டெரெக் வால்காட் 1992இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசால் கௌரவிக்கப்பட்ட முதல் கரீபிய இலக்கியவாதி. பரிசுக்கு இரு வருடங்கள் முன்புதான் வால்காட்டின்  காவியம் போன்ற கவிதை நூலான ஒமெரோஸ் வெளியாகி விமர்சகர்களாலும் நாளிதழ்களாலும் பாராட்டப்பட்டிருந்தது. கவிதை, நாவல், காவிய, புராண வகைமைகளைக் கலைத்துப்போட்ட நூல் அது.

மேற்கிந்தியத் தீவுகளில் காணப்படும் கரீபிய பண்பாட்டு அரசியல் வரலாற்றையும் புவியியலையும்  இணைத்த கவிதைகளைக் கொண்ட “ஸ்டார் ஆப்பிள் ராச்சியம்” (1979) போன்ற கவிதைத் தொகுப்புகளுக்காக வால்காட் பெரிதும் அறியப்பட்டிருந்தாலும், அவர் நாடகங்களையும் எழுதியிருக்கிறார்.  “ஞாபகமும் சைகைமொழியும்” (1980), “இரைச்சல்களால் நிரம்பியுள்ளது தீவு” (1982) போன்றவை அவற்றில் சில.  விமர்சகராக, கட்டுரையாளராக, பத்திரிகையாளராக பல்வகைகளில் பங்களித்தவர் வால்காட். அவருடைய ”அந்தி என்ன சொல்கிறது?” எனும் நூல், கவித்துவ மொழிநடையிலான இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு.   பிற்காலனியப் பண்பாட்டில் எழுத்தாளருக்கும் மொழிக்குமான உறவைப் பரிசீலிக்கிற நூல் அது.  ஓவியத்தையும் நேசித்தவர் அவர்.

இறைநிந்தனை (?) கவிதை

வால்காட்டின் முதல் கவிதை அவரது பதினான்காம் வயதில், செயிண்ட் லூசியாவின் உள்ளூர் நாளிதழில் (1944) வெளியானது. கடவுளை  தேவாலயத்தின் மூலமாக அன்றி இயற்கையின் வாயிலாக அறிதலைப்  பேசிய கவிதை அது (வால்காட்டின் நேர்காணல், பாரிஸ் ரிவியூ, 37). அந்தக் கவிதை சர்ச்சையைக் கிளப்பியது.  இறைநிந்தனை செய்கிறது என்று உடனடியாக ஒரு பாதிரியார் மறுப்பெழுதினார். முதல் கவிதைப் பிரசுரத்துக்குப் பின்னர் சில வருடங்களிலேயே, “25 கவிதைகள்” கவிதைத் தொகுப்பையும் (1948) அடுத்த ஆண்டே இன்னொரு தொகுப்பையும் வால்காட் பதிப்பித்தார். என்றாலும் அவரது “ஒரு பச்சை இரவில்” (1962) என்ற தொகுப்பே உலக வாசகர்களின் கவனத்தை பெருமளவில் முதலில் ஈர்த்த தொகுப்பு. அதில் “தீவுகள்” கவிதை கரீபிய நிலப்பரப்புக்கே உரித்தான கடலின் தொனியோடு காதலையும் மொழியையும் இசைத்துப் பார்க்கிறது. உருவகநயம் மிக்க கவிதை இது. சில வரிகள்:

தீவுகள்

(மார்கரெட்டுக்காக)

அவற்றுக்கு பெயர்களை மாத்திரமிடுவது

நாட்குறிப்பாளரின் உரைநடை போன்றது.

படுக்கைகளையும் கடற்கரைகளையும்

பயணிகளைப் போல ஒரேமாதிரி  பாராட்டும்

வாசகர்களுக்கு உன்னை ஒரு பெயராக ஆக்குவது.

ஆனால் தீவுகளோ, நாம் அவற்றில்

காதலித்திருந்தால் மட்டுமே இருக்க முடியும்.

மணலென மொரமொரத்த, கதிரொளியெனத் தெளிவான

சுருண்ட அலையெனக் குளிர்ந்த, ஒரு கோப்பை

தீவு நீரென சாதாரணமான

பாடலை எழுதத் தேடுகிறேன்

காலநிலை தனது பாணியைத் தேடுவதைப் போல;

என்றாலும் அதற்குப் பிறகோ  நாட்குறிப்பாளரைப் போல

நான் அவற்றின் உப்பு பீடித்த அறைகளை உள்ளார்ந்துச் சுவைத்தபடி

(கசங்கிய விரிப்புகளின் மடிப்புகளோடான

கடலைக் கலக்குகிறது உன் உடல்) . . .

 

வால்காட்டின் கவிதைமொழி

தீவுகளையும் கடலையும் வால்காட்டின் பல கவிதைகளில் நாம் காண்கிறோம். ஏன், கவிதையைகூட வால்காட் மைய நிலம் என்று அவர் கருதுகிற நிறுவனங்களின் மொழியிலிருந்து விலகியுள்ள தீவாகவே உருவகப்படுத்துகிறார் (அவரது நோபல் பரிசு ஏற்புரை). அவர் பார்வையில், கவிதைமொழி என்பது நூலகம், அகராதி, நீதிமன்றம், அரசியல் சித்தாந்தம், தேவாலயம், பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் கட்டமைக்கும் மொழிநடையை மறுப்பது. இயற்கையும் சிற்பப் பளிங்குத்தன்மையும் கூடியதாகக் கவிதைமொழியை அவர் காண்கிறார். நெற்றியில் பனி/மழைத் துளிகள் வேர்வைத் துளிகளென மின்னுகிற சிற்பம். சிற்பமாக உருவகிக்கப்படும் கடந்தகாலத்தோடு பனி அல்லது மழை முத்துகளாக நிகழ்காலம் இணைந்து கவிதை உருக்கொள்வதாக அவர் கூறுகிறார். அகழ்வதாகவும் தன்னைக் கண்டடைவதாகவும் இருக்கிறது கவிதை; அதே நேரத்தில் கடந்த காலம், புதைமொழியாகவும், நிகழ்காலம்  கவிதையில் வெளிப்படும் சொல்வளமாகவும் உள்ளது.   சொல்வளமும் இசைத்தன்மையும் பிணைந்த  கவிதைகளின் தொனிகளை தனித்த  வழக்காறுகள் என்றே அவர் கருதுகிறார்.

இன்னொரு தளத்தில், வால்காட், கவிதை என்கிற கலை வழக்காறோடு மேற்கிந்திய மக்கள் வழக்காறுகளை இணைத்துப் பார்க்கிறார். கரீபிய மண் ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்க வரலாற்றையும், கொத்தடிமை வரலாற்றையும், இந்தியா சைனா போன்ற நாடுகளிலிருந்து வந்திறங்கிய தோட்ட ஒப்பந்தக் கூலி வரலாற்றையும் கொண்டது. தீவுகளாலான நிலப்பரப்பாலும், இனம், மொழி, பண்பாட்டு அடிப்படைகளாலும் வேற்றுமை விகசிக்கும் மண் அது. அந்த மண்ணில் மக்கள் வழக்காறுகள் அவர்கள் அனுபவித்த கொத்தடிமை, கூலி ஒப்பந்த ஜீவன அல்லல்களை மீறி, மூதாதைய ரத்தத்தோடும் விட்டுப் பிரிந்த நிலங்களின் தாளலயத்தோடும் திமிறிக்கொண்டு எழுந்திருப்பவை என்ற பெருமிதம் அவருக்குண்டு. மழையும் உப்பும் சேர்ந்த புத்துணர்ச்சி கூடியவை இந்த வழக்காறுகள் என்கிற அவர் அவற்றைக்  கவிதைகளில் கொண்டுவரத் தவறவில்லை. அதேபோல, அவர் பன்மைப் பண்பாட்டுத்துவம் (multiculturalism) செழிக்கும் மேற்கிந்திய மரபைக் கவிதையில் கொண்டாடவும் செய்தார். மேற்கிந்திய தீவிலிருந்து வந்த வி.எஸ். நைபால்  “பண்பாட்டு வெறுமை” என்று புறந்தள்ளியதற்கு  எதிரான நிலைப்பாடு வால்காட்டுடையது.  வால்காட்டின் கவிதையின் அழகியலே நிலத்தையும் காலத்தையும் வளங்களையும் காலனியத் துயர வரலாறுகளையும் பன்மைச் சமூகங்களிடையிலான பகிர்வாக முன்வைப்பது. அவரது ஒரு கவிதையில் கவிதைசொல்லியின் சுய அடையாளமாக வருகிற வரிகள் இவை:

கடலை நேசிக்கும் நான் வெறும் சிவப்பு நீக்ரோ

எனக்குச் சிறந்த காலனியக் கல்வி கிடைத்திருக்கிறது

என்னில் டச், நீக்ரோ, ஆங்கிலேயர் உண்டு

ஒன்று, நான் யாருமில்லை, அல்லது நானொரு தேசம்

எழுத்தியக்கத்தின் தனித்துவம்

வித்யாசங்களால் வளம் பெற்றிருக்கும் கலையின் சொல்லாடலை  காலனிய ஒடுக்குமுறை வரலாற்றுக்கு எதிர்வினையாக வால்காட் வைத்தார். அவரின் எழுத்தியக்கத்தைக் காலனியப் பேரரசுக்கு எதிராக எழுதுதல் எனலாம். ஆனால் இந்த எழுத்து வெறுப்புப் பேச்சாக இல்லை. தன் பாரிஸ் ரிவியூ நேர்காணலில் “அந்த அடிமையின் முதலாளி என்ன செய்தான் பார் என்றெல்லாம் பிணங்கிச் சொல்லிக்கொண்டே இருந்தோமானால் பக்குவமடைய மாட்டோம். … கரீபிய எழுத்தில் இந்த ஒரு மனோநிலை அதிகம் இருக்கிறது: பழைய புண்ணை வருடிச் சொறிவது. மறக்க விரும்ப வேண்டும் என்றில்லை. மாறாக, ஒருவர் காயத்தை  உடலின் பகுதியாக ஏற்றுக்கொள்வதைப் போல  ஏற்றுக்கொள்வது. அதன் பொருள் வாழ்நாள் முழுக்க காயத்தையே பேணவேண்டும் என்றில்லை.” கவிதைக் கலையின் வாயிலாக வரலாற்றை எதிர்கொண்டு ஆனால் விடுபட்டுச் சென்றதில் வால்காட்டுக்கு இணையாக சிலர் மட்டுமே உண்டு.

மேற்கிந்தியத் தீவுகள் பெருநகரங்களிலிருந்தும் வேறு கண்டங்களிலிருந்தும் வருபவர்களுக்கு கற்றுத் தருவதாக இரண்டு விஷயங்களை அவர் சொல்கிறார்: ஒன்று, பன்மையினச் சமூக வாழ்க்கை; இரண்டாவது: வரலாற்றை (ஆக்கபூர்வமாக) அழித்தல். இங்கும் கரீபியத் தீவு உருவகமாகிறது. இடையறாது அலைகளால்  களையப்படுகிற  மணல் எழுத்துகள். வரலாற்றின் கடிகாரக் கணக்கை மீறிய தொடரியக்கம்.   வால்காட்டின் நண்பரும் கவிஞருமான ஜோசப் ப்ராட்ஸ்கி, வால்காட்டின் துடிப்போடான வரிகள்  “தளர்வறாது துடிக்கின்ற பேரலைகள் போல” கவிதைகளென்ற தீவுக்கூட்டத்தை  கட்டமைத்தன, அவையற்ற நவீன இலக்கியத்தின் வரைபடம் வெறும் வால்பேப்பராக இருந்திருக்கும் எனக் கூறுகிறார். தன் கவிதைகளின் வாயிலாக சகவாழ்வை, ஒன்றிப்பை தொடர்ந்து வலியுறுத்திய வால்காட்டின் எழுத்தியக்கத்தை இதைவிடப் பொருத்தமாக விவரித்துவிட முடியாது.

(இக்கட்டுரையின் பெரும்பாலான பகுதி, மார்ச் 17, 2017 அன்று வால்காட் இறந்தபோது அவருக்கான என் அஞ்சலிக்குறிப்பாக இந்து தமிழ் திசையில் வெளியானது.)