம் சார்ந்தும் சாராமலும் arbitrary விதிகள், சடங்குகள் என்பது பார்ப்பனர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டதா என்றால் அப்படி நம் பண்பாட்டில் இல்லை.

ஓர் உதாரணம்: ஆண் – பெண் தேக சம்பந்தம் கொள்ளும்போது எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளலார் எழுதுகிறார். “தொடங்கிய போது அறிவு விகற்பியாமல் – என்றால், வேறுபடாமல் – மன முதலிய கரண சுதந்தரத்தோடு, தேகத்திலும் கரணங்களிலுஞ் சூடு தோன்றாமல், இடது புறச் சாய்வாகத் தேகசம்பந்தம் செய்தல் வேண்டும். …ஒரு முறையன்றியதன் மேலுஞ் செய்யப்படாது. தேகசம்பந்தஞ் செய்த பின், தேகசுத்தி செய்து திருநீறணிந்து சிவத்தியானஞ் செய்து பின்பு படுக்க வேண்டும். எந்தக் காலத்தில் எது குறித்துப் படுத்தபோதிலும், இடதுகைப் பக்கமாகவே படுத்தல் வேண்டும்.”

தேகசுத்தி செய்து திருநீறணிந்து படுத்துக்கொள்ள வேண்டும் என்று வள்ளலார் கூறுவதை விதியாகவும் எடுத்துக்கொள்ளலாம் சடங்காகவும் எடுத்துக்கொள்ளலாம். நான் அறிந்தவரை அன்றாட ஆசாரம் என்பது பல்வேறு சாதி, சமூகங்களால் பல வகைகளில் பின்பற்றப்பட்டிருக்கின்றன. சற்றுத் தேடினால் பல தரவுகளைத் தர முடியும்.

தமிழ் எழுத்தாளர்கள் வேள்வி செய்வதாகப் பாவித்துக்கொள்கிறார்கள் என்று ராமாநுஜம் குற்றம்சாட்டுகிறார். எழுத்தாளர்கள் வாசகர்களிடம், சக எழுத்தாளர்களிடம் காட்டும் படிநிலை உலகத்தில் பல நாடுகளிலும், சமுதாயங்களிலும் இருப்பது. வாசகர்கள், குறிப்பாக பெண்கள், பேராசிரியர்கள் பற்றியெல்லாம், சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, மிஷேல் வெல்பெக் போன்ற எழுத்தாளர்களின் கருத்துகளை பல சமயம் நம்மால் சகிக்க முடியாது. உலகெங்கும் நிலவுகின்ற பாகுபாடு அது.  எங்கும் வியாபித்திருக்கும் எழுத்தாளர் – வாசகர்கள் படிநிலைக்கு ஏதோ நம் சூழலில் மட்டும்தான் இருப்பதுபோல குறுக்கி,  பார்ப்பனர், வேள்வி என்று உதாரணம் காட்டுவது பொருத்தமில்லாதது.

பார்ப்பனர்களது அதிகார இடத்தை விமர்சிப்பது கூடாது என்பதல்ல நான் சொல்வது. என்னுடைய பல பதிவுகள் சுயசாதி விமர்சனம் சார்ந்தவை.  சாதி அதிகார இடங்கள், படிநிலைகள் தொடர்ந்து விமர்சிக்கப்பட வேண்டியதும்கூட. ஆனால் அதை எங்கே பேசுகிறோம், அதைப் பேசுவதன் மூலம், மற்ற வகை அதிகாரங்கள் பற்றிய பார்வைகளும், விளைவான அநீதிகளும் எவ்வாறு வெற்றிகரமாக திசைதிருப்பப்படுகின்றன என்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும். இன்று தமிழ் அறிவுச்சூழலில் இத்தகைய திசைதிருப்பல்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. சீனிவாச ராமாநுஜத்தின் அருஞ்சொல் பதிவு அதற்கொரு சான்று.