வாசல்
இந்தத் தொகுப்பிலிருக்கும் குறுங்கதைகள் எல்லாம் இவ்வருடத்தின் (2020) மே மாதத்திலிருந்து தொடங்கி ஜூலை வரையில் கிடைத்த கால அவகாசத்தில் எழுதப்பட்டவை. கொரோனாவின் பிடியில் உலகமே ஸ்தம்பித்துக் கிடக்கும்போது புனைவில் என்னை விரும்பித் தொலைத்த மாதங்களாக இவை இருந்தன. அரேபிய “ஆயிரத்தோரு இரவுகள்” கதைகளின் வழியாகச் சாவைத் தள்ளி வைக்க முடியுமென்ற ஷரசாத்தின் நம்பிக்கை ஒரு தொன்மமாக மனத்தில் படிந்திருந்ததாலோ என்னவோ, இக்கதைகளை எழுதிய நேரங்களில் சாவைத் தள்ளி வைத்ததைப் போல் ஒரு பிரமை. ஒன்று நிச்சயம், குறுங்கதைகளாக இருக்கட்டும், கவிதைகளாக இருக்கட்டும், படைப்புச் செயலில் மூழ்கும்போது தொற்றுப் புள்ளிவிவரங்கள் தலைக்கு மேல் தாண்டிச் சென்றுவிடுகின்றன.
குறுங்கதை என்ற பதத்தை நெகிழ்வாக நுண்கதையைக் (microfiction) குறிக்கும் முகமாகவும் ஒளித்தெறிப்புக் கதை (flash fiction) என்ற வகையில் வரக்கூடிய சாத்தியத்திலும் பயன்படுத்துகிறேன். இவற்றை வரையறுப்பது சிக்கலானது. பரந்த உலகத்தின் குறுக்குவெட்டான ஒரு தோற்றத்தைக் குறைந்த வார்த்தைகளில் நிகழ்த்திக்காட்ட முனைவதாகப் பொதுப்படையான ஒரு அம்சம் இவற்றுக்கு இருக்கிறது. நாளும் அதிவேகமாக மாறிக்கொண்டே வரும் தற்கால உலகத்துக்கான முதன்மையான இலக்கிய வடிவமாகக் குறுங்கதையைக் கருத முடியும். என்றாலும் குறுங்கதை வகைமை இன்று முளைத்ததல்ல. என் ஆதரிச எழுத்தாளர்களில் ஒருவரான காஃப்காவின் “The Fratricide,” “Give it up” போன்ற கதைகள் அவருக்கே உரிய, வாழ்வின் அபத்தம் குறித்த கூரிய பார்வை பொதிந்த குறுங்கதைகளாகக் கொள்ளத்தக்கவை. போர்ஹெஸ் எழுதியிருக்கும் “Covered Mirrors,” “On Exactitude in Science,” “Argumentum Ornithologicum” போன்ற கதைகள் இன்றளவும் புதுமையில் மிளிர்பவை. எர்னஸ்ட் ஹெமிங்வே, யாசுனாரி கவாபட்டா, ஜூலியோ கொத்தஸார் போன்றவர்களும் குறுங்கதையில் பிரகாசித்திருப்பவர்கள்.
குறுங்கதை வகைமையைப் பிரசித்தி பெறச் செய்த லிடியா டேவிஸைக் கேள்விப்படாத இலக்கிய வாசகர்கள் அபூர்வமாகவே இருக்க முடியும். காஃப்காவின் படைப்புகளின் அபத்தத் தன்மை டேவிஸிடத்திலும் கொஞ்சம் உண்டு. குறுங்கதையில் எனக்கு ஆர்வத்தைத் தூண்டியவை டேவிஸின் படைப்புகளே. அவற்றோடு எட்கர் கெரெட், ஸ்டூவர்ட் டைபெக், டேவிட் காஃப்னி முதலியோரின் ஆக்கங்கள் என்னைக் கவர்கின்றன. தமிழிலும் குறுங்கதையில் சில நல்ல முயற்சிகள் முன்னர் நடந்திருக்கின்றன. உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் பேயோன். கொரோனா ஊரடங்கு காலத்தில் பா.ராகவன், சுரேஷ்குமார இந்திரஜித், எஸ். ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களின் குறுங்கதைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.
என்னைப் பொருத்தவரை கவிதையை ஒப்பிட குறுங்கதை எழுதும் அனுபவம் வினோதமாக உள்ளது. கவிதை சட்டென உருக்கொண்டு விரைந்து வெளிப்படும் தன்மை வாய்ந்தது. குறுங்கதையோ நிதானமான அலை போல வந்து தீண்டுவதாக இருக்கிறது. ஒரு குறுங்கதை எழுதும்போது அடுத்தது எங்கோ தூரத்தில் உருவாகி மெல்ல நெருங்குகிறது. அடுத்ததை எழுதும்போது இன்னொன்று தொலைவில் தென்படுகிறது. படைப்பு மனவெளி என்பதைக் கவிதை உருவாக்கத்தில் எதிர்பாராத ஒளித் தெறிப்புகளின் வண்ணஜாலத்தில் மின்னுவதாக உருவகித்துக்கொண்டால், அது குறுங்கதை உருவாக்கத்தில் கடற்கரையின் சாயையைக் கொண்டிருக்கிறது. சென்னையிலேயே எனக்கு ஆகப் பிடித்த இடமான சாந்தோம் கடற்கரைக்குச் செல்ல முடியாத ஊரடங்குக் காலத்தில் எத்தனை ஆசுவாசமானதாக இந்த மனவெளி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
ஆசுவாசம் என்றவுடன் குறுங்கதை எழுதுவது எளிது என்று கொள்ள வேண்டாம். சமயத்தில் இருநூறு, முந்நூறு வார்த்தைகளில் அமையும் ஒரு குறுங்கதையை எழுத, திருத்த சில மணிநேரங்கள் ஆகின்றன. மொழியில் தேர்ச்சி மாத்திரமின்றி மொழிக் கட்டுக்கோப்பைப் பயிலாமல் நல்ல குறுங்கதையை எழுத முடியாது. மொழி லாகவத்தை இன்னும் பயின்றுகொண்டிருக்கிறேன்.
குறுங்கதை குறித்து தமிழ் இலக்கியச் சூழலில் உருவாகியுள்ள தப்பபிப்ராயங்களைப் பற்றியும் சில வார்த்தைகளைச் சொல்ல நினைக்கிறேன். ஒரு புறம், பலருடைய குறுங்கதை ஆக்கங்களைப் படிக்கும்போது அது கதைச் சுருக்கமாகவோ நகைச்சுவைத் துணுக்காகவோ வார இதழ் ஒரு பக்கக் கதையாகவோ புரிந்துகொள்ளப்பட்டிருப்பது தெரிகிறது. இன்னொரு புறம், கவிதையைப் போல குறுங்கதையையும் வரிக் கணக்கில் வைத்துக் குறைத்து மதிப்பிடுவது நடக்கிறது. ஆனால் குறுங்கதை என்பது புனைவில் இதர வடிவங்களுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல. குறுங்கதையைப் பொற்கொல்லரின் ஆக்கத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் நாவலைக் கற்தச்சரின் ஆக்கத்தோடு ஒப்பிடலாம். இரண்டும் வெவ்வேறு வகையிலான கற்பனை விகசிப்புகள். இரண்டுமே வெவ்வேறு தன்னுணர்வுகளை, திறன்களைக் கோருபவை. குறிப்பாக, குறுங்கதை சிறிய இடத்தில் ஆடிக்காட்ட வேண்டிய ஆட்டம். கொஞ்சம் தாளம் பிசகினாலும் ரசிக்காது. சிறிய இடம் என்றாலும் வழக்கமான கதையாக வளவளத்துக்கொண்டு போகாமல் நறுக்குத் தெறித்தாற்போல் கூறிச் செல்ல உதவுவதாகக் குறுங்கதை வகைமை இருக்கிறது. மொழிப் பரிசோதனைகளும் இவ்வகைமையில் சாத்தியம். இத்தொகுப்பிலுள்ள “இது நடந்த கதை,” “ உறவு” போன்ற கதைகள் சில உதாரணங்கள்.
இத்தொகுப்பின் பெரும்பாலான குறுங்கதைகளை உடனுக்குடன் வாசித்து கருத்து கூறியவர்கள் ஹரி இராஜலெட்சுமியும் கிருஷ்ண பிரபுவும். அவர்கள் உற்சாகப்படுத்தியிராவிட்டால் இத்தொகுப்பு வெளிவந்திருக்க வாய்ப்பில்லை. அரவிந்தன் கதைகளின் கடைசி வரைவைப் படித்துவிட்டு உரையாடினார். முதன்முதலில் குறுங்கதைகளைப் பிரசுரிக்கத் தயங்கியபோது சுனில் கிருஷ்ணனும் ஜீவ கரிகாலனும் தண்ணீருக்குள் என்னைப் பிடித்துத் தள்ளினார்கள். அவர்களை இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். போலவே என். சத்தியமூர்த்தியையும். கதைகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டபோது பல நண்பர்களும் வாசகர்களும் தங்கள் எதிர்வினைகளால் கௌரவப்படுத்தினார்கள். என் குறுங்கதைகளைப் பற்றி எழுதிக் கவனப்படுத்தி புதிய வாசகர்களை ஈட்டித் தந்த பா. ராகவனுக்கும் சாரு நிவேதிதாவுக்கும் என் மனம் கனிந்த அன்பு! நண்பர்கள் சித்துராஜ் பொன்ராஜ், இரா. முருகன், சித்ரா பாலசுப்ரமணியம், பரமேசுவரி, சமயவேல், ஷஹிதா, சரவணன் மாணிக்கவாசகம் தந்த உந்துதல் குறிப்பிடத்தக்கது.
ஓவியக் கலைஞர் ரோஹிணி மணி இந்தத் தொகுப்பின் முன்னட்டை வடிவமைப்பைச் செய்தது மாத்திரமன்றி குறைந்தகால அவகாசத்தில் ஏழு ஓவியங்களை வரைந்து தந்திருக்கிறார். உயிர்மைக்குக் குறுங்கதைகளை அனுப்பியபோதெல்லாம் உடனுக்குடன் பிரசுரித்தும் உரையாடியும் எழுத முனைப்பை ஏற்படுத்தியது மனுஷ்ய புத்திரன். உயிர்மை இதழுக்கும் யாவரும், கனலி இதழ்களுக்கும் என் நன்றி. தொகுப்பைக் கிண்டில் வெளியீடாகக் கொண்டுவரும் சஹானா பதிப்பகத்துக்கும் நண்பரும் சகோதரருமாகிய வேம்புவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பை என் ஆசானும் காதலனுமாகிய புதுமைப்பித்தனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
பெருந்தேவி
சென்னை
ஆகஸ்ட் 15, 2020
(அட்டை வடிவமைப்புக்கும் நூலில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்களுக்கும் நன்றி: ரோஹிணி மணி)