மழையின் வீடு

பா. வெங்கடேசனின் ‘மழையின் குரல் தனிமை’ குறுநாவலுக்கான ஒரு வாசிப்பு

435

”மனிதனொருவன் உலகத்தை வரைய நினைத்தான். வருடங்கள் செல்ல, வெளியொன்றில் மாகாணங்கள், ராச்சியங்கள், மலைகள், குடாக்கள், கப்பல்கள், மீன்கள், அறைகள், உபகரணங்கள், நட்சத்திரங்கள், குதிரைகள், ஆள்கள் என்று உருவங்களை இட்டு நிரப்பினான். தான் இறப்பதற்குச் சற்று முன்னர் கண்டுபிடித்தான், அவனுடைய வரிகளின் பொறுமையான வரைபடம் அவன் சொந்தமுகத்தின் வரித்தடங்களைப் பற்றிச்சென்றதை.” (ஜோர்ஜ் லூயி போர்ஹே)

மழையின் குரல் தனிமை குறுநாவலைப் பற்றிய இக்குறிப்புகள் என்னில் உருவாக்கத்திலிருக்கும் வாசிப்பின் தடம்பற்றியவை. இந்தத் தடத்தின் ஒரு இணையாக எழுத்தாக இந்தக்கட்டுரை முன்வைக்கப்படுகிறது. வாசிப்பின் தடத்தை அப்படியே அச்சாக உருவகப்படுத்த நினைக்கும் எழுத்தின் பேராசை; நிகழமுடியாத இந்த உருவகப்படுத்தல் தருகிற மொழியின் போதாமை குறித்த உணர்வு; வழுக்குத்தரையின் பாதரசத் துளிகளாக எதிர்பாராத இலக்குகளை அடைந்துவிடும் எழுத்தின் சாத்தியம் என்கிற மும்முனைகளில் முளையடித்துக் கட்டப்பட்டிருக்கிறது இந்தக்கட்டுரை.

Joseph Mallord William Turner | Rain, Steam, and Speed - The Great Western Railway | NG538 | National Gallery, London

Rain, Steam, and Speed. Courtesy: J.M. William Turner, 1844.

’மழையின் குரல் தனிமை’ தலைப்பே ஒரு புதிர்முடிச்சை கண்முன் வைக்கிறது; உலகின் மற்ற எல்லாக்குரல்களையும் சிறுக்கவைத்து தனித்தோங்கும் உரத்த மழையின் சப்தமா, அல்லது மழைமேல் தற்குறிப்பேற்றப்பட்ட மனிதத்தனிமையின் உருவா, அல்லது  தன்னந்தனிமையிலிருக்கும் மழைக்குரலின் விவரணையா: இந்தக்கேள்விகளில் தொடங்கிய என் வாசிப்பு பலகேள்விகளாக விரிந்து  கடைசிப்பக்கம் வரை பதில்கள் கிடைத்ததும் கிடைக்காமலும் சாயங்கால மயக்குநிறத்தில் என்னில் தங்கியிருப்பதை இந்தக் குறுநாவலின் பெருங்கவர்ச்சியாக நினைக்கிறேன். குறுநாவலில் மழை ஆகமுக்கியமான கதாபாத்திரமாக,  துவக்கத்திலிருந்து முடிவு வரை நிகழ்வுகளை உந்திச்செல்லும் உபகரணமாக இருப்பது எளிதில் புரிந்துவிடக்கூடியதுதான். ஆனால், கண்களை அகலவைக்கிற நிகழ்வுகளின் மாயயதார்த்தக்களமாக மழை அமைவது  அணுக்க வாசிப்பில் (close-reading) ஒரு விளையாட்டுத் தாமதத்தோடு பிடிபடுகிறது.

மிகுபுனைவு, மாயயதார்த்தவாதம், அற்புதயதார்த்தம் போன்றவை குழம்பி அறியப்பட்டிருக்கும் நம் இலக்கியச்சூழலில் இவற்றுக்கான வித்யாசங்களை இங்கே சுருக்கமாகவாவது சுட்டவேண்டியது அவசியம். அதிசயம் என்று கருதத்தக்க/சொல்லத்தக்க நிகழ்வுகள் (எடுத்துக்காட்டாக, வான் நட்சத்திரங்கள் வெட்டுக்கிளிகளாக கீழே பாய்வது, வாளிகள் இறக்கைகள் கொண்டு நிலத்திலிருந்து எழும்புவது போன்றவை) கதையில் வருகிற கதாபாத்திரங்களுக்கே அதிசயவுணர்வு அல்லது அன்றாடத்திலிருந்து மாறுபட்ட உணர்வைத் தரும்போது, கதையாடல் மிகுபுனைவின் தன்மை கொள்ளுகிறது.  இதற்கு மாறாக, அதிசயம் அல்லது விசித்திரம் இயல்பான, சாதாரணமான, செப்பம் செய்யப்படாத ஒன்றாக அன்றாடத்தில் அப்படியே இருப்பதாக புனைவில் எடுத்தாளப்படுவதை அற்புதயதார்த்தம் என்று சொல்லலாம். இவை இரண்டிலிருந்து வேறுபடுகிறது மாய யதார்த்தவாதம். 1920-களில் ஜெர்மானிய கலை-ஓவிய விமரிசகர் ப்ரான்ஸ் ரோ முன்மொழிந்த மாய யதார்த்தவாதம், அரசியல் நோக்கங்கள் பொருண்மையாகத் தென்படாத வெளிப்பாட்டியல் ஓவியக்கலையோடு (expressionist painting) முதலில் தொடர்புறுத்தப்பட்டது. பின்னர், கியூப எழுத்தாளர் அலெயோ கார்பெண்ட்டியரால் இயற்கை மற்றும் தொன்ம வளமை ததும்புகிற, பல்வேறு கலாச்சார மக்களும் பிணைந்து வாழ்கிற லத்தீன் அமெரிக்க நிலப்பரப்புக்கே உரித்தானதொன்றாக மொழியப்பட்டது. ஆனால் விரைவிலேயே உலகின் பல்வேறு இலக்கிய விமரிசகர்களால் லத்தீன் அமெரிக்க இலக்கியப்பரப்பைத் தாண்டிய எழுத்தாளர்களின் (எடுத்துக்காட்டாக, கரீபிய எழுத்தாளர் ஐமி செஷைர், சல்மான் ரஷ்டி) ஆக்கங்களுக்கும் பொருத்தப்பட்டது.

இலக்கியத்தில் மாய யதார்த்தவாதத்தை அடையாளப்படுத்தும் முக்கியமான கூறு, எதிரும்புதிருமாகத் தோன்றுகிற ஆனால் அருகருகே இருக்கும் இருவகையான தோற்றவியல்களைச் (ontologies) சுட்டுகிற மொழிக்குறிகளாலான கதையாடல் எனலாம். இருவகைத் தோற்றவியல்களில் ஒன்று, பொருண்மையான, காரணவிளக்கம் அல்லது தர்க்கம் சார்ந்தது; இன்னொன்று காரணவிளக்கத்துக்கு, தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட மீ-இயல்நிலை (super real) சார்ந்தது.  மீ-இயல்நிலை சார்ந்த  தோற்றவியல்,  காரணவிளக்கங்களை இடையறாது கோருகிற மற்றதைத் தகர்த்துக்கொண்டு இருப்பதை மாய யதார்த்தவாதக் கதையாடல் சுட்டுகிறது. இத்தகைய கதையாடலில், மீ-இயல்நிலையை முன்வைத்து வருகிற விவரணைகளும் வெளிப்பாடுகளும் எழுத்தில் அன்றாட யதார்த்தம் (daily reality) பெருவாரியாகக் காரண-தர்க்கம் சார்ந்து பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் கேள்விகேட்கின்றன; பிரச்சினைக்குள்ளாக்குகின்றன. மேலும் ஓர்மையான ஒன்றாக அன்றாடத்தைக் காட்டுக்கிற யதார்த்தவாத எழுத்துலகம் முழுமுற்றான, உண்மையானதொன்றல்ல, அன்றாடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற பலவித மொழி வெளிப்பாட்டுப்பாணிகளில் ஒன்று மட்டுமே என்பதை மாய யதார்த்தவாத  எழுத்துகள் உணரச்செய்கின்றன. தவிர, மீ-இயல்நிலை x இயல்(பான) யதார்த்தம் என்கிற பாகுபாட்டை எழுத்தை, இலக்கியத்தை முன்வைத்துச் பரிந்துரைக்கும்போது, இந்தியா போன்ற கலாச்சார நிலப்பரப்புகளில் அன்றாட யதார்த்தம் என்று பலராலும் உணரப்படுவது இத்தகைய பாகுபாடு கொண்டதாக இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். (அரசியல் எதிரிகள் ஒழியவேண்டி, சீருடையணிந்த நவீனக் காவலர்கள் பாதுகாப்பு தர, நள்ளிரவின் யாகத்தில் மிளகாயெரித்து நடக்கிற பூசைகள்; சந்தனக்காட்டு வீரப்பன் மடிந்தவுடன் மாரியம்மன் கோயிலில் காவல் அதிகாரி மொட்டையடித்துக்கொண்டு பூமிதித்துச் செய்த நேர்த்திக்கடன்கள்; தெய்வத்துக்கும் நவீனக் காவல்நிறுவனத்தின் அதிகாரப்படிநிலைக்கும் ஒருசேரக் கீழ்ப்படிதலைச் சுட்டுவதாக அந்த அதிகாரியைப் போலச்செய்த கீழ்நிலை அதிகாரிகளின் பூமிதிகள்; இத்தகைய சூழல்களில்தாமே வாழ்கிறோம்?)

 

விநோதமான நான்கு காதல் கதைகள் | விநோதமான நான்கு காதல் கதைகள் - hindutamil.in

(நிழற்படத்துக்கு நன்றி: இந்து தமிழ் திசை)

குறுநாவலில் பிற்காலக் காலனீய வரலாற்றுப்பின்னணியில் மாய யதார்த்தத்தின் வெளியாக வருகிறது மழை; கூடவே வம்சாவளியொன்றின் கண்ணியாகவும் தன்னையது வடிவமைத்துக்கொள்கிறது. ’பாரமகால் வட்டாரத்தில் நூறுவருடங்களில் முன்னெப்போதும் பெய்யாத பெருமழை’ என அரசுக்குறிப்பில் இடத்தைப்பிடிக்கிற பிரளயம் போன்றதொரு மழையில் எந்த மாமழையிலும் இயல்பாக நேர்வதுபோல உயிர்ச்சேதங்களும் பொருட்சேதங்களும் நேர்கின்றன; அதே நேரத்தில் விசித்திரமான மீ-இயல் தருணமாக அந்தப் பெருமழையின் முதல்துளி விழுந்தகணத்திலேயே காலத்தை உறைந்து நிற்கச்செய்கிறது. பெரிய கண்ணாடிக் குண்டுகளாக மேலிருந்து பொழிந்த நீராக, தன் யுகாந்தரத் தனிமையை வெறுத்துப் பெய்த கோரதாண்டவமாக விவரிக்கப்படுகிறது அந்த மழை. மனித ஞாபகத்திலிருந்து வருடங்களை அழித்துப்போடுவதாகவும், வன்மத்தோடு வசிப்பிடத்தைக் குலைத்துபோடுவதாகவும் நோய்களை ஏவிவிடும் மந்திரவாதியாகவும் கொலையாளியாகவும் அந்த மழை தன்னை வெளிப்படுத்துகிறது.  ஒருவருடத்திற்காவது வானத்தில் சூரியசந்திரரும் நட்சத்திரதேவதைகளும் வானத்தில் இடம் கிடைக்காமல் தவிக்கப் போகிறார்கள் என்று சோதிடர்கள் கூறுகிறார்கள். இப்படி மாயயதார்த்தவெளியாக விரிகிற அந்த மழை கூடவே பரமசிவம்பிள்ளையின் வம்சாவளிக்குச் சாரங்கன் என்கிற தத்துப்பிள்ளையையும் கொடுக்கிறது.

பரமசிவம் பிள்ளை ஜமீன்தாருக்காக எழுப்பிக்கொண்டிருந்த மாளிகையைக் குலைத்த மழை வருடங்கள்பல சென்றபின் அதேநிலத்தில் தனக்காக வீடொன்றை மழைவீடு என்கிற பெயரில் சாரங்கனின் வாயிலாகக் கொள்ளுகிறது, வாழ்விடத்தை மழை குலைத்தலுக்கும் கொள்ளுதலுக்கும் இடையே, முன்–நவீன காலகட்டத்திலிருந்து காலனீய நவீனத்துக்கு நகரும் சமூகத்தில், குடிமக்களின் நிலத்தின் மீது காலனீய நவீன அரசின் அதிகரிக்கிற கட்டுப்பாடு, நவீன அரசதிகாரத்திலும் சட்டத்திலும் எழுத்துமொழி மேலாண்மை பெறுதல் போன்ற அவதானிப்புகள் நுண்மையாகச் செருகப்படுகின்றன. மழைவீடு அமைகிற நிலம் முன்னொரு காலத்தில் பசவண்ணாவுக்கு வாய்மொழியாக உறுதியான பாரம்பரிய நிலம்; ஜமீன்தார் ஒருவரின் செல்வாக்குடைய கண் நிலத்தின்மீது பட்டவுடன் பசவண்ணாவின் உரிமையை நிரூபிக்கிற எழுத்துபூர்வ ஆவணத்தை வெள்ளைக்காரச் சர்க்கார் கோருகிறது; ஆவணம் இல்லாத பசவண்ணா சர்க்காருக்கான பதிலாகத் தன் உரிமையை நிறுவத் தற்கொலை செய்துகொள்கிறான்; பின்னும், ஜமீன்தாரின் மாளிகையைக் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன; கடைசியாக இந்தக் கட்டுமானத்தைச் “சல்லடைக்கண்களாய்த்” துளைத்துப்போடுகிறது மாமழை; இந்த விவரணைகளில், மாய யதார்த்தவாதத்தைக் களமாகக் கொண்ட மழையென்னும் குறி நவீன காலனீய சட்ட முறைமைகளுக்கும் ஒழுங்குக்கும் எதிராக, எதிர்ப்பாக அர்த்தம்பெறுகிறது.

குறுநாவலில் சாரங்கனுக்கும் மழைக்குமான உறவின் வண்ணங்கள் பல: அந்தப் பிரளயம்போன்ற மாமழைநாளில்தான் சகதியில் மழையின் புதல்வன்போலும் சாரங்கன் கண்டெடுக்கப்படுகிறான்,. அவனது வளர்பருவத்தில் மழை விந்தைகளையும் ஒளிவிடங்களையும் வழிகாட்டியாக அவனுக்குக் காட்டித்தருகிறது. வளர்ந்தபின் அவன் வளர்ப்புத்தந்தை முடிக்காமல்விட்ட வீட்டை அவன் கட்டுகிறபோது கட்டுமானப்பணிக்கு உகந்தவிதத்தில் பெய்கிற மழை அவனுடைய ”விசுவாசமான வேலையாளாக” நடந்துகொள்கிறது. இவற்றையெல்லாம் விட, மழைக்கும் சாரங்கனுக்குமான நட்பு பல இடங்களில் நாவலில் குறிப்பிடப்படுகிறது. மழைவீடு என்று பின்னர் ஊர்மக்களால் வழங்கப்படுகிற வீட்டை நண்பனான மழைக்காகவும் கட்டுகிறான் சாரங்கன், அவன் குழந்தையாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்திலேயே.

மழையின் நீர்மையோடு வாசங்களோடு இயைந்து அமைகிற மழைவீடு ஒரு கண்ணாடியேபோல மழையின் பிம்பவுருவான ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறது சாரங்கனுக்கு. கமலம் மழையின் பிம்பமேதான்: மழை=வளமை என்கிற சமன்பாடு கமலத்துக்கும் பொருந்துவதே.  நித்தியசுமங்கலி அவள். ஊரில் அவள் பிரபலமான பிறகு பெண்கள் பலருக்கு “திருமணக்கொடுப்பினை” நேர்கிறது. ”சாந்திமுகூர்த்த அறையினுள் கமலத்தின் வாசனையும் காலடித்தடங்களும் பதிந்திருக்கின்றன. எவ்வளவு தொலைவாக இருந்தாலும் கர்ப்பிணிப்பெண்கள் வலியின்போது கமலத்தின் சிரிப்பைத் தெளிவாகக் கேட்கிறார்கள்” ஆக, மழையைப்போலவே, ஆனால் ஒரு குடும்பத்தின் என்பதன்றி, ஊரின் பலவம்சாவளிகளின் கண்ணியாக கமலம் பங்குகொள்கிறாள். மேலும் மழையைப்போலவே, மாயயதார்த்த நிகழ்வுகளின் களமாக, ஆனால் மனிதவுருவாக கமலமும் இருக்கிறாள்: ”கமலம் தன் சிரிப்பால் கலெக்டர் துரையின் காரை நிறுத்தி வைத்த சம்பவத்திலிருந்து ஊர் அவள் மந்திரவித்தைகள் தெரிந்தவளென்று நம்பத் துவங்கியிருந்தது.” மழைபோன்று கமலமும் நீரோடு தொடர்புடையவள்: குழந்தைப்பருவத்திலிருந்து கண்ணீரே தெரியாத, நீர்சார் நோய்வாய்ப்படாத சாரங்கனின் கண்களில் அவளைப் பார்த்தபின் நீர்சுரந்து இறங்குகிறது; முதன்முறையாகக் காய்ச்சலில் விழுகிறான்.

 

மழைவீட்டில் தன்மேல் காதல்கொண்ட கமலத்தோடு சாரங்கன் கலவிசெய்கையில், சாரங்கனுக்கும் மழைக்குமான உறவின் இன்னும் தீர்க்கமான தருணங்கள் வெளிப்படுகின்றன: அப்போதும் மழை; சாரங்கன் “மழையின் நேர்ப்பார்வையில் முளையடித்து நிறுத்தப்பட்டிருந்தான். … தன் நிர்வாணத்தை மழையின் விழிகளால் தானே பார்த்துக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியபோது வெட்கத்தால் அவன் ஆண்மை கூசிப்போய்விட்டது. தன்னைப்பின்னிப் படர்ந்துகொண்டிருந்த கமலத்தைப் பிடுங்கி அப்பால் எறிந்தான்.” மழையின் கண்கள் எவ்வுணர்வைக் காட்டின? பொறாமையையா, பொறுமையின்மையையா? யுகாந்தரத்தனிமை கொண்டதென்று விவரிக்கப்படுகிற மழை தன் நண்பனான சாரங்கனை கமலத்தோடு பங்குபோட்டுக்கொள்ள இசையுமா என்ன? கமலத்தை அவன் பிடுங்கியெறிந்தது அதனால்தானா? மழையின் விழிகளால் தானே பார்த்துக்கொள்வது மழை தனியாக வேறு எதுவுமல்ல, சாரங்கனேதான் அது என்பது பொருளா? கமலத்தைத் தள்ளிவிட்டு “தன்னைக் கேலி செய்யும் வழிகளைக் கண்டுபிடித்துவிடும் வெறியுடன் தந்திரத்துடன்” வாசலை நோக்கி ஒடுகிறான் சாரங்கன். அப்போது அவன் ”அறைக்கு வெளியே காலங்காலமாய் தொடர்ந்துகொண்டேயிருக்கும் அந்தப்பார்வையின் புனைவே தான்” என்று தன்னைக் கண்டுகொள்கிறான். கதையில் இப்போது புதுப் பரிமாணத்தைப் பெறுகிறது மழை. மழையின் கண்களால் தன்னைத்தானே பார்த்துக்கொள்வதிலிருந்து நகர்ந்து அதன் ”நேர்ப்பார்வையின்” புனைவாகச் சாரங்கனாகும்போது, மழை மனிதம்கடந்த படைப்பூக்கத்தின் மூலக்குறியாக மாறுகிறது.

கதையின் போக்கில் முதலில் நண்பனாக, துணையாக, ஒருவகையில் தன் பிம்பத்தை மழையில் காண்கிறான் சாரங்கன்; பின் பிம்பத்துக்கும் தனக்குமான இடைவெளி நீக்கப்பட்டு, மழையின் விழிகள் அவன் விழிகளாக,  தானே மழையாக மாறுகிறான். அடுத்த கட்டத்தில், அவன் என்பது மனிதசுயமற்றுப்போய் மழையின் பார்வையின் புனைவாக ஆகிவிடுகிறான். சாரங்கனே மழைவிழிகளின் புனைவாகும்போது அவன் கட்டியதாகச் சொல்லப்படுகிற மழைவீட்டின் பொருளென்ன, அதன் இருப்பின் நியாயம் என்ன என்று யோசிக்கவேண்டியிருக்கிறது.

வெளியும் முக்காலமும் தனக்குச் சொந்தமான மழை, புவிநிலத்தில் எளிய மனிதரோடு அணுக்கமாக, அணுக்கமான ஓரிடத்தை மழைவீட்டில் பெறுகிறது என்று சொல்லலாம். செல்வ பலம் மற்றும் அரசதிகாரத்தால் மோசம்செய்யப்பட்ட ஒருவனின் நிலத்தை அவனுக்குப் பதிலாக, பின்னுமாக மழைவீட்டின் இருப்பின்மூலம் அது காவல்காக்கிறது; பொருண்மையாக உடனடி-உட்தன்மை (immanence) கொண்டதாக இருப்பிடம் என்கிற அர்த்தத்தில் மழைவீடு தோற்றங்கொண்டாலும், பாதிக்கப்பட்டவரின் நீதிக்கான ஒரு அப்பாலைக்குறி (transcendental sign) அது.  மாய யதார்த்தம் மழையின் இருப்பிடமான மழைவீட்டுக்கும் ஆகுபெயர்க்கணக்காக நீளுகிறது. விருட்சத்தின், மிருகத்தின் சாயல்கள் கொண்ட கட்டிடமெனச் சொல்லப்படுகிறது மழைவீடு; வீட்டின் அமைதியைக்குலைக்கும் வகையில் சப்தம் வந்தால் கோபத்துடன் கட்டிடம் அரக்கனைப்போல் எழும்புகிறது; கொடிகளின் இலைகளை உதிர்த்து அதிருப்தியையும் பயத்தையும் காட்டுகிறது; அதன் நிலைப்படியில் கட்டப்பட்டிருக்கிற வாழையிலைகளும் தோரணங்களும் வருகைதருபவர்களின் படபடப்பைத் தணிப்பவையாக இருக்கின்றன; அறைகளின் தூண்கள் அறைகளுக்குள்ளான சிறுசலனத்தையும் தீர்மானிக்கின்றன; வீட்டின் மொட்டைமாடியின் கைப்பிடிச்சுவரின்மேல் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் யாளிகளின் உமிழ்நீர் மழைப்பொழுதுகளில் நறுமணத்தை ஊருக்குள் பரப்புகிறது. இவற்றோடு புதுமனை புகுவிழா, விருந்தினர்கள் வருகை போன்ற “இயல்பெனக்” கருதப்படுபவையும் நடக்கிற வீடு இது.

குறுநாவலின் முதல்வரியில் பரமசிவம் பிள்ளையும், கமலத்தின் மகள் சிந்தாமணியும் மழைவீட்டின்முன் ”தத்தம் காலங்களிலிருந்து தனித்தனியே வெளிப்பட்டு” தத்தம் வண்டிகளிலிருந்து கீழே இறங்குகிறார்கள். பரமசிவம் பிள்ளைக்கு அந்த வீடு அவரால் நிறைவேற்றமுடியாத, ஆனால் அவர் மகன் ஏற்றுக்கொண்ட சவால். சிந்தாமணிக்கு அந்த வீடு அவள் தாய் கமலத்தின் சொற்படி கமலம் சாரங்கனிடம்பட்ட காதல்கடனை, ஆசையை நிறைவேற்றவேண்டிய இலக்கிடம். கட்டப்பட்ட மழைவீட்டின் உருவத்தில் பிள்ளை முன்னிருந்த சவால் அவர் காலத்திலேயே நிறைவேறிவிட்டதைப் பார்க்கமுடிகிறது; ஆனால், கமலத்தின் ஆசையை பூர்த்திசெய்ய முடிவதில்லை மகளால். திரும்பிவருகிற கமலத்தின் மகள் ”மஹா தனிமையிலிருக்கும்” இளைஞனொருவனைச் சந்தித்ததாகச் சொல்வதோடு ஒரு வட்டமடித்து முடிகிறது குறுநாவல்.

இளைஞன் யார், சாரங்கனின் மகனா, இருக்கலாம் என்று யோசிக்கிறபோது ”மஹா தனிமை” என்கிற வார்த்தைப்பயன்பாடு இங்கே மழையையும் சாரங்கனையும் நினைவுகொள்ளவைப்பதை எப்படித்தவிர்க்க முடியும்?  தவிரவும், சிந்தாமணி அந்த இளைஞனின் தோற்றம் குறித்து வைக்கிற விவரணைகள் சாரங்கனுக்குப் பொருந்துகின்றனவே? அப்படியானால் வருடங்கள் சென்றும் எப்படி இன்னும் இளைஞனாக? மாய யதார்த்தக் கதைவெளியில் இதுகுறித்து ஆச்சரியப்படவும் என்ன இருக்கிறது? மேலும் சாரங்கன் என்றும் இளமை பொலியும் மழையியற்கையும் அல்லவா?

ஆனால் என்னில் பிறிதொரு வாசிப்புத்தடம் கதையில் சாரங்கனின் நுண்மையான, மின்னிவெளிப்படும் இன்னொரு அடையாளத்தைச் சுட்டியபடியே இருக்கிறது. கன்னங்கரேலென்று மினுமினுக்கும் உடல், ஜொலிக்கும் கண்கள், மின்வெட்டித் தெறிக்கும் பற்கள், கமலத்தை விலக்கிவிட்டு எழுந்தபின்னால், தேடும்பாவனையில் (தலைகுனிந்து) முழங்காலிட்டு அறைக்குள் ஊர்கிற விதம், இவையெல்லாம் பாம்பை நினைவுறுத்துகின்றன. வளமைக்கும் பாம்புக்குமான சம்பந்தம், ஒரே சமயத்தில் மழையாகவும் கருநாகமாகவும் தோற்றங்கொள்ளும், தனிமையை விரும்பும் மாரியம்மனின் மாதிரி உரு, மழையின்/நீரின் மேல் அதீத ஆசையோடு அதைக் கவர்ந்து தன்னோடு வைத்துக்கொண்ட விருத்திர நாகம் என்ற ரிக்வேதத் தொன்மம், பலவும் ஞாபகத்தில் இயைகின்றன. நிலப்பிரச்சினைக்குப் பின் விஷமுண்டு மாய்ந்த பசவண்ணாவின் பெண்டுபிள்ளைகள்—அதே நிலத்தில் வாழ வருகிற (விஷப்) பாம்பின் அடையாளமுறுகிற சாரங்கன், இந்தத் தொடர்பு வெறும் தற்செயலா?  தன் தோலையுரித்துப் புதுப்பொலிவைப் பெறுகிற பாம்பு, என்றென்றும் இளமையோடிருக்கும் சாரங்கனாக ஏனிருக்கக்கூடாது?  அவனுக்கும் கமலத்துக்குமான கலவியுறவு தடைபடுவதுகூட மழையால் அல்லாமல் அவன் பாம்பினமாகவும் அவள் மனித இனமாகவும் இருந்ததால்தானா?

எந்த இலக்கியப்புனைவாக்கமும் முற்றான பதில்களைச் சொல்வதில்லை, மாறாக விடையில்லாத அல்லது பன்மையில் விடை கோருகிற கேள்விகளையே எழுப்புகின்றன. மாயயதார்த்தக்களத்தில் அழுந்திக் கால்பதிக்கும் இந்தக் குறுநாவலும் அவ்வாறே சில கேள்விகளை என்னில் முளைவிடச்செய்து, என் வாசிப்பின் தடத்தைச் செழுமைப்படுத்தியிருக்கிறது. இங்கே பதிவுசெய்யப்பட்ட தடத்திலிருந்து கிளைகள்பல இன்னும் பிரியலாம், குறுகலாம்; அல்லது இத்தடத்துக்கு மாற்றாக எண் திசைகளிலும் வேறு தடங்கள் உருவாகலாம். புனைவு என்பதே வாசிப்பவர்களுக்காகத் தன்னை நீட்டியும் குறுக்கியும், ஆனால் எப்படியும் பலவழிகளாகத் தன்னைக் கொடுக்கும் ஒரு படைப்புவெளியல்லவா?

(இந்தக் கட்டுரை காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் பா.வெங்கடேசனின் ’ராஜன் மகள்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.)