அபியின் கவிதைகள் பொதுவாக நான் வாசிக்கும் கவிதைகளிலிருந்தும் எனக்குரிய கவிதைப் பாணிகளிலிருந்தும் மாறுபட்டவை.  பல வகைகளில் எழுதப்படுவது கவிதை என்ற வகையில் கவிதைக்கே உரித்தான பன்மைத்தன்மையின் சிறப்பு இவற்றைப் படிக்கையில்  மீண்டும் உறுதிப்பட்டது.

(நிழற்படத்துக்கு நன்றி: jeyamohan.in)

முழுக்க முழுக்க அகத்தை எழுதிப்பார்க்கும் கவிதைகள் அபியுடையவை.  அபியின் கவிதைகளில் துலங்கும் அனுபவ நிலை, அனுபவப் புலம், அகப்பயணம் ஆகியவை பற்றி ஜெயமோகன், தேவதேவன் போன்றவர்கள் ஏற்கெனவே எழுதியிருக்கிறார்கள். தேவதேவன் அக உலகிற்குள் சொற்களுள் நடக்கும் நாடகம் என அவர் கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அபியின் கவிதைகளில் துலங்கும் அனுபவ நிலை ”சூன்யமானது, தத்துவச் சுமையில்லாத, நான்  இல்லாத வாழ்க்கை” என்றும் அவர் கருதுகிறார்.  இவை சரியான விவரிப்புகளே. இப்படியான ஒரு பார்வையை மேற்கொண்டு கொஞ்சம் நீட்டிக்க முடியுமா என்று நாம் யோசிக்கலாம். குறிப்பாக, என்னுடைய கேள்வி அபியின் அகப்பயணம் எதை நோக்கியது?

அபியின் கவிதைகளின் அகப் பயணம் நம்மிடத்தில் முன்வைப்பதை ஒரு தொடரில் சொன்னால் “தன்னில் அமிழ்ந்து தன்னை அழித்தல்.” ஆனால், இது அக அனுபவமாக, அக அனுபவ வெளிப்பாடாக மட்டுமன்றி ஆதரிசமாகவும், அடைய வேண்டிய ஒன்றாகவும் அவர் கவிதைகளில் உள்ளது. இதையே அபியின் கவிதைகளின் சிறப்பம்சமாக நான் கருதுகிறேன்.

“ஏற்பாடு” என்ற கவிதை:

என்னைத் தனக்கென்று கொள்ள

என்னிடம் எதுவும் பிறக்காமல்

பார்த்துக்கொண்டு

நான்

இக்கவிதையில்  பார்த்துக்கொண்டு என்ற பயன்பாடு சில அர்த்த விளையாட்டுகளுக்கு இடமளிக்கிறது.  தனக்கென எதுவும் கொள்ளாமல் இருப்பது, தன்னிடம் எதுவும் பிறக்காமல் பார்த்துக்கொள்வது, தள்ளிநின்று பார்ப்பது, அதே நேரத்தில் இவற்றுக்கான பிரக்ஞைபூர்வமான முயற்சியும் இப்பயன்பாட்டில் காட்டப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது.

இத்தகைய பிரக்ஞைபூர்வ முயற்சிகளை அவருடைய வேறு சில கவிதைகளும் பேசுகின்றன.

உதாரணமாக, “உளவாளிகள்” என்று ஒரு கவிதை. இக்கவிதையில்  “நானும் ஒருநாள் / என்னைத் திரட்டி / ஈம விரலை உரசி / ஈமத்தீ எழுப்புவேன்….” என்று வரிகள் வருகின்றன. தானே தன்னைத் திரட்டி, ஈம விரலை உரசி, இறுதித் தீயை எழுப்புவதில் தன்னை அழித்துக்கொள்ளும் ஒரு பிரக்ஞைபூர்வமான முயற்சியை நம்மால் பார்க்க முடிகிறது.

சில சமயம் கவிதைகளில் இத்தகைய உக்கிரமான அழித்தல் இல்லாமல், அழித்தல் வேறு ரூபத்தில் ஒரு பரஸ்பர விளையாட்டாக, தனக்கும் எதிரில் உள்ள மற்றமைக்கும் இடையில் நடக்கும் பரிமாற்றத்தில் நடப்பதாகவும் நிகழ்கிறது. ”மாற்றல்” என்ற ஒரு கவிதையை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.  கவிதை இப்படித் தொடங்குகிறது

மாற்றிக் கொள்வோம்

உன்னுடையதை நான்

என்னுடையதை நீ

மாற்றிக்கொண்ட இடைப்பொழுது

இப்படித் தொடங்கும் கவிதை இடைப்பொழுதுகளை மாற்றிக்கொள்வது, இந்தப் பொழுதுகளின் பின்னணிகளின் தளங்களை மாற்றிக்கொள்வது, தளங்களின் நடமாட்டங்களை மாற்றிக்கொள்வது, பின்னணிகளின் சூழல்களை மாற்றிக்கொள்வது, சூழலில் சாயைகளை மாற்றிக்கொள்வது என்று போகிறது.  இறுதி வரிகள் இவ்வாறு அமைகின்றன.

எனது உனது இன்றி

எதாவதாகவோ  இருக்க நேரிடும்

மாற்றிக் கொள்வோம்

ஏதாவதுகளை

வேகம் வேகமாக….

மாற்றங்களையும் மாற்றிக்கொள்வோம்

இக்கவிதை வரிகள் சுயத்துக்கும் மற்றமையையும் வேறுபடுத்தும் கோடுகளை—அபியின்  வார்த்தைகளில் சொல்லப்போனால் இவை ‘மெல்லிய கோடுகள்’—அடியோடு அழிக்க முனைவதாக உள்ளன. இக்கவிதை மட்டுமின்றி,  அவரது வேறு கவிதைகளிலும் சுயத்துக்கும் மற்றமைக்கும் இடையிலான அடையாளச் சிக்கல் பேசப்படுகிறது.  ”என்ற ஒன்று” என்ற அவரது கவிதை சொல்வதைப் போல  “நீ நான் என்பதே அடையாளச் சிக்கல்”தான்.

இத்தகைய சிக்கலைத் தீர்க்கும்முகமாக மனித சுயத்தின் தனித்த  இருப்பை மறுக்க முனைவதாகவும் அபியின் கவிதைகள் இருக்கின்றன. இரண்டு விதமாக இது நடக்கிறது, ஒரு புறம், மனித  சுயத்தின் தனித்த இருப்பை மறுக்கும் வகையில், மனம் தாண்டிய வேறு பிரபஞ்சக் கூறுகளுக்கு—உதாரணமாக,     நிலம், காலம் உள்ளிட்ட பொருட்களுக்கு—மனித  குணாம்சங்களை, உணர்வுகளை, தன்மைகளை, நிகழ்வுகளைக் கவிதைகள் ஏற்றித் தருகின்றன.

சில வரிகளைச் எடுத்துக் காட்டுகிறேன்:

  1. தன்னைக் கீறி / வெளிவந்த / விதையை / வியந்து நோக்கிற்று / மண்
  2. நெருப்பைத் தன் / வேரில் கட்டிப் போட்டுச் / சிரித்தது புதர்
  3. ஊர்க்கோடி / ஒருநாள் இருந்த இடத்தில் / இன்னொரு நாள் / இருப்பதில்லை
  4. கிணற்று மேடையில் / சீக்கிரமே வந்துவிட்ட / பௌர்ணமி நிலவின் / விவரம் தெரியாத / வெறிப்பு
  5. நெருப்பு செத்துப்போனது
  6. .நெறுநெறுவென்று பேசும் ஆடி மாதம்
  7. .புரண்டு படுக்க இடமின்றி / ஒற்றையடிப் பாதை சலிக்கிறது
  8. ஒரு துகள் மிஞ்சாமல் / பறந்துபோய்விட்ட / முதிய பொட்டல் வெளி/ மெல்லிய இருள் விரித்து / ‘அமர்ந்து பேசலாம் வா’/ என்கிறது

இன்னொரு தளத்தில், மனித இருப்பு என்பதே ஒன்றுமில்லாததாக, பொருட்டில்லாததாக அவர் கவிதைகளில் வருகின்றன. மனித இருப்பைப் பற்றிப் பேசும்போது, அது சார்ந்து பூச்சி, தூசி, புழுதி போன்ற உருவகங்களை சில கவிதைகளில் பார்க்கிறோம்.

எடுத்துக்காட்டாக, “வெறிப்பு” என்ற கவிதையைப் பார்ப்போம்.

காலம்

ஊசியிட்டுக் குத்தி மல்லாத்திய

பூச்சிகளாய்

மனிதர்கள் புகைப்படங்களில்

பேச முயன்று  சிரித்து திகைத்து இப்படி

மரப்பெட்டி மேல் சிலநாளைய தூசி

”மரப்பெட்டி மேல் சில நாளைய தூசி” என்னும் படிமத்தைப் பற்றியே ஒரு சிறு கட்டுரை எழுதலாம். மரப்பெட்டி என்பது பொருள், மனிதர் படைக்கும் பொருள், ஆனால் அந்த பொருளுக்கு இருக்கும்  மதிப்புகூட நமக்கு இல்லை என்பதைக் கவிதை சுட்டுகிறது. இது முதலாவது. இரண்டாவது, தூசி என்பதில்  சுட்டும் நிலையாமை. பைபிளில்   “You are dust and onto dust you shall return” என்ற தொடரை நினைவூட்டுவது அது. மூன்றாவது, தூசி தன்னகத்தே கொண்டிருக்கும் நொய்மை. பெட்டி போன்றவற்றில் படிந்திருக்கும் தூசியைப் பார்த்தால் அதைத் தட்டிவிடுவோம். அல்லது தூசியைக் கலைத்து ஏதாவது வரைவோம் எழுதுவோம்.

அபியின் இன்னொரு கவிதை தூசியை இன்னும் கொஞ்சம் விரித்து கூடுதல் அடையாளம் கொடுத்துச் சொல்கிறது.  “போக்குவரத்துத் தூசி”யாக அது இக்கவிதையில் வருகிறது.  ”இயக்கம்” என்ற கவிதையில்,  அடிப்படையில் சுயம் என்பது வடிவமற்றதாக,  போக்குவரத்தால் மட்டுமே  உருவான தூசி வடிவம் கொண்டதாகக் காட்டப்படுகிறது:

நீ இயல்பில் வடிவிலி

போக்குவரத்துத் தூசி

உன்னைப் பொருளாய் சமைத்தது…

மேலும், இந்த வடிவமற்ற சுயம் என்பது தனித்து இல்லாமல், சூனியத்தின் பகுதியாக, ஏன் சூனியமாகவே சில கவிதைகளில் முன்வைக்கப்படுகிறது. ”உள்ளே” என்றொரு கவிதையில் “புழுங்கிய சூன்யம்” என்றொரு விவரணை வருகிறது. நான் / நீ என்று அடையாளத்தில் சிறைப்பட்டுவிட்ட, அதனால் புழுங்கும் மனித இருப்பு என்றுதான் அதைப் பொருள் கொள்கிறேன்.

ஜெயமோகன் அபியின் கவிதைகள் பற்றி எழுதும்போது அபியின் கவிதைப் பாணி எவ்வாறு தம்மைத் தாமே ரத்து செய்யும் படிமங்கள், கருத்துருவங்களின் வாயிலாக, உருவமற்ற நிலையை, அருவத்தை நோக்கி நகர்கிறது என்றொரு கட்டுரையில் எழுதியிருந்தார். கவிதைப் பாணியைப் போலவே அதில் கட்டியமைக்கப்படும் மனித சுயமும் அருவத்தை நோக்கி, வடிவமற்ற தன்மையை நோக்கித் திரும்புகிறது என்பதையும் இத்தோடு சேர்த்துப் பார்க்கலாம் என்பதையே நான் குறிப்பிடுகிறேன்.

கடைசியாக, அபியின் கவிதையில் வரும் சுயத்தின்  தன்மை என்பது நவீன சுயத்தின் தன்மை. இதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.  நவீனத்துக்கு முந்தைய கவிதை முன்னோடிகளிடமிருந்து, குறிப்பாக சூஃபி முன்னோடிகளிடமிருந்து அபி வேறுபடும் இடம் இது. ரூமியின் ஒரு கவிதையைக் குறிப்பிட்டு காட்டி அபியின் கவிதை வேறுபடும் இடத்தை எடுத்துக்காட்ட எண்ணுகிறேன்.

ரூமியின் வரிகள் இவை:

தோல்

குருதி

எலும்பு

மூளை

ஆன்மா என

எனக்குள் வியாபித்துள்ளாய் நீ.

 

நம்புவதற்கோ மறுப்பதற்கோ

இடமேதும் இல்லை.

 

அந்த இருத்தல் அன்றி,

இந்த இருப்பு வெறுமையே.

(தமிழில் என். சத்தியமூர்த்தி)

அபியின் ”இயக்கம்” கவிதையோ இப்படி முடிகிறது:

நீ இயல்பில் வடிவிலி

போக்குவரத்துத் தூசி உன்னைப் பொருளாய் சமைத்தது…

சுத்தமான தூசி கிரீடமாய்த் தலையேறிற்று

சுழன்று அலைபாயத் தெரிந்தவை உள்ளே நுழைந்தன

போக்குவரத்து இல்லாதிருக்கலாம்…

ரூமியை மொழிபெயர்த்திருக்கும் சத்தியமூர்த்தியின் வார்த்தைகளை மனதில்கொண்டு எழுதினால், ரூமி தன் சிநேகிதன் ஷம்ஸின்பால் கொண்டு பேரன்பு, அவரது மெய்ஞானமாக, ஆன்மீகத்தை நோக்கிய விழைவாக மாறுகிறது. அதுவே ரூமியை ”நானும் அவரும் ஒன்றே எனும்போது, இனி நான் எதைத் தேடுவது” என்று கேட்க வைக்கிறது. மனித இருப்பை அதன் அளவிலேயே கொண்டாடும் கவிதைகளை ரூமியிடம் பார்க்கிறோம். இதற்கு நேர்மாறாக, அபியில் கவிதையில் ”நான்” என்பதே சுமையாக, தேவையற்ற விலகலாக. புகை போன்ற இருண்மைப் படிமமாக இருக்கிறது. சூனியம் அல்லது வெற்றிடத்திலிருந்து   மனித சுயம் அந்நியப்பட்டிருப்பதைக் கூறி அதை நோக்கித் திரும்பிவிட அது கோருகிறது. “போக்குவரத்துத் தூசி” எனும்போது அந்தப் படிமத்தை நடப்புலகம் தாண்டிய பிரபஞ்சத் தத்துவத்தை வைத்து மட்டும் பார்க்க இயலாது.  போக்குவரத்து என்ற சொல் இணைந்து பொருத்திக்கொள்ளும் நவீனத்தையும், அத்தோடு தூசி சேரும்போது சுட்டப்படும் பெறுமதியின்மையையும் விலக்கத்தையும்கூட  நாம் கருத்தில்கொண்டாக வேண்டும்.

அபியின் கவிதைகளில் நவீனத்தை நோக்கி நடக்கும் இப்படியான நகர்வு  குறிப்பிடத்தக்கது. கவிதையில் அக அனுபவம் என்று பேசும்போது அதைத் தனி நபரது அனுபவம் என்று மட்டும் கருதினால் அது குறுக்குவதாக இருக்கும்.  ஒரு கவிதை முன்வைக்கும் அனுபவம் அது எழுதப்பட்ட காலத்தில் உள்ள சூழலோடு தொடர்புறுத்திக்கொள்ளும். அபியைப் பொறுத்தவரை இன்றைய நவீன வாழ்க்கையோடு  அவர் எழுத்து எப்படி தொடர்பு கொள்கிறது,  அந்தச் சூழலில் அபியின் பிரத்யேகக் கவிதைக் கையெழுத்தாக முன்வைக்கப்படும் அக அனுபவத்தின் இடம் என்ன, அத்தகைய அனுபவத்தின் மதிப்பு என்ன ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். அபியின் கவிதைகளைப் பொறுத்து விரிவாகவே முன்னெடுத்து செய்யவேண்டிய பணி அது.  அந்தத் திசையை  இக்கட்டுரையில் கைகாட்டியிருக்கிறேன்.

 

(கவிஞர் அபிக்கு 2018இல் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது பேசிய உரையைத் திருத்தி அவர் கவிதைகள் குறித்த சிறு கட்டுரையாக்கியிருக்கிறேன்.)