ஏன் எழுதுகிறீர்கள்?

நிச்சயமாக இலக்கிய வரலாற்றில் இடம் கிடைக்கும் என்பதற்காக எழுதவில்லை. இலக்கிய வரலாற்றைப் பேசும்போது பல இலக்கிய நண்பர்கள் நம்பிக்கையோடு ‘தகுதியுடையது எஞ்சும்’ என்கிறார்கள். சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் வாசிக்கும்போது ஒரு சிலப்பதிகாரம்தானா ஒரு திருக்குறள்தானா என்ற கேள்வி எனக்கு மட்டும்தானா? ஷேக்ஸ்பியரையும் காப்காவையும் வாசிக்கும்போதும் இந்தக் கேள்வி வரத் தவறியதில்லை. பொதுவாக, எதேச்சையான தேர்வுகளால் நிரம்பியது வரலாறு. ‘நல்ல’ எழுத்து என்றால் அதற்கு வரலாற்றில் இடமிருக்கும் என்பது ‘நல்ல மனிதர்கள்’ சொர்க்கத்துக்குப் போவார்கள் என்பதுபோன்ற வழக்கமான நம்பிக்கை. மற்றபடி யாருக்குத் தெரியும்?

எனக்கு எழுத இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, எழுதும்போது கிடைக்கும் இன்பம். பல சமயம் நினைவுச் சேகரத்திலிருந்து எடுக்கும் ஒரு நிகழ்வின், ஓர் அனுபவத்தின் மாறுபட்ட சாத்தியங்களைக் கவிதையின் வழி எழுதிப்பார்க்க முடிகிறது. திரும்பிவரவே முடியாத ஒருவழிப் பாதையாகத் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும்போது, இத்தகைய மாறுபட்ட சாத்தியங்கள் தருகிற மகிழ்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. இரண்டாவது, இப்படி வெவ்வேறு சாத்தியங்களை எழுதிப்பார்க்கும்போது, ‘நான்’ என திடப்பட்டுவிட்ட சுயம் சற்றே நெகிழ்தலும் கலைந்துபோதலும் நடக்கிறது. ‘நான்’ பிறராக மாறுகிற, மற்றமையோடு அடையாளம் காணும் முயற்சிகள். இவையெல்லாம் எழுத்தின், கலையின் மூலமன்றி வேறெப்படி நடக்க முடியும்? ஒருவகையில் இது விடுதலை உணர்வுபோல ஒன்றைத் தருகிறது.

எந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?

நனவுநிலைக்கும் கனவுநிலைக்கும் இடையிலான ஒரு வெளியில், பலசமயம் அதிகாலையில்தான் கவிதைவரிகள் உருவாகின்றன. திபெத்திய பௌத்தத்தில் குறிப்பிடப்படுகிற ’பார்டோ’ (bardo) போன்ற இடைவெளித் தருணம். ஏதோ தூசியால் மூடப்பட்டவை ஒரு பெருங்காற்றடிக்க தெரிவதுபோல சில வரிகள் விட்டுவிட்டு கண்முன்னால் வரும். சில சமயம் மங்கலாக, சில சமயம் தெளிவாக. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக விடப்பட்டவை நிரப்பப்படும். சில சொற்களில், ஓரிரு வரிகளில் நான் மாற்றம் செய்வதும் உண்டு. ஆனால், வரிகளின் முதல் தோற்றம் இந்த மயக்குறு பொழுதில்தான். ஓர் உத்வேகம் அல்லது மன எழுச்சி சூல் கொள்ளும் பொழுது இது எனலாம். தமிழ்ச் சூழலில் கவிதையின் பாடுபொருள், பாணி, மொழி உத்தி போன்றவற்றைப் பேசுகிற அளவுக்கு, இந்த உத்வேக நிலை குறித்தெல்லாம் பேசியிருக்கிறோமா என்று தெரியவில்லை.

மேற்சொன்னதைக் கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது என்பதைப் போன்ற பூடகக் கூற்றாக வாசிக்க வேண்டாம். அதே சமயத்தில், உத்வேகம் என்று நான் கூறுவது அதிபுனைவான சுத்த சுயம்பிரகாச நிலையை அல்ல. அத்தகைய கற்பித நிலையிலிருந்து கவிதை உருவாக வாய்ப்பே இல்லை. எழுத்து உருவாகக்கூடிய மன எழுச்சிக்கான மூல ஊற்றை ஆசிரியரின் சுயத்தில் காண்பதில் எனக்கு ஏற்பில்லை. ஆசிரியர் என்கிற இடம் அர்த்தமிழந்து போவது, ஒரு படைப்பை வாசிக்கும் வாசகர் அவருக்கான பிரதியாக அதை உருவாக்கிக்கொள்ளும்போது மட்டும் நடக்கும் ஒன்றல்ல, ஒரு படைப்பு உருவாகும்போதே ஆசிரியர் என்பவரின் தனிநபரது இருப்பு அர்த்தமிழந்துபோகிறது என்று நினைக்கிறேன். சுயம் கலைதல் எழுதும்போதே நடக்கும் விதமும் இது.

உங்களது எந்தப் படைப்பு உங்கள் எழுத்து வாழ்க்கையைப் பூர்த்தியாக்கியது எனச் சொல்வீர்கள்?

எதுவுமில்லை. அப்படியொன்று இருந்திருந்தால், என் எழுத்து அத்தோடு நின்றிருக்கும். “வாழ்க்கையில் ‘முற்றிற்று’, ‘திருச்சிற்றம்பலம்’ என்று கோடு கிழித்துவிட்டு ஹாய்யாக நாற்காலியில் சாய்ந்துகொள்ளும்படி ஏதாவது இருக்கிறதா?” என்கிறார் புதுமைப்பித்தன். எழுத்து வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.

எழுத்தில் நீங்கள் சோர்வாக உணர்வது எப்போது?

பல சமயம். குறிப்பாக வாசக எதிர்வினைகள் இல்லாதபோது. குறிப்பாகத் தமிழிலக்கியச் சூழலின் கொடுமையான விமர்சனத் தேக்க நிலையால் தீவிர வாசிப்புகள் நிகழ்வதில்லை. என் நூல்களுக்கு என்றில்லை. பொதுவாகவே இவை நிகழ்வதில்லை, எனவே, இது தனிப்பட்ட துயரமில்லை.

இத்தோடு ‘பெண் கவிஞராக’ அறியப்படுவதால் தமிழ் இலக்கிய வட்டாரங்களில் எதிர்கொள்ள நேர்கிற ஒரு வினோத வகைப் புறக்கணிப்பு, பொதுச் சமூகப் பிரச்சினைகள், அரசியல், தத்துவம் போன்றவற்றோடு ஈடுபாடு கொள்ளும் எழுத்து பற்றிய பேச்சுத்தளங்களில் ஆண் எழுத்தாளர்கள் முதன்மை பெறுவதும், பெண் எழுத்து என்று ஒரு கற்பித வகைமையில் பெண்களின் எழுத்தைப் பூட்டிவைக்கப் பார்ப்பதும் நடக்கிறது. பெண் குரல், பெண் எழுத்து என்று ஏதோ ஒரு குறிப்பிட்ட வகை எழுத்து, கவிதை இங்கே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்ணாக ஓர் எழுத்தாளர் அறியப்படுகிறபோது, அந்தக் குறிப்பிட்ட வகை எழுத்து அல்லாத அவரது பங்களிப்புகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. என் கவிதைகளைப் பற்றி உரையாடுபவர்களும் பெண் எழுத்து, பெண்ணியம் என்று ஏதோ சொல்லிவிட்டு சட்டென நகர்வதுதான் பெரும்பாலும் நடக்கிறது. தத்துவம், அரசியல், காட்சி ஊடகம், அறிவியல் தொழில்நுட்பம், நகர அன்றாடம் போன்றவற்றை என் கவிதைகள் சுட்டிச் சென்றிருக்கின்றன. ஆனால், அவை கவனம் பெறுவதோ விமர்சிக்கப்படுவதோ அபூர்வம். வீடுகளில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் சமையலறை ஒதுக்கீடுபோல்தான் இது.

எழுத்தாளர் இமையம் ஒரு நேர்காணலில் தலித் எழுத்து என்ற வகைமையைப் பற்றிச் சொன்னதுபோல, தலித் எழுத்து, பெண் எழுத்து என்ற அடையாளத்தில் இங்கே நடப்பதெல்லாம் ‘பொதுவில், பொதுவுக்கு நாங்கள் இருப்போம், ஒரு சில இடங்களை உங்களுக்குப் பெருந்தன்மையோடு தந்திருக்கிறோம், அங்கேயே நீங்கள் இருங்கள்’ என்பதுதான். வெவ்வேறு பொருள்களை உங்கள் எழுத்து தொட்டாலும் உங்களுக்குத் தரப்பட்ட அந்தக் கட்டத்துக்குள் நீங்கள் இருப்பதைத்தான், இருந்தால்தான் அங்கீகரிப்போம், வேறு கட்டங்களில் நீங்கள் உலவினால் கண்டுகொள்ள மாட்டோம் என்பதுதான். இவையெல்லாம் சமயத்தில் கொஞ்சம் சோர்வளிக்கத்தான் செய்கின்றன.

எழுதுவது பற்றி உங்களுக்குக் கிடைத்த சிறந்த அறிவுரை எது?

பல வருடங்கள் முன்பு, இலக்கியம், நடனம், நாடகம் என கலை பற்றி உரையாடிக்கொண்டிருந்தபோது புதுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞரான ஜெயலதா அவர்கள் ‘வித்தைக்கு விசனம் சத்ரு’ என்ற கூற்றை நினைவுகூர்ந்தார். கலைஞர்கள், படைப்பாளிகளுக்குச் செல்வமின்மை, அன்பின்மை இதெல்லாம்கூட பெரிய பிரச்சினையில்லை, விசனப்படாமல் இருக்க வேண்டும், விசனம் வந்தாலும் அதை உடனடியாக மீறக் கற்றுக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் அது கலைவெளிப்பாட்டைப் பாதிக்கும் என்று கூறினார். அவர் சொன்ன அந்த வாக்கியத்தை மந்திர வாக்கியமாகவே கருதுகிறேன். ஒரு நாடகக் கலைஞரின் நிகழ்த்துதலை விசனம் பாதிப்பதுபோலவே எழுத்துக் கலையையும் அது பாதிக்கிறது. ஜெயலதா கூறியதைப் போலவே, அசோகமித்திரனும் என்னிடம் “எதுவும் நடக்கட்டும், ஆனால் தயவுசெய்து அதிகப்படியான மகிழ்ச்சியின்மையோடு இருக்காதே” எனச் சொல்லியிருக்கிறார். இன்னொருதரம், சில எழுத்தாளர்களிடமிருந்து, அவர் சந்தித்த வன்மங்களைப் பற்றிக் கோடிகாட்டிவிட்டு, இதையெல்லாம் மனதில் வைத்திருந்தால் தொடர்ந்து எழுதியிருக்க முடியாது, சிலவற்றை அங்கேயே விட்டுவிட வேண்டும், எழுதி எழுதி கடந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். விசனத்தில், மகிழ்ச்சியின்மையில் தொடர்ந்து இருந்தால், தத்துவ அறிஞர் நீட்ஷே கூறும் ‘ressentiment’ என்கிற காழ்ப்புணர்ச்சிக்கான வீடாக நம் மனம் மாறிவிடும். பின்னர், எழுத்துக்கோ வேறெந்தக் கலைக்கோ படைக்கப்படவோ ரசிக்கப்படவோ அங்கேது இடம்? எனவே, இயன்றவரை விசனத்துக்கு என்னை ஒப்புக்கொடுக்காமல் இருக்க, ஒருவேளை அது நடந்தால் மீட்டெடுத்துக்கொள்ள முயல்கிறேன். மீட்டெடுப்பும் எனக்கு எழுத்தின் வழியாக வாசிப்பின் வாயிலாகத்தான் நடக்கிறது.

இலக்கியம் தவிர்த்து – இசை, பயணம், சினிமா, ஒவியம்… – வேறு எது இல்லாமல் உங்களால் வாழ முடியாது?

மொழியின் கொதிநிலையில் உருவாவது கவிதை என்று முன்னெப்போதோ எழுதியிருக்கிறேன். கற்பனையூக்கம் மேலெழும்போது மொழி கொதிநிலையை அடைந்து சில சமயம் இசையாக உருவாக்கம் கொள்கிறது; சில சமயம் சிற்ப வடிவம் காட்டுகிறது. கற்பனையூக்கத்தை வளர்த்தெடுக்கக் கலையாக்கங்கள் உதவுகின்றன. குறிப்பாக எனக்கு சிற்பமும், ஓவியமும். இவை குறித்த அறிவு எனக்குச் சொற்பம், ஆனால், இவை அளிக்கும் கற்பனை ஊக்கம் அதிகம் என்று கூற வேண்டும். பயணமும் புத்துணர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக நதிக்கரைகளில் இருக்கும் நகரங்கள், அவற்றின் சிதிலமடைந்த கட்டிடங்கள், கற்பாதைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை. இந்தியாவாக இருந்தாலும் சரி வெளிநாடாக இருந்தாலும் சரி.

இதை இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என நீங்கள் நினைக்கும் புத்தகம் எது?

பற்பல. அத்தனையையும் சொல்ல இடமிருக்காது என்பதால் சிலவற்றைக் குறிப்பிட நினைக்கிறேன். முதலாவது, வாசிக்காமல் இருக்கிறோமே என்பதைவிட எனக்கு ஸ்பானிய மொழி தெரியாததால் வாசிக்கவே முடியாதே என்று ஏங்க வைக்கும் புத்தகம், லத்தீன் அமெரிக்கக் கவிஞர் நிகனோர் பர்ராவின் ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடகத்தின் மீள் உருவாக்கம். மரபார்ந்த வடிவமின்றி, பேச்சுமொழியில் பர்ரா அதை ஆக்கியிருக்கிறார். அடுத்து, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதை, நாவல், கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்ட நூல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட தொண்ணூறு, இதில் சில கவிதை நூல்கள், நாவல்கள் தவிர பலவற்றை நான் வாசித்ததில்லை. இனிதான் வாசிக்க வேண்டும். தமிழில், மணிமேகலை, அவ்வப்போது புரட்டிப்பார்த்திருக்கிறேன். கதை தெரியும், இனிதான் முழுக்க வாசிக்க வேண்டும். தமிழ் பௌத்தத்தைப் பற்றி அறிந்துகொள்ள எனக்கு விருப்பம் இருப்பதாலும் இன்னும் படிக்கவில்லையே என்றிருக்கிறது. இப்படிப் பல. இது முற்றுப் பெறாத, தற்காலிகமாகப் பெருமூச்சில் மட்டுமே முடியக்கூடிய பட்டியல்.