இப்படி உணர்ந்ததுண்டா?

 

பழைய ஒருத்தி இறந்துவிட்டாள்
வேறொருத்தி தோன்றிவிட்டாள்
மடிந்து மறைந்த தாழம்பூ
மல்லிகையாகிவிட்டது
வலி தந்த அம்பைப்
பிய்த்தெறிந்தாகிவிட்டது
ஒரு தழும்பு அனாதிகாலத்தின்
கவர்ச்சியோடு
வெற்றுடலில் மினுங்குகிறது
புன்னகைக்கிறாள்
குளித்துமுடித்தவுடன்
கட்டாத முடி முகத்தில் அலையும்
புதிய காட்டின் புன்னகை
ஆம், காதல் இன்னும்
மூச்சுவிடுவதை நிறுத்தவில்லை
மல்லிகைக்குள் புழு ஊர்கிறது
ஒருத்தியிலிருந்து
இன்னொருத்தி பிறக்கும்போது
ஒருவனிடமிருந்து இன்னொருவனும்
பிறக்கத்தான் செய்கிறான்
விதிக்கப்பட்ட விதியிலிருந்து
இன்னொரு விதி பிறக்கிறது
உன்னை மட்டுமே
விடாமல் துரத்தும் அதனிடமிருந்து
தப்பிக்கவேண்டுமானால்
நீ செவ்வாய்க்கிரகத்தில்
பிறந்திருக்க வேண்டும்

 

Kitsch 4

Courtesy: Metmuseum. org

Courtesy: Kristen Hileman, John Waters: Indecent Exposure (Baltimore: Baltimore Museum of Art, 2018). Above: Loser Gift Basket (2006)

 

இன்று கேள்விப்பட்டேன்

ஒரு முப்பது வயதுப்பெண்
தன்னுடைய இரண்டு காதலர்களோடு
கணவனைக் கட்டையால்
அடித்துக் கொன்றதை

பெரும்பாலும்
காதலுக்கு முதல் எதிரி கணவன்தான்
இரண்டு காதல்கள் என்கிறபோது
இரண்டு எதிரிகளாகிவிடுகிறான்
கழுத்தில் தாலி இருந்தால் கணவனுக்கு
நீண்ட ஆயுள் என்கிறார்கள்
இதைக் கேட்டு வளர்ந்தவள்
கட்டையைக் கையிலிடுக்கும்முன்
தாலியைக் கழற்றி வைத்திருப்பாள்

எப்படியோ தப்பித்துவிட்டான்
அவனுக்கு சொர்க்கம் தரப்பட வேண்டும்
அவன் செத்த இடத்துக்கு வந்து
இளம்பெண்களைப் பிடிக்காதிருக்க வேண்டும்
அவனுக்குத் திதி தருவாள் இவள் என
எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும்

சாவுத் தருணங்களுக்குப் பிறகான சாவு
வாழ்வைப் போல் இல்லாவிட்டாலும்
சாவைப் போலிருக்காது

 

தமிழ் எழுத்தாளராக இருந்தால்

 

நான் ஏற்கும் விருதுகளோ
அடையும் அவமானங்களோ  இருக்கட்டும்
ஒரு துப்பாக்கியை
என் தலையின் இடப்புறம்
மிகச் சரியாக வைத்து
அதன் விசையை அழுத்தும்போது
தெறித்துவிழும்
துண்டு துணுக்குகளில்
நீங்கள் தேடித் தேடிக் கண்டு
ஆர்ப்பரிக்கப்போவது
எந்தச் சாதியை
எந்தப் பாலினத்தை
எனக்கு நன்றாகவே தெரியும்
ஒரு பட்டாம்பூச்சியின்
கத்தரித்த சிறகுகளை
கையில் வைத்துக்கொண்டு
அது எப்படிப் பறந்ததென
பார்க்க முயல்பவர்கள் அல்லவா நீங்கள்?

 

குடித்துவிட்டு டைப்ரைட்டர்முன் அமர்ந்திருப்பது
பார்த்த, கேள்விப்பட்ட, தெரிந்த
எந்தப் பெண்ணோடும் இருப்பதைவிட சாலச் சிறந்தது என்கிறான் ஹேங்க்



எனக்குக் குடித்துவிட்டெல்லாம் அமரவேண்டியதில்லை
ஒரு பாட்டில் ஒயின் என் முன்னே
அமர்ந்திருப்பதே போதும்
கெட்டுப்போன உறவுகளை
சந்திக்க இயலாத காலக்கெடுகளை
உள்ளும் புறமும் பரவும் தீயை
அது மறக்கச் செய்கிறது
மேலும் மறதிக்குப்
பூட்டுப்போட்டுப் பாதுகாக்கிறது
கடவுளாகவே பாட்டில்
காட்சி தருகிறது மேஜை மேல்
தன் இல்லாத ஆயிரம் கண்களால்
விழித்துப் பார்த்தபடி
காலங்காலமாக
நானாவிதத் துயரங்களுக்குமான
ஒரே திரவ பதில்
உடனடியாக ரத்தத்தில் கலந்துவிடும் கடவுள்
எஸ்.டி.டி அபாயமில்லை
அது கூடுதல் ஆறுதல்