பக்கத்து வீட்டுக்காரர்  தன் வீட்டு வாசலில் நின்றபடி வந்திருந்த யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். ”நாளை பொழுது விடியறப்ப ஆட்டக்கார கோஷ்டிங்க வந்துருவாங்க, அனுமார் ஆட்டம் ஆட அழகு வந்து நாலஞ்சி வருஷம் இருக்கும்ல?” அழகு பெயரைக் கேட்டவுடனேயே அடுத்த நாள்  ஆட்டத்தைப் பார்க்கத் தவறிவிடக் கூடாதென்று தீர்மானம் செய்துகொண்டேன்.

அடுத்த நாள் எங்கள் ஊர் பஜனை கோயில் விழா நடக்க இருந்தது. விழா நிகழ்ச்சிகளில் ஒன்று அனுமார் ஆட்டமும். மேட்டுத் தெருவில் இருக்கும் அனுமன் சாமி பஜனை கோயில் கட்டப்பட்டு ஐம்பதாண்டுகள் சென்றதை முன்னிட்டு கோயில்காரர்களால் மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா.

பஜனை கோயிலின் வரலாறு தமிழகத்தில் பல ஊர்களிலும் வளர்ந்து நிற்கும் புதிய கோயில்களின் வரலாறுகளைப் போலத்தான். யாரும் கண்டுகொள்ளாத புராதனக் கோயில்களின் வீழ்ச்சியை மண்மூடி மறைத்துவிட்டு அதன் மேல் விஸ்வரூபமெடுக்கும் புதிய கோயில்கள். அவற்றால் புது அந்தஸ்து பெறும் சிற்றூர்கள், சிறு நகரங்கள். மாதம்தோறும் வரும் நல்ல நாட்களிலும், திருவிழாக் காலத்திலும் கொழிக்கும் சிறு வியாபாரம்.

மேட்டுத் தெருக்காரர்கள் புரட்டாசி மாத பஜனைக்குப் பயன்படுத்திய பத்தடிக்குப் பத்தடி ஓட்டுக் கட்டிடமாக இருந்த சாதாரணமான மடம் அது.  பின்னர் விரிவாக்கம் பெற்று  சின்னக் கோயிலாக மாறியது. காலப்போக்கில் பஜனைக்காரர்களின் பிள்ளைகளில் சிலர் வியாபாரத்திலும் அரசியலிலும் செல்வாக்கு பெற்றதால், அவர்கள் காட்டிய ஈடுபாட்டால் பிரசித்தி பெற்றது.  ஊருக்கு அடையாளமாக வளர்ந்து நின்றது.   வளர்ச்சியைக் கொண்டாடும் விதமாக பஜனைக்கும் இராமாயண பாராயணத்துக்கும் கரகாட்டத்துக்கும் அனுமார் ஆட்டத்துக்கும் இசைக் கச்சேரிகளுக்கும் அன்னதானத்துக்கும் வாண வேடிக்கைக்கும் ஊர்க்காரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்கள்.

அம்மாவிடம் அழகு அனுமார் ஆட்டம் ஆட வரப்போவதைச் சொல்வதற்காக உள்ளே அடுக்களைக்குப் போனேன். அம்மா தோசை வார்த்துக்கொண்டிருந்தாள். அக்கா கையில் தட்டோடு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள். லண்டனிலிருந்து தன் பையனோடு இரண்டு வார விடுமுறையில் வந்திருக்கிறாள். என்னைவிட எட்டு வயது பெரியவள். அம்மா செல்லம்.

“மூணு நாளைக்குக் கொண்டாட்டம்தான்மா. அனுமார் ஆட்டமும் உண்டாம்.” அம்மாவிடம் அறிவித்தேன்.

“ஆமாம்டா. ராம பஜனை, பாராயணம்லாம் வேற நடக்குது. நோட்டீஸ் கொடுத்தாங்க.”

“அழகுதான் ஆட வரப்போறானாம்மா.”

“ம், இன்னும் ஒண்ணு போடறேண்டி” அக்கா தட்டில் இன்னொரு தோசையைப் போட்டாள் அம்மா.

அம்மாவுக்குக் கோயில், ஆட்டங்கள் இதிலெல்லாம் ஈடுபாடில்லை. ஆனால் எனக்குச் சற்று பரபரப்பாக இருந்தது. அழகு வருவதைப் பற்றிப் பக்கத்து வீட்டுக்காரர் கூறிக்கொண்டிருந்தபோதே அவனைப் பற்றி அறிந்தவற்றை மனம் ஒரு சொடுக்குப் போட்டு இழுத்துக்கொண்டது.

எங்கள் ஊர்க்காரன்தான் அழகு. சுற்று வட்டாரத்திலேயே அனுமார் ஆட்டத்துக்குப் பேர்பெற்ற ரங்கையாவிடம்தான் முதலில் ’அண்டர்ஸ்டடி’யாக இருந்தான். முதலில் என்றால் சட்டை போடாமல் ட்ராயரோடு வெளியில் சுற்றிய எட்டு, பத்து வயதிலிருந்து பயிற்சி.

அழகு எங்கள் குடும்பத்துக்கும் தெரிந்தவன்தான். என் சின்ன மாமாவின் பள்ளித் தோழன். அடுத்த தெரு கோணலாய் வளைந்து திரும்பும் இடத்தில் உள்ள பாரிஜாதம் பூத்திருக்கும் முக்கு வீடு அவனுடையது. தற்போது வெள்ளையடிக்கப்படாமல், காரை பெயர்ந்து  முதிய தோற்றத்தைப் பெற்றுவிட்ட வீடு. கைவிடப்பட்ட வீட்டின் தோற்றத்துக்கு நிகராக, உடல் ஆரோக்கியம் கைவிட்ட அவனது தாயார் மட்டும்  அங்கே தன்னந்தனியாக வசித்துவந்தார்.  ஒற்றைப் பிள்ளைகளைப் பெற்ற அநேகருக்கு முதிய வயது எழுதும் விதி.  அருகில் உறவென்று மகன் இல்லாத நிலையோடு வறுமையும் இரட்டை நாயனமாகச் சேர்ந்துகொண்டு சோக ராகம் இசைத்தது.

ரங்கையாவுடன் அழகு பழக்கமானது பல ஆண்டுகளுக்கு முன்  அவன் தன் கோஷ்டியோடு அனுமார் ஆட்டமாட எங்கள்  ஊருக்கு  வந்தபோதுதான்.   ஊர்ப் பெரிய மனிதராக இருந்த ஒரு வைணவச் செட்டியார் தனிப்பட்ட முறையில் முதன் முறையாக அனுமார் ஆட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். செட்டியார் கடைத்தெருவில் ஒரு துணிக்கடை நடத்தி வந்தவராதலால் பணப்பசை உண்டு. நேர்த்திக்கடனுக்காக அவரால் ராமாயணப் பாராயணத்தோடு  அனுமார் ஆட்டமும் கூடவே நடத்தப்பட்டது. அன்று ரங்கையா கை சலங்கை கால் சலங்கை கட்டி ஆடிய ஆட்டத்தில் மொத்த ஊரும் லயித்து அவன் ஆட்டத்தில் மயங்கி நின்றதாம்.

“வருஷக்கணக்காச்சி, ஆனா  ஆட்டம் கண்ணிலேயே நிக்குது. மரத்திலிருந்து தாவுறது, ஒரு நிமிட்ல கம்பத்துல ஏர்ரது, வால்ல தீயக் கொளுத்தி வச்சிட்டுத் தாவறது.  பந்தலென்ன பந்தல், ஊரே பத்தி எரிஞ்சிரும்னு இல்லையா பயந்தோம், செட்டியார் பெரிய புண்ணியவான். பயந்தபடி ஒன்னியும் நடக்கல.” பாட்டியின் புரையோடிய கண்கள் நினைவுகூரும் சுகத்தில் மிளிர்ந்து அகன்றது இன்னும் ஞாபகமிருக்கிறது. பாட்டியிடமிருந்துதான் ரங்கையாவைப் பற்றி, அவருடைய அனுமார் ஆட்ட மகிமையைப் பற்றி நாங்கள் தெரிந்துகொண்டது. ரங்கையாவைத் தொடர்ந்துகொண்டு போய் அவரிடம் ஆட்டம் கற்ற அழகு, ஊரில் வசிக்காவிட்டாலும் ஊரார் பேச்சில் சமயத்தில் வலம் வந்துகொண்டிருந்தான்.

அவனது ஆட்டத்தை ஊர்க்காரர்கள் சிலாகித்துக் கேட்டிருக்கிறேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு முறை ஒரு கோடைக் காலத்தில் எங்கள் ஊரே எங்கிருந்தோ படையெடுத்து வந்த  குரங்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.   வந்த குரங்குகளில் சில எங்கள் தெருவையே அதகளப்படுத்தின.  வீடுகளில் ஒரு மரம் விடாமல் ஏறி உலுக்குவது, குழந்தைகள் பின்னால் மெதுவாக நடந்து போய் ‘க்ர்ர்’ என்று இளிப்பது, ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீட்டு அடுக்களைக்குள் புகுவது, சட்டி பானைகளைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடுவது என்று அவற்றின் அட்டகாசம் கொஞ்சநஞ்சமில்லை.

அப்போது ஒரு நாள் எங்கள் வீட்டு அடுக்களைக்குள்ளும் ஒரு குரங்கு நுழைய அதைத் துரத்தினோம். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் வெளியேறிய குரங்கு கொல்லைப்புறத்தை துவம்சம் செய்துகொண்டிருந்தது. நான்கைந்து ஆட்கள் சேர்ந்து அச்சுறுத்தியும் அது அசரவில்லை.  மொட்டை மாடிக்கும் மாமரத்துக்கும் மோட்டார் ரூமின் சிறிய கூரைக்கும்  இடையில் தாவித் தாவிப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தது.  விரட்ட முயன்றவர்கள் படாத பாடு பட்டார்கள்.  “என்ன குதி, என்ன தாவல், அழகு கெட்டது போ!” என அதிசயித்தாள் என் பாட்டி. ”ஆமா, இந்த குரங்கைப் பார்த்தா அழகப் பாக்க வேண்டாம்” என்று  சேர்ந்துகொண்டார்கள் சில வயசாளிகள்.  அழகு சரேலெனக் காற்று வேகத்தில் குறுக்கும் நெடுக்குமாகத் தாவியதையும் மர உயரத்துக்கு எம்பியதையும் மின்கம்பத்திலிருந்து பஸ் மீது தாவிக் குதித்ததையும் நேற்று நடந்தாற்போல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அழகு அனுமார் வேஷத்தில் குரங்கைப் போலவே அச்சு அசலாக  ஆடுவான்  என்பதிலிருந்து  அழகு மாதிரியே அசலாக ஆடுகிறது குரங்கு என்று ஊர்க்காரர்களின் பார்வை மாற்றம் பெற்றதிலிருந்து அவனது ஆட்டம் எப்பேர்ப்பட்டது என்று புரிந்துகொள்ளலாம். கலைத் திறமை வாய்ந்தவன் அவன். கலையால் ஈர்க்கப்பட்டுத்தான் சின்னப் பையனாக இருந்த அழகு ரங்கையா பின்னாலேயே சென்றான்.

அனுமார் வேஷம் போட்ட ஒரு ஆட்டக்காரரால் கவரப்பட்டு சிறுவனாக இருந்த அழகு அவர் பின்னால் சென்றதை சா.கந்தசாமி ஏற்கெனவே  புனைகதையாக்கிப் பதிந்திருக்கிறார். சிறுவன் பின்னாலேயே சென்ற கலைஞர் வேறு யாருமில்லை, ரங்கையாவேதான்.  சா. கந்தசாமியும் மாயவரக்காரர். எங்கள் ஊருக்கு அருகே தன் இளம் பருவத்தைக் கழித்தவர். அவரது கதையில் பச்சையும் நீலமும் கலந்த ஒரு ஜோடி வண்ணக் கால்கள் காட்டிய துரிதத்தால் வசீகரிக்கப்பட்டு, கூட்டத்துக்குள் நுழைந்து, தேடிக்கொண்டு செல்கிறான் அழகு.  அவனுக்கு அனுமாரின் நீண்ட வாலைத் தொட்டுப் பார்க்க ஆசை வருக்கிறது. பொசுபொசுவென்று இருந்த வாலைக் கீழே நிலத்தில் புழுதியில் படாமல் தூக்கிக்கொண்டு போகும் வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிடுவானா என்ன?  அனுமார் ஆடுவதற்குத் தோதாக அவர் வாலை அங்கங்கே கீழே இறக்கி வைப்பதும், அவர் கிளம்பும்போது எடுத்துத் தோளில் தூக்கிக்கொண்டு போவதுமாக, அனுமார் மீது வைத்த கண்ணை எடுக்காமல் காவிரிக் கரை வரை போயிருக்கிறான்.

ஓய்வெடுக்க அனுமார் உட்கார்ந்த சிறிய கோயிலில், அவர் கழற்றிப்போட்ட சலங்கையை அவர் அனுமதியோடு காலில் கட்டிக்கொண்டு  ஆடிக்காட்டியிருக்கிறான். அதுவே அவன் கன்னி ஆட்டம். அனுமாரையே பொறாமைப்பட வைக்கும் அளவுக்கு இருந்திருக்கிறது அவன் ஆட்டம். அனுமாரின் கை இடுக்குக்குள் புகுந்து புறப்பட்டதை, தாவிக் கிட்டே சென்று முகத்தை ஒயிலாக வெட்டித் திருப்பியதை, இதை எதிர்பாராத அனுமார் கீழே விழுந்ததை, எல்லாவற்றையும் நேரில் பார்த்தமாதிரி கந்தசாமி கதையில் எழுதி வைத்திருக்கிறார்.

தொடக்கத்தில் ரங்கையா அவனைச் பார்த்து அசூயைப்பட்டதென்னவோ வாஸ்தவம்தான், ஆனால் ஆட்டத்தில் தன்னைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டான் அழகு என்ற ஏகப் பெருமை ரங்கையாவுக்கு இருந்தது என்று சொல்லியிருக்கிறாள்  பாட்டி. அழகுவின் வாழ்க்கைக் கோலத்தின் ஒவ்வொரு இழையைப் பற்றியும் அவளுக்குப் பரிச்சயமுண்டு.  அழகுவின் அம்மாவும் அவளும் சிநேகிதிகள். பாட்டி திடமாக நடமாடிக்கொண்டிருந்த வரை, ஊர் சிவன் கோயிலுக்கு வார விளக்குப் போட இருவரும் ஒன்றாகப் போய்வந்துகொண்டிருந்தவர்கள். பாட்டி சரியாகக் கேள்விப்படாமல் சொல்லியிருக்க மாட்டாள். “கொரங்காட்டமாவே இருக்கட்டுமே. அப்டி ஒரு சிஷ்யப் பிள்ளை கிடைக்குமா?  வெட்டிக்கிட்டு வானா கட்டிக்கிட்டு வர்றவன் அவன்.”

அழகுவுக்கு அனுமார் வேஷம்கட்டுவதில் ஆர்வம், இல்லை பைத்தியம் வந்த பின்னால் படிப்பில் அவனால் ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை. பள்ளிக்கூடத்துக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ரங்கையா ஆடப் போன இடங்களுக்கெல்லாம் அவனும் கூடவே போயிருக்கிறான். அனுமார் வாலைத் தூக்கிக்கொண்டு. அனுமார் ஆடியபோது கீழே அறுந்துவிழும் மணி மாலைகளை ரங்கையாவின் மருமகப் பையனோடு அவனும் சேர்ந்து பொறுக்கியிருக்கிறான்.  ஆட்டம் முடிந்து ரங்கையா வீட்டுக்குச் செல்லும்போது பல சமயம் இவனும் கூடவே சென்றிருக்கிறான். ரங்கையாவின் அரிதாரப் பெட்டியைத் தூக்குவதிலிருந்து, குளிக்கையில் சுடுநீர் விளாவி ஊற்றுவதுவரை அழகு செய்யாத எடுபிடி வேலை இல்லை.  அண்டர் ஸ்டடி பயிற்சி என்றால் சும்மாவா?

இதனால் அழகு தன்  வீட்டில் வாங்கிய திட்டுக்கும் அடிக்கும் பஞ்சமில்லை. அடி தாங்க முடியாமல் ஓடிப் போய் ரங்கையா வீட்டிலேயே அவன் பழியாய்க் கிடக்கத் தொடங்கியது அச்சமயத்தில்தான். ஓடிப்போன அழகு முதலில் ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காகத்தான் ரங்கையாவுடன் நிகழ்ச்சிகளில்  ஆடியிருக்கிறான்.  அவன் ஆடத் தொடங்கியது சின்னக் குரங்கு அங்கதன் வேஷத்தில். ரங்கையாவை அனுமார் ஆட்டத்துக்கு அழைத்த ஊர்களில் யாரும் அங்கதன் வேஷ ஆட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. அனுமார் ஆட்டமே ஓரிரு மணி நேரத்துக்குள்தான் இருக்கும். பந்தலிலும் பந்தலுக்கு முன்னும் சில தெருக்களிலும் சுற்றி வந்தால் முடிந்துபோய்விடும். இதில் இன்னொரு ஆட்டமா என்று முதலில் வரவேற்க மனமில்லாமல் இருந்திருக்கிறது.  ஆனால் ரங்கையா இறங்கி வந்து பேசியிருக்கிறான். “அவனுக்குக் காசு கீசு தர வேணாம், ஆட்டத்தைப் பார்த்துட்டு தோணதைத் தந்தால் போதும்,” என்றானாம். ஊர்களில் அதை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்

ஆனால் அங்கதன் அனுமாரையே தோற்கடிக்கும் விதத்தில் எம்புவதும் அவர் தலைக்கு மேல் பாய்வதும் அவருக்கே போக்குக் காட்டுவதுமாக ஜனங்களைக் கட்டிப்போட்டிருக்கிறான். பிறகு  இருவரையுமே ஆடக் கூப்பிடுவது என்பது சுற்றுவட்டாரத்தில் சில ஊர்களில் நடைமுறையாகிவிட்டிருக்கிறது.  வயதானதால் ரங்கையாவுக்கு ஆட முடியாமல் போனபோது, அழகு அங்கதனை விட்டுவிட்டு அனுமார் வேஷம் கட்டத் தொடங்கியிருக்கிறான்.  ரங்கையாவுக்கு அழகு பெறாத மகன்,  அவன் திருமணம்கூட ரங்கையா பார்த்துச் செய்ததுதான். குரங்குகள் ஊருக்கு வந்த சமயத்தில் பாட்டி அழகு பற்றி விலாவாரியாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

”பெத்த அம்மாவை இங்கே விட்டுட்டு ரெங்கையா பக்கத்திலேயே போய்த் தங்கிட்டான். அவரு செத்தப்புறமாவது நம்ம ஊர்க்கு வந்து சேந்திருக்கலாம். இன்னிவரைக்கும் விருந்தாள் வேத்தாள் மாரியில்ல வரான்.” பாட்டிக்கு காலமான காலத்தில் தன் சிநேகிதி தனியாக இருந்து கஷ்டப்படுவது சகிக்கவில்லை. ”அவளுக்கு ஏதோ வீடு இருக்கு, முதியோர் பென்ஷன் வருது. ஆனா அவன் கூட இருக்கா மாரி வருமா?”

வராதுதான், அழகுவின் அம்மாவைக் கோயிலருகே இருக்கும் நயினார் டீக்கடையில் சில சமயம் பார்த்திருக்கிறேன். மெலிந்த தேகம். களையிழந்த முகம். வெளிறிய சேலை. கிட்டத்தட்டப் பஞ்சக் கோலம். தடுமாறும் நடை.

அழகுக்கு ஏன் அவன் அம்மா நினைவு மனதை உறுத்தவில்லை? பெற்ற தாயிடமிருந்து எப்படி ஒரு பிள்ளையால். அதுவும் ஒற்றைப் பிள்ளையால், விலகிப்போக முடியும்? கலைக் கிறுக்குக்கு முன் குடும்பமெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்வது சரிதான்.  அல்லது கலையோ குடும்பமோ இரண்டு கத்திகளில் ஏதோ ஒன்றுக்குத்தான்  தலையைக் குனிந்து தர முடியும்போல.

அடுத்த நாள் விடிந்தும் விடியாமலும் மசமசத்தபோதே வீட்டில் உள்ளவர்கள் அதிசயிக்கும்படி எழுந்துவிட்டேன். அக்கா பையனையும் எழுப்பிவிட்டேன். பத்து வயது அவனுக்கு. அவன் பல் தேய்க்கும்போது ”மாமாவோட அனுமார் ஆடறதப் பாக்கப் போறேன்,” என்று அக்காவிடம் சொன்னான். “பல்ல மொதல்ல தேய்” என்றாள் அக்கா சுவாரசியமில்லாமல். ”சீக்கிரம் முடிடா, ஹாட் சாக்லேட் வச்சிருக்கேன்.”

நேற்றிரவே ஆட்டம் பற்றி பேச்சு வந்தபோது அக்கா என்னிடம் சொன்னாள். ”அப்டியெல்லாம் அது ஒன்னும் பிரமாதமா இருக்காதுடா, அனுமார் ஆட்டங்கறதே துணை ஆட்டம்தான். பெரிய ஆர்ட்டிஸ்ட்ங்க ஆடமாட்டாங்க.”

“ரொம்ப பாத்தா மாதிரி பேசாதே. சின்ன வயசில குமுதம், விகடனிலிருந்து கண்ண எடுத்திருக்கியா நீ? எப்ப பாத்தியாம்?”

“நான் பாத்திருக்கேண்டா. உடம்ப ஒட்டி பச்சை ட்ரெஸ் போட்டுட்டு சலங்கை கட்டிட்டு கொஞ்ச நேரம் ஆடுவாங்க. அவ்ளதான்.  பாட்டி எப்பவோ நடந்தத சொல்றாங்க. நீ அதக் கேட்டுட்டு அதுக்கும் மேல பெரிசா கற்பனை செஞ்சிக்கறே.” அவள் பேசியதை நான் அவ்வளவாக ரசிக்கவில்லை.

”உனக்கு எலைடிஸ்ட் டேஸ்ட்.  லண்டன் போனதுக்கப்புறம் முழுக்கவுமே வேற ஆளாயிட்டே. நம்ம ஊர் கலை கலாச்சாரம்னா இளப்பமாத் தெரியுது.”

”ஆமா, உனக்கு எப்பத்திலேர்ந்து கலை ஆர்வம்? பா.கந்தசாமி கதை படிச்சதுக்கு அப்புறம்தானே? இங்க இருந்தப்ப அந்த ஆட்டத்தை ஒரு நிமிஷம் நின்னு  பாத்திருக்கியா நீயி?”

”அது சா.கந்தசாமி.”

கடுப்பில் அக்காவுடன் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் நகர்ந்தேன். சின்ன வயதில் அனுமார் ஆட்டம் என்றில்லை, வேறெதைத்தான் பார்த்திருக்கிறேன். காளியாட்டத்தைப் பார்த்ததில்லை. சிவன் கோயில் தேரோட்டத்தைப் பார்த்ததில்லை. மயானக் கொள்ளையைப் பார்த்ததில்லை. அர்ஜுனன் தபசு பார்த்ததில்லை.  திரௌபதி அம்மன் கோயில் தீமிதியைப் பார்த்ததில்லை.   வீட்டில் எங்கே விட்டார்கள்? பாட்டி, தாத்தா தலைமுறையோடு முடிந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு பாரதக் கதை சொல்லத் தெரியாது. இப்பேர்ப்பட்ட மந்தங்கள் மத்தியில்  எந்தப் பாரம்பரியக் கலைக்குத்தான் கௌரவம் கிடைத்துவிடப்போகிறது?

இவர்களுக்கு கல்லூரிப் படிப்பு, வேலை, கல்யாணம் என்ற பழகிய வண்டிப்பாதைதான் தெரியும். பிள்ளைகளையும் அதில் முடுக்கிவிடுவார்கள்.  நான் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் படித்தால் கெட்டுப் போய்விடுவேன்று, தள்ளியிருந்த சிறுநகரம் ஒன்றில் ஒரு ப்ராய்லர் பள்ளியில் என்னைப் போட்டார்கள். ஆண்டு விடுமுறையில்தான் ஊருக்கே வரமுடியும்.  படிப்பு முடிந்தவுடன் சில ஆண்டுகள் ததிங்கிணத்தோம் போட்டு, அதன்பின் சென்னையில் வேலைசெய்துகொண்டிருந்தபோதுதான் பெரிய மாமா பெண்ணின்  திருமணத்துக்காக  விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்கு வந்திருந்தேன். அக்காவும் அதற்காகத்தான் வந்திருந்தாள்.

“அங்கிள், அயம் ரெடி ஃபர் தெ ஷோ,” என்று என்னை அண்ணாந்து பார்த்துச் சொன்னான் அக்கா பையன்.  ”ஷோ இல்லடா, டான்ஸ், ஆட்டம்” என்றேன். துறுதுறுவென்றிருக்கும் பையன். இவனுக்கு அக்கா இந்த மண், கலாச்சாரம் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்லித் தந்திருக்க மாட்டாள். அவளுக்கு இங்கிருந்தபோதே அதிலெல்லாம் அக்கறை கிடையாது.

“ஐ வில் டேக் பிக்சர்ஸ்.” தன் வலக்கை கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். அவனை அருகே இழுத்தேன். ஒட்டிக்கொண்டான்.

மணி பத்து. எட்டு மணிக்கே பந்தலருகே ஆட்டம் தொடங்கி நடந்திருக்கும்.  அனுமார் இந்தத் தெரு வழியாக வந்து, தெரு முனையில் வலது பக்கம் திரும்பி, தேரடித் தெரு, ராஜா தெரு வழியாக சந்தை மேட்டுக்குப் போகவேண்டும். அனுமார் வந்துவிடக்கூடிய நேரம்தான்.

மேளச் சத்தம் கேட்டது. ஒலி கூடிக்கொண்டே வந்தது. தெரு முனையில் அனுமார் தெரிந்தார். ஒரு சக்கர வட்டத்தில் அவர் ஒரு புள்ளியாக நின்று ஆடியது இங்கிருந்து தெரிந்தது. நான்கைந்து தெருக்காரர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஓரிரு நிமிடங்களுக்குள் ஆட்டம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் நகர்ந்து வந்துகொண்டிருந்தது தெரிந்தது.

“அம்மா அனுமார் பத்தி ஸ்டோரீஸ் சொல்லியிருக்காங்க மாமா” என்றான் அக்கா மகன். என்ன சொல்லியிருக்கப் போகிறாள் என்று எண்ணியபடி என்ன கதையென்று  விசாரித்தேன். வாயு தேவனுக்கும் ஒரு குரங்கு அம்மாவுக்கும் அனுமார் பிறந்தார்,  ஸ்ரீலங்காவைத் தீ வைத்து எரித்தார் என்று ஓரிரு வாக்கியங்களைக் கூறினான்.  “அப்புறம்?” என்றேன். ”அப்புறம் லோடஸ் ஸ்டெம் வழியா அண்டர்கிரவுண்டுக்குப் போனார்.”  என்ன கதை என்று சட்டென விளங்கவில்லை. விசாரித்தேன். “தட் இஸ் பீகாக் ராவணன் ஸ்டோரி” என்றான்.  அக்காவுக்கு மயில் ராவணன் கதையெல்லாம் தெரியுமா என்ன?  வியப்பாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. என்னோடுதானே வளர்ந்தாள்? பாட்டி அந்தக் கதையெல்லாம் எனக்குச் சொன்னதே இல்லையே?

ஏழெட்டு வீடுகளைத் தாண்டி அனுமார் மெதுவாக  வந்துகொண்டிருந்தார்.  உடலோடு ஒட்டிய பச்சை டிரஸ். சலங்கைகள். வெயிலில் இளித்துக்கொண்டிருந்த கிரீடம், ரப்பரில் பளிச்சென்றிருந்த ஆரஞ்சு வாய். மார்பில் வேர்வை கொட்டிக்கொண்டிருந்தது. இதைக் கிழித்து எப்படி ராம, லட்சுமண, சீதையைக் காட்டப்போகிறாரோ தெரியவில்லை. ராவணாசுரனோடு கடும் போர் செய்து பத்து தலைகளைக் கொய்த நேரத்தில் மூச்சிரைக்க நின்றபோதிருந்ததைக் காட்டிலும் வேர்வையில் குளித்தபடி ராமர் காட்சியளிப்பார் என்று எண்ணிக்கொண்டேன்.

வாத்தியக்காரர்களும் சுறுசுறுப்பில்லாமல் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். நாமம் அணிந்த வயதான ஒருவர் கூடவே வந்தார்.  பஜனை கோயிலைச் சேர்ந்தவராக இருக்கலாம்.  ”பாட்டி, அனுமார் வர்ராரு” என்றேன் உரக்க. அவள் வெளியே வந்து எங்களோடு நின்றுகொண்டாள். மொத்தம் மூன்று பேர் அனுமாரைப் பார்க்க எங்கள் வீட்டில்.

வீட்டிலிருந்து ஐந்தாவது வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி ஒரு பூவரச மரமிருந்தது. “மரத்தில அனுமார் ஏறுவார் பாருடா,” எதிர்பார்ப்போடு சொன்னேன் அக்கா பையனிடம். ஆனால், அனுமார் மரத்தில் ஏறவில்லை. இரண்டு வீடுகள் தள்ளியிருந்த பெட்டிக்கடையில் இரண்டு வாழைக் குலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. அனுமார் அவற்றைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

ஒரு மௌன ஊர்வலம் போல அனுமாரும் கோஷ்டியும் நடந்து வந்தார்கள். அக்கா மகன் வயதிலிருக்கும் இரண்டு சிறுவர்கள் எங்கள் வீட்டையும் அனுமாரையும் கடந்து விருட்டென்று சைக்கிளில் போனார்கள்.

எங்கள் வீட்டைத் தாண்டி அனுமார் போனபோது அவர் தலையைக் குனிந்துகொண்டு போனதைப் போல் எனக்குத் தோன்றியது. ”அழகுக்கு வயசாடுச்சிடா, நடையில தெரியுது” என்றாள் பாட்டி. அதை அவள் சொல்லியிருக்கக் கூடாதென்று நினைத்துக்கொண்டேன். ”அவன் அம்மாவப் பாத்துட்டாவது போனா சர்தான்.” அழகு காதில் அது விழுந்திருக்கக் கூடாது.

“அனுமாருக்கு எய்ட்டீன் ஃபீட் வாலிருக்கும்னு சொன்னீங்களே அங்கிள்?” அக்கா பையன் கேட்டான். அப்போதுதான் கவனித்தேன். அனுமாருக்கு வாலே இல்லை.

(மறைந்த எழுத்தாளர் சா. கந்தசாமிக்கு அஞ்சலி இச்சிறுகதை)

நன்றி: உயிர்மை மின்னிதழ்