சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பன் வீட்டுக்கு வந்திருந்தான். சமீபத்தில் நான் வாசித்த ஒரு தமிழ்ப் புதினம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த ஆக்கம் பெரிதாக என்னைக் கவரவில்லை. ஏனெனில், மொழிவளத்தைக் கையாளும் விவரணைகளில் சிறப்புற்றிருந்தாலும், அதன் ஒரு பெரிய பலவீனம், தேவைப்படுகிற பல இடங்களில் உரையாடல் வசனம் தவிர்க்கப்பட்டிருப்பது. உதாரணமாக இருவர் ஒரு வரலாற்றுக் காலகட்டம் பற்றி விரிவாக வாதிடுகிறார்கள். ஆனால் அந்த உரையாடல் முழுக்க கதாசிரியர் கூற்றாகவே வருகிறது.

புனைவின் ஒரு கால் காட்சி விவரணை என்றால் இன்னொரு கால் உரையாடல் வசனம். இதில் இரண்டாவது கால் பல எழுத்தாளர்களுக்குக் கொஞ்சம் தகராறுதான். காட்சி விவரிப்பில் செழிக்கும் எழுத்தாளர்கள்கூட பெரும்பாலும் உரையாடலில் கோட்டைவிட்டுவிடுவார்கள். அதனால் அவர்கள் மேற்கொள்ளும் எளிதான வழி, எல்லாவற்றையும் ஆசிரியர் கூற்றாகவே எழுதிவிடுவது. நண்பன் கூறினான்: “நேரடி உரையாடல் எழுதுவது ரொம்பக் கஷ்டம்பா. அதற்கு tonal variations கொண்டுவரணும். வெகு சில எழுத்தாளர்களுக்கே, மேதைகளுக்கே அது சாத்தியம்.”

அதன் பின் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ எப்படிப் பன்மைத் தொனிகளை முன்வைக்கிறது என்று சிலாகித்தான். இந்த உரையாடல் விஷயத்தில் ஜெயகாந்தனோடு புதுமைப்பித்தனும் தி.ஜா.வும்கூட எப்படியெல்லாம் சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டிருந்தோம். பன்மைத் தொனிகள் கதாபாத்திரங்களை உயிர்ப்போடு வாசகரிடத்தில் கொண்டுவருகின்றன. எழுத்தாளர் கூற்றாகவே கதாபாத்திரங்களின் பேச்சு எழுத்தில் வைக்கப்படும்போது சலிப்பு மட்டுமே எஞ்சுகிறது. நிகழ்த்துதலை ஒரு புகைப்படமாக மட்டும் காணும்போது கிடைக்கும் உணர்வைப் போல. பொதுவாக இன்று வெளிவரும் பல புனைவாக்கங்களின் பிரச்சினை இது.

அன்று இரவு மகாமசானத்தைத் திரும்ப வாசித்தேன். வாசகர்கள் இதை உணர்ந்திருக்கலாம். ஒரு கதை அல்லது கவிதை அதில் ஒரு வரி அல்லது ஒரு பத்தியில் திறந்துகொள்ளும். ஒரு திறவுகோல் அப்போது நமக்குக் கிடைத்துவிடும். உள்ளே சென்றால் வர்ணஜாலம் காட்டும். வாசிப்பில் திறந்துகொண்டு அந்தக் குறிப்பிட்ட இடத்தில் வேர்கொண்டும், அத்தோடு இணைத்து, பிணைத்து படிப்பவர் ஓர் உலகத்தையே உருவாக்கிக்கொள்ள அது உதவும். மகாமசானத்திலும் அதுதான் நடந்தது. அக்கதையைப் பலமுறை முன்பு படித்திருக்கிறேன், என்றாலும் அந்த இரவுதான் திறவுகோல் கிடைத்தது.

மகாமசானம் கதையை முதன்முதலில் வாசித்த தருணத்தை சுந்தர ராமசாமி “உடல்ரீதியாகவே ஓர் கிளர்ச்சி, உயிர் போவது போல ஓர் வலிப்பு, அவருக்கு ஏற்பட்டது என” எழுதியிருப்பதாக ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார், (“வாழும் கணங்கள்,” ஜூன் 6, 2006). ஜெயமோகனோடு இதைப் பற்றி உரையாடியபோது (மே 8, 2018), இந்தக் “கிளர்ச்சியை” நேர்மறையாக, படைப்பூக்கத்தை கிளர்த்திய அனுபவமாக சுந்தர ராமசாமி தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகக் கூறினார். மகாமசானம்தான், என்றாலும் உள்ளிடையாக அதில் தெரிவது ”smile” என்று சுந்தர ராமசாமி கூறியதையும் என்னிடம் தெரிவித்தார். அவர் கூற்றில் “புன்னகை” லீலை என்பதைக் குறிக்கிறது என்றார் ஜெயமோகன். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நடக்கும் விளையாட்டாக அதை வாசிக்கிறார். அத்தகைய வாசிப்புக்கான வெளியைக் கதை தருகிறது. அதே நேரத்தில், வேறொரு தளத்தில், எந்திரமய நகர வாழ்க்கை, அதன் அபத்தத்தின் நடுவே நம்பிக்கையின் ஒரு சைகை என நவீனத்தின் சொல்லாடலுக்குள்ளும் கதை இயங்குகிறது. எனக்குக் கிடைத்த திறவுகோல் இந்த இன்னொரு தளத்துக்கானது.

நகரத்தில் முதிய பிச்சைக்காரன் ஒருவன் சாகிறான். அனாதையாக. அப்பாவோடு மாம்பழம் வாங்க வரும் குழந்தை சாவை முதன்முதலாகப் பார்க்கிறது. மாம்பழத்தைப் பார்த்தவுடன் சாவிலிருந்து அதன் குட்டி மனம் நகர்ந்துவிடுகிறது என்று மேலோட்டமாகச் சொல்லிவிடலாம். ஆனால், கதை என்பது கதைச் சுருக்கமா என்ன? மகாமசானம் கதையின் திறவுகோல் இந்த ஒரு வரியில் இருக்கிறதென எனக்குத் தோன்றுகிறது. “பட்டாணி வாங்கிக் குடேன்.” செத்துப்போய்க்கொண்டிருக்கும் முதிய பிச்சைக்காரனோடு கூட இருக்கும் இளையவன் அவன் வாயில் தண்ணீர் புகட்டுகிறான். அதுகூட அவனுக்குச் சரியாகச் செய்யத் தெரியவில்லை. குழந்தை “மெதுவா, மெதுவா” என்கிறது. பெண் குழந்தை. இங்கே பால் அடையாளம் கவனிக்கத்தக்கது. பெண் குழந்தையின் அக்கறை. வாயைக் குவியவைப்பதுபோலக் கூறி அக்கறையை நிகழ்த்திக் காட்டுகிறது. “பெரிய பூச்சாண்டி”க்கு என்னவோ என்று புரிகிறது குழந்தைக்கு. அத்தோடு மல்லுக்கட்டுகிறான் சின்னப் பிச்சைக்காரன் என்றும் புரிகிறது போல. தன்னாலான ஆலோசனையை உடனே சொல்கிறது: “பட்டாணி வாங்கிக் குடேன்.”

கதையாடல் காட்சிக்குப் பொருந்தாத நகைச்சுவையாக இதைக் கருதி வாசகர் நகர்ந்துவிடலாம். கதையாடலே இந்த இடத்தில் வாசகரின் கவனத்தைக் கழுத்தைத் திருப்பி நகர்த்திவிடுகிறது. “தனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கை அதற்கு”. ஆனால் அறியாக் குழந்தை ஏதோ சொல்லிற்று என்று தள்ளிவிட முடியுமா குழந்தையின் கூற்றை? மிகப் பெருங் கருணையைக் காட்டித் தருகிற வசனம் அல்லவா அது? குழந்தையின் சொற்கள் அறியாமையிலிருந்து வருவது போலிருந்தாலும் பச்சாத்தாபம் (empathy) என்கிறோமே, அது நிகழ்த்தப்படுவது அங்கேதானே.

இந்த இடத்தில் புதுமைப்பித்தன் பட்டாணி கொடுக்கச் சொல்லியது குழந்தை என்று எழுதியிருந்தால் அது உயிரற்ற அட்டை வாசகமாகத்தானே இருந்திருக்கும்? “குடேன்” என்பதின் தொனியைக் கவனியுங்கள்: கொடுத்திருக்கலாமே, இப்படி உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே, தேவையானதைச் செய்யாமல் மல்லுக்கட்டுகிறாயே, கொடுத்திருக்கலாம்தானே, சீக்கிரம்… அந்த ஒரு சொல்லில்தான் பச்சாத்தாபத்தின் என்னென்ன பரிமாணங்கள் நிகழ்த்திக்காட்டப்படுகின்றன.

கதை இப்படித்தான் தொடங்குகிறது: “சாயந்தரமாகிவிட்டால், நாகரிகம் என்பது இடித்துக்கொண்டும் இடிபட்டுக்கொண்டும் போக வேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறிவிடுகிறது.” நாகரிகம் என்பது இவ்வளவுதான் நகரத்தில். ஆனால் அங்கேதான் “குடேன்” என்று குழந்தையின் கரிசனக் குரல் ஒலிக்கிறது. அடுத்தவன் சாவுகூட யாருக்குமே பொருட்டாக இல்லாத மகாமசானத்தில், ஒரு தளத்தில் நலிந்தோரைக் காக்க நினைக்கும் கருணைப் பிரவாகமாக, இன்னொரு தளத்தில், முரணுற்ற, அரூப நகர ‘நாகரிக’ இயக்கத்தின் அபத்தமாக ஒலிக்கிறது இந்தக் குரல். கதையாடலில் இந்த அபத்தம் விவரணையாக, ஆசிரியப் பார்வையாக, கதாபாத்திரங்களின் சுய பரிசீலனையாக எல்லாம் மேலோங்குவதில்லை. அதுதான் புதுமைப்பித்தனின் மேதமை. பட்டாணி என்ற ஒரு சொல் மூலம் அபத்தம் கடத்தப்பட்டுவிடுகிறது. நகர இயக்கத்தின் உள்ளுறை அபத்தம் சாவெனும் நிகழ்வுக்குச் சற்றும் பொருந்தாத கொறிக்கும் உணவுப் பொருள் ஒன்றுக்கு மாற்றப்பட்டுவிடுகிறது.

குழந்தையின் கூற்று கருணையின் வாக்கு. ஆனால் மகாமசானம் அந்த வாக்கையும் கருந்துளை போல உறிஞ்சி உள்ளிழுத்துக்கொண்டுவிடுகிறது. மாம்பழம் குழந்தையின் கவனத்தைத் திருப்பிவிடுகிறது. அப்பா வாங்கிவந்த ”பழத்தைத் தூக்க முடியாமல் தூக்கி மோந்து, “வாசனையா இருக்கே!” என்று மூக்கருகில் வைத்துத் தேய்த்துக்கொண்டது” எனக் கதை முடிகிறது. வேறென்ன, மகாமசானத்தில் நாம் எல்லாருமே மாம்பழத்தால் கவரப்படும் ஈக்கள் தானே?

நூல் தரவு

புதுமைப்பித்தன். ‘மகாமசானம்.’ புதுமைப்பித்தன் கதைகள்: முழுத் தொகுப்பு. பதிப்பாசிரியர்: ஆ. இரா. வேங்கடாசலபதி. நாகர்கோவில்: காலச்சுவடு, 2000.

(மின்னம்பலம் மின்னிதழில் மே, 2018இல் வெளிவந்த கட்டுரை.)