காதலைப் பற்றி எழுத நினைக்கும்போதே உடனடியாக மனதில் தோன்றும் பிம்பம் காத்திருப்பவளின் / காத்திருப்பவனின் பிம்பம். காத்திருத்தலின் செறிவான சித்திரங்களைத் தமிழ் அக இலக்கியம் நமக்குக் காட்டித் தந்திருக்கிறது. பொதுவாக, காத்திருத்தல் எனும் உரிப்பொருள் முல்லைத் திணைக்கானது என்று அறியப்பட்டாலும், அது தன் சாயைகளைப் பிற அகத்திணைகளிலும் பதிந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் காலச்சுவடு இதழ் ஒன்றில் நான் எழுதிய கட்டுரையில் (2006), இந்தச் சாயைகளை ஓரளவுக்கு அணுகியிருக்கிறேன். கன்னியாகுமரியின் தொன்மத்திலிருந்து தொடங்குகிற அந்தக் கட்டுரை தத்துவ அறிஞர் ரோலான் பார்த்தின்ஒரு காதலரின் சொல்லாடல்: துண்டுத் துணுக்குகள்’ (1978) நூலைத் தொட்டு, காத்திருத்தலின் சில படிநிலைகளை அகத்திணை மரபு சார்ந்து விளக்க முயல்கிறது. ஆனால், அந்தக் கட்டுரை, இவற்றைப் பேசிவிட்டு, சட்டென்று பின்நவீன சமூகத்தின், காதல் உறவில் மனிதர்களைப் பதிலீடு செய்யும் சிலிக்கான் உருக்கள் பற்றிய விவரணைக்கு நகர்ந்துவிட்டது. தமிழ் நவீனப் பிரதி எதையும் கவனிக்காமல் கடந்துவிட்டது. அந்தக் குறையை இந்தக் கட்டுரை வாயிலாகக் கொஞ்சம் இட்டு நிரப்பலாம் என்கிற எண்ணம். அதுவும் புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று நமக்குத் தரும் காதலின் விகசிப்போடு.

காத்திருத்தல் என்பதைக் காதலின் ஒட்டுமொத்த சாராம்சமாகவே சொல்கிறார் பார்த். “நான் காதலில் இருக்கிறேனா? ஆமாம், ஏனெனில் நான் காத்திருக்கிறேன்இது இந்த நிலையின் தன்னிலைக் கூற்றாகிறது. நான் காத்திருக்கிறேன் என்பதுதான் காத்திராத மற்றவர் / மற்றவர்களிடமிருந்து என்னை வித்தியாசப்படுத்துகிறது. சொல்லப்போனால் காத்திருத்தல்தான் என்னை உருவாக்குகிறது, காதல் வழியாக, காதலிப்பவளாக, காதலிப்பவனாக. என்னைச் சுவீகரிக்கும் ஒரே அடையாளம். “நான் காத்திருப்பவளாக இருக்கக் கூடாதுஎன்று எண்ணி, அந்த அடையாளத்தை, பிம்பத்தை மாற்ற நினைத்து, அதற்காக ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டாலும், வேலைகள் இருப்பதைப் போல் காட்டிக்கொண்டாலும் எப்போதுமே சொன்ன நேரத்துக்கு ஏன் சந்திக்க வருகிறேன்? பல சமயங்களில் முன்கூட்டியே வருகிறேனே, இப்படி வருவது ஏன் நானாகவே இருக்கிறேன்?

இத்தகைய மன ஓட்டத்தைக் கூர்ந்து நோக்கும் பார்த், தீர்மானமாக ஒன்றைச் சொல்கிறார்: காத்திருத்தல் என்பது காதலிப்பவருக்கு விதிக்கப்பட்ட அடையாளம். விதிக்கப்பட்டது என்கிறபோது அதுவே நிரந்தரமானதாகவும் ஆகிறது. ஒரு முத்திரையைப் போல, ஒரு சூட்டுத் தழும்பைப் போல.

எதற்காகக் காத்திருக்கிறேன்? ஏதோ ஒரு வருகைக்காக, அல்லது மீள்வருகைக்காக, ஒரு சந்திப்புக்காக, ஓர் அடையாளக் குறிக்காக என எழுதுகிறார் பார்த். இந்த வருகை காதலியின் / காதலனின் வருகையாக இருக்கலாம்; அல்லது காதலியிடமிருந்து / காதலனிடமிருந்து ஏதோவொன்றின் வருகையாக இருக்கலாம். ஒரு கடிதம், தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி, பார்வை, பரிசு, ஆர்ட்டின் போன்றவை. காத்திருத்தல் பரிதாபத்திலும் வீணாகித் தொலைவதிலும் முடியக்கூடியது என்கிறார் பார்த். சின்ன அளவிலான இழவுத் துக்கம் என்று அதைச் சாவோடு தொடர்புறுத்தி விவரிக்கிறார். நேசிப்பவரின் இன்மையால் (absence) என் மனதில் எழும்பும் துக்கம் அது. காத்திருத்தலின் பொழுது நீள நீள, காதலரின் இன்மை இறப்பின் அடையாளம் கொள்கிறது. விளைவாக சாவுத் தருணம் போலவே இழவுத் துக்கத்தில் ததும்பிக் கரை உடைகிறது நெஞ்சம்.

காத்திருத்தல் எனும் காட்சியின் மூன்று கட்டங்களை விவரிக்கிறார் பார்த். முதல் கட்டத்தில், நேரமாக ஆக, நேசிப்புக்குரியவரின் வருகை தாமதமாக ஆகக் காத்திருப்பவருக்கு ஏற்படும் பதற்றம். நான்தான் தொடர்புறுத்தலில் தவறு செய்துவிட்டேனோ, சந்திக்கும் இடத்தைத் தவறாகச் சொல்லிவிட்டேனோ, மொபைல் சிக்னல் இல்லையோ, அதனால் தாமதத்தின் காரணம் தெரிவிக்கப்படவில்லையோ போன்ற கேள்விகள் வருகின்றன.

காத்திருப்பு நீள்கிற இரண்டாம் கட்டத்தில் கோபம் தலைதூக்குகிறது, வரட்டும், பார்த்துக்கொள்கிறேன்; அல்லது அழைக்கட்டும், அப்போதிருக்கிறது அவருக்கு என்பதுபோல. அவர் வந்தாலோ தொடர்பு கொண்டாலோ சண்டை நிகழக்கூடிய கட்டம் இது.

அடுத்த மூன்றாவது கட்டத்தில் இன்மையின் கனம் கூடுகிறது, காக்க வைத்திருக்கும் உருவம் அங்கே பிணத்துக்கு ஒப்பாகிறது. தாள முடியாத ஆற்றாமையின் அவலம் காத்திருக்கும் என்னைச் சூழ்கிறது. அவ்வளவுதான், எல்லாம் முடிந்துவிட்டது. கைவிடப்படுதலின் இருட் குகை. மூச்சுத் திணறல். இந்தக் கட்டத்தில்வருகையின் அருள்மூச்சுத் திணறலின் காலப் பொழுதைக் குறைத்து மீட்கவும்கூடும்.

பார்த் காத்திருத்தலின் மூன்றாம் கட்டத்தை “delirium” என்றே அழைக்கிறார். இது சமயத்தில், நீளும் பொழுதைச் சார்ந்து, சித்தப்பிரமைக்குக்கூட இட்டுச் செல்லக்கூடியது. யாருக்காக, எதற்காகக் காத்திருக்கிறேனோ, அவரது / அதன் இன்மை தருகிற கனம், என்னை யதார்த்தத்திலிருந்து விலக்கி வைக்கக்கூடியது. ஒரு சிசு தன் முதற்பொருளான தாயின் முலையைத் திரும்பத் திரும்ப நினைவில் உருவாக்கிக்கொள்ளும் கணத்துக்கு ஒப்பானது அது. தாய் என்கிற உருவை முலையாக மட்டுமே தன் உணர்வை முன்னிட்டு, தன் அத்தியாவசியத் தேவையை முன்னிட்டு, மீண்டும் மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் கணம் போன்றது அது. என் மனதில் நான் நேசிப்பவருக்குப் பதிலாக அவருடைய பிம்பமே முழுக்க முழுக்க வியாபித்துவிடுகிறது. இப்போது காதலனின் பிரசன்னம் ஒருவேளை நிஜமாகவே நிகழுமானால், என்னில் உருவாகியிருக்கும் அவனது பிம்பத்தை அது குலைத்துவிடும். அத்தகைய நிஜமான பிரசன்னத்தால் என் மயக்கம் கலைகிறது என்பதால் நான் ஒரு வகையில் தொந்தரவு அடைகிறேன். நேசிப்பவனை, அவன் குரலை அடையாளம் காண, எனக்குச் சற்று நேரம் பிடிக்கிறது. என் மயக்க வெளிக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லாதவனாக என் மனத்துக்கு வெளியே அவன் நிற்கிறான். ஓர் அந்நியனைப் போல.

காத்திருத்தலின் இந்த மூன்று கட்டங்களை, தமிழ் அகத்திணை மரபில் முல்லை, மருதம், நெய்தல் பரப்புகளின் வாயிலாகக் கடக்கச் சாத்தியமிருக்கிறது. தமிழ் அகத்திணை வகைமைகள் நம் வாழ்க்கைமுறைக்கும் பண்பாட்டுக்கும் உரிய epistemic categories ஆக செயல்படக்கூடியவை. இது குறித்த சிந்தனை முன்னெடுக்கப்பட வேண்டும். நானில்லாவிட்டாலும் வேறு யாரேனும் முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது.

(சில வருடங்களுக்குமுன் மின்னம்பலம் மின்னிதழில் வெளிவந்த கட்டுரையின் மீள்வரையப்பட்ட வடிவம்)

நூல், கட்டுரை தரவுகள்

பெருந்தேவி. “காத்திருத்தல் எனும் துக்கம், துக்கம் தவிர்த்தல்,” காலச்சுவடு 83, நவம்பர், 2006.

Barthes, Roland. A Lover’s Discourse: Fragments. Trans. Richard Howard. New York: Farrar, Straus and Giroux, 1978

(கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்கள்:  The Clock, Marc Chagall, 1914; The Acrobat, Marc Chagall, 1930)