ரோலர் கோஸ்டர்

அரை நூற்றாண்டாக
சீரியஸ் முட்டாள்களின் சொர்க்கமாக
கவிதை இருந்தது
நான் வந்து
என் ரோலர் கோஸ்டரைக் கட்டும் வரை.

விரும்பினால் மேலே செல்லுங்கள்.
வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும்
ரத்தம் கொட்டிக்கொண்டு
கீழே வந்தீர்கள் என்றால் அது என் தவறல்ல.

 

வாசிப்புக்கான நோபல் பரிசு

வாசிப்புக்கான நோபல் பரிசை
எனக்குத் தர வேண்டும்
ஒரு ஆதரிச வாசகன் நான்
கையில் கிடைக்கும் எல்லாவற்றையும்
வாசித்துவிடுகிறேன்

தெருப்பெயர்களை
நியான் குறிகளை
குளியலறைச் சுவர்களை
புது விலைப்பட்டியல்களை

காவல்துறை செய்திகளை
குதிரை ரேஸ் கணிப்புகளை

வாகன எண் பலகைகளை

என்னைப் பொறுத்தவரை
வார்த்தை புனிதமான ஒன்று

நடுவர் குழு உறுப்பினர்களே
பொய் சொல்லி எனக்கென்ன
கிடைத்து விடப்போகிறது
மனம் தளராமல் இருக்கிறேன்

நான் எல்லாவற்றையும் வாசிக்கிறேன்
விளம்பரங்களைக்கூட விட்டுவைப்பதில்லை

ஆனால் இந்த நாட்களில் நான் அதிகம் படிப்பதில்லை
எனக்கு அவ்வளவு நேரமில்லை
ஆனால்
அடேயப்பா! எவ்வளவு படித்திருக்கிறேன்

அதனால்தான் வாசிப்புக்காக
எனக்கு நோபல் பரிசு தரவேண்டும்
என்று உங்களைக் கேட்கிறேன்
கூடாத விரைவில்.

 

கருவேலம்

பல வருடங்கள் முன்பு
பூத்துக்குலங்கிய கருவேல மரங்கள்
கையகப்படுத்திய
தெரு ஒன்றில் நடந்து சென்றபோது
எல்லாம் தெரிந்த ஒரு நண்பனிடமிருந்து
அப்போதுதான் உனக்கு திருமணமானதை
அறிந்துகொண்டேன்.
உண்மையில் அதற்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை
என்றேன் அவனிடம்
உன்னை நான் எப்போதும் காதலித்ததேயில்லை
–என்னைவிட உனக்கு அது இன்னும் நன்றாகத் தெரியும் –
ஆனால் கருவேலம் பூத்துக் குலுங்கும்
ஒவ்வொரு சமயத்திலும்
—உன்னால் இதை நம்ப முடிகிறதா?—
எனக்கு
நீ வேறு யாரையோ திருமணம் செய்துகொண்டாய்
என்ற நெஞ்சத்தைப் பிளக்கும் செய்தியால்
அவர்கள் என்னை நேரடியாகக் குத்திய
அதே உணர்வுதான்.