இன்று சரஸ்வதிக்கான திருநாள். சொல்லில் ஒலியில் எழுத்தில் படிப்பில் கலையில் ஈடுபட்டுத் திளைப்பவர்களுக்கான நாள்.  தெய்வத்துக்கு அப்பால், அப்படியொன்று இருந்தால், மொழியின் குறியீட்டுத்தளத்தில் குறியும் பொருளும் பிணைந்தும் பிரிந்தும் இயக்கம்கொள்வதை நினைவுகூரவும் ஒரு முகாந்திரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நாள்.

சரஸ்வதி துதி என்றொரு அழகிய பாடலை பாரதி படைத்திருக்கிறார். குழந்தைகளுக்கான பாடல் போல சரஸ்வதியின் தோற்றத்திலிருந்து தொடங்குகிறது இப்பாடல். வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் என்று காட்சியில் தொடங்குகிறது. பிறகு ஒலிக்கு நகர்கிறது. வீணை ஒலி. அதிலிருந்து கவிதை கூறும் பாவலர்-கவிஞர் உள்ளத்துக்கு நகர்கிறது. சரஸ்வதியின் இருப்பிடம் பலவாகிறது. மறையிலிருந்து தொடங்கி கிளி மொழி, மழலைப் பேச்சு வரை. தெய்வமும் வணங்கும் தெய்வத்தின் பெருமை கூறப்படுகிறது. அது வரையில் பக்திப் பாடலாகவே உள்ளது.

அதன்பின் நவீன உலகைப் படைக்கத் துள்ளித் தாவுகிறது பாடல்.

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்,
நகர்கெளுங்கும் பலபல பள்ளி,
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்பதற்கு இணையானது கல்வியிலாத ஊரைத் தீயினுக்கிரையாக மடுத்தல் என்பது. ஆனால் பாரதியின் முந்தைய வாக்கியம் நமக்குப் பரிச்சயமாகியிருப்பதைப் போல பிந்தையது அத்தனை பரிச்சயமில்லை. பாடலின் கடைசிப் பத்தியில் யவனர் தந்தேசம், சிற்றடிச் சீனம், பாரசிகம், துருக்கம், மிசிரம் என எல்லா நாடுகளுக்கும் மக்களுக்கும் பொதுவான  நவீனத் தரிசனத்தை நோக்கி நகர்த்துகிறார். கடைசிப் பகுதியில் சரஸ்வதியின் சமய அடையாளம் நீக்கப்படுகிறது. பற்பல நாடுகளுக்கும் பொருந்தும் கல்வித் தேவி எனப் புதிய பெயரை அவள் பெறுகிறாள். வெள்ளைத் தாமரையிலிருந்து உலகத்துக்கான ஒளியாக ஒரு நகர்வு.

பாரதிக்கு வெள்ளைத் தாமரை அழகொளிரும் தெய்வ இருக்கையாக இருந்ததென்றால், அது சிவப்பாக மாற வேண்டிய அவசியத்தை வங்காளக் கவியும் இசைக் கலைஞருமான காஜி நஜ்ருல் இஸ்லாம் (1899-1976) காண்கிறார். காலனியத்துக்கு எதிராகக் குடிகளின் கிளர்ச்சியை ஆதரிக்கும் அவர் தன் பாடலொன்றில் “சரஸ்வதி தேவியின் வெள்ளைத் தாமரையை புதிய குருதியால் சிவப்பாக்கினோம் மாணவர்கள் நாங்கள்” என எழுதுகிறார் (”மாணவர் பாடல்”). கல்வி கற்றலோடு நில்லாமல் கூடவே அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்ற உலகத்தை அடைய அவர் அத்யாவசியமாகக் கருதிய குருதிப் போருக்கு சரஸ்வதியின் வெள்ளைத் தாமரை திரை போல பின்னணியாகிறது. நஜ்ருல் இஸ்லாமின் கவிதைகளை பிரிட்டிஷார் அவர்களது பாதுகாப்பை முன்னிட்டுத் தடை செய்தது புரிந்துகொள்ளக் கூடியதே. நஜ்ருல் இஸ்லாம் பற்றி எழுதும்போது இஸ்லாமியர்களுக்கும் சரஸ்வதிக்குமான தொடர்பு பற்றி நான் படித்தறிந்தவை சிலவும் மனதில் வருகின்றன. வட இந்திய, பாகிஸ்தான் ஷியா முஸ்லிம்கள் மத்தியில் சரஸ்வதியின் அவதாரமாக முகமதுவின் மகள் பாத்திமாவைக் கருதும் நாட்டார் சொல்லாடல்கள் நிலவுவதைப் பற்றிப் படித்திருக்கிறேன்.

***

சரஸ்வதி தேவியைப் பற்றிய பாரதியின் துதியில் வேத மறையை அவர் தவறாமல் குறிப்பிடுகிறார். அதனால் சரஸ்வதியை சம்ஸ்கிருதத்தோடு முழுக்க அடையாளப்படுத்திவிட வேண்டிய அவசியமில்லை. தமிழ்க் கவிஞன் கம்பனுடைய சரித்திரமாக நம் மத்தியில் வழங்கப்படும் கதைகளில் மாத்திரமின்றி நாட்டார் கதைகளிலும் சரஸ்வதிக்கு இடமுண்டு. என் களப்பணியில் சேகரித்த மாரியம்மன் கதைகளில் சரஸ்வதி வருகிறாள்.

உயிர்மாரி என்றழைக்கப்படும் மாரியம்மனின் ஒரு “வரலாறு” இது. உளுந்தூர்ப்பேட்டை பகுதியில் கிடைத்தது. உடல் மாரி என்றழைக்கப்படும் ரேணுகைக்கு அடுத்த அவதாரமாக உயிர்மாரி கூறப்படுகிறாள். இக்கதையில் ஆதி, பகவன் என்ற தம்பதிய்ராக சரஸ்வதியும் பிரம்மனும் ஒரு சாபத்தின் காரணமாகப் பிறக்கிறார்கள். சிவனுடைய அடிமுடி தேடும் கதையில் பிரம்மன் சிவனுடைய முடியைக் காணாமலேயே கண்டதாகச் சொன்னதால் விளைந்த சாபம் இது. பொய் கூறியது ஏன் என சிவன் விசாரிக்கும்போது பிரம்மன் சரஸ்வதி பேரில் பழியைப் போடுகிறான். தன்னுடைய தவறு அல்ல என்றும் சரஸ்வதி தன் நாக்கில் அமர்ந்து பொய்யுரைத்ததாகவும் கூறுவதால் பிரம்மனோடு சேர்ந்து சரஸ்வதியும் சபிக்கப்படுகிறாள். நாட்டார் புராணம் என்றாலும் சாதியப் புராணம்தானே, சாபத்தால் பிரம்மன் பிராமண குலத்தில் பிறக்கவும், சரஸ்வதி பறையர் குலத்தில் பிறக்கவும், இருவரும் காதலுற்று மணம் புரிந்து, குழந்தைகள் பெற்றெடுக்கவும் “சபிக்கப்படுகிறார்கள்.” அவர்கள் இருவருக்கும் உயிர்மாரி பிறந்ததும் சாபத்திலிருந்து விடுதலை அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆதியாகப் பிறந்த சரஸ்வதியும் பகவனாகப் பிறந்த பிரம்மனும் தென்காசிக்கு அருகே சந்திக்கிறார்கள். காதலுறுகிறார்கள். இருவருக்கும் குழந்தைகள் பிறக்கிறார்கள். பிள்ளைகளுக்கு மும்மூர்த்திகள் உவந்து பெயரிடுகிறார்கள். கபிலன், ஔவை, அதியமான், திருவள்ளுவர் இவர்களெல்லாம் இந்த ஏழு பிள்ளைகளில் சிலர். ”திறமையானவர்கள், உழைப்பாளிகள், ஆகவே இவர்கள் தேவர்கள். நீங்கள் எழுத்தாளர் என்றீர்கள். நீங்களும்தான்” என்றார் என்னிடம் கதை கூறியவர். கடைசியாக, ஆதியும் பகவனும் ஓமந்தூர் சாலைக்கருகே உப்பங்களத்தூர் என்ற ஊரில் உயிர்மாரி பிறந்தபின் இருவரும் சாபம் நீங்கி பிரம்மலோகத்தை அடைகிறார்கள். சுருக்கமாக இங்கே இதை எழுதியிருக்கிறேன். கதையில் தமிழக நிலவியலும் இலக்கியப் பரப்பும் ஒன்றோடு ஒன்று வைத்து தைக்கப்படுவதைப் பார்க்க முடிந்தது.

சாதி கடந்த காதல், மணவுறவு என்பதிலிருந்து  பண்டை இலக்கிய ஆளுமைகளின் பிறப்பை நம் நாட்டார் கதைகள் மொழிவது தனியாக ஆராயத் தக்கது. “சாபம்”  சாதிய ஆதிக்கத்தின், பாகுபாட்டின் விளைவு என்பது ஒரு வாசிப்பு. அல்லது, கபிலரும் ஔவையும் வள்ளுவரும் தமிழ்ப் பேரிலக்கிய மரபின் கிளைகளைச் சுட்டும் பெயர்களாகக் கொண்டோமானால், பேரிலக்கியம் என்பதே சாதி எல்லைகளை மறுப்பதால், மீறுவதால், தாண்டுவதால் உருவாவது என்று இக்கதை தெரிவிப்பதாகக் கருதவும் இடமுள்ளது.  சாதி அகமண முறை மறுப்புக்கும் பேரிலக்கியவாதிகளின் (ஆகவே, பேரிலக்கியங்களின்) பிறப்புக்குமான தொடர்பு, அவர்கள் கடவுளர்களால் பெயரிடப்படுவதன் மூலம் அங்கீகரிக்கப்படுகிறது, மட்டுமல்லாமல் மதிப்புக்குரியதாகிறது என்பதெல்லாமும் நோக்கத்தக்கது.

சரஸ்வதி என்ற தாய் உருவை, பண்டை இலக்கியவாதிகளின் அன்னையாக அவள் ஆன கதையை இங்கே கூறக் காரணம், சரஸ்வதியின் அடையாளம் வேத மறையோடு மட்டுப்படவில்லை என்பதைச் சொல்லவே.

***

இறுதியாக சரஸ்வதியைப் போற்றும் ஒரு மராத்தியப் பெண்கவியின் கவிதை.  பஹினாபாய் சௌத்ரி (1880-1951)  என்ற முறையாகக் கல்வி பயில வாய்ப்பு கிட்டாத ஒரு பருத்தி விவசாயியின் கவித்துவம் மிளிரும் வரிகள் இவை. பூமியுடனான உறவில் புலனுணர்வுகளை, இன்பத்தை முன்வைக்கும் இக்கவிதை இவற்றை எடுத்துரைக்கும் வகையில் தனக்குப் பேசக் கற்றுத்தந்தவளாக சரஸ்வதியை அன்னையாக அழைக்கிறது. பாகவதம், கீதை போன்ற நூல்களின் சாரத்தை எல்லாருக்குமான இயற்கைக்கானதாக மடைமாற்றுகிறது.

Bahinabai Chaudhari (Author of बहिणाबाईंची गाणी [Bahinabainchi Gani])

என் தாய் சரசோதி

என் தாய் சரசோதி

எனக்குப் பேசக் கற்றுத் தருகிறாள்

மகள் பஹினாவின் மனத்தில்

ரகசியங்களை  விதைக்கிறாள்

உங்கள் கீதையை பாகவதத்தை

ஓ பாண்டுரங்கனே!

என்னால் வாசிக்க முடிகிறது

மழையில்

விளையும் பயிர்களில்

இறைக் காட்சியொன்றைக் கண்டேன்

சட்டென என் இதயத்துக்குள்

சூரியக் கடவுள் ஒளிகாட்டினான்

உன் காலடியோசையைக் கேட்கிறேன், இறையே

சருகுகளின் ஒலியில்

நீ வருவதெல்லாமும் போவதெல்லாமும்

தென்றல் கிசுகிசுக்கிறது என் காதுகளுக்குள்

பூமியின் நறுமணத்தைப்

பூக்கள் உறிஞ்சுகின்றன

என் மூக்கைக் கேள்,

என் மூக்குத்திக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

எத்தனை காலம் இன்னும் விளையாடப் போகிறாய்

வண்ணங்களில்

என் கண்களை நிரப்பும் வண்ணங்களில்

ஸ்ரீரங்கன் வண்ணம் தீட்டுகிறான்

மொத்த ஆகாயத்திலும்

பூமியின் எல்லா ருசிகளையும்

சுவைக்கிறது என் நாக்கு

அதன் பிறகே சாரத்தை

உட்கொள்கிறது என் இருப்பு

 

(மராத்தியிலிருந்து ஆங்கிலத்தில் சுபதா ராணி கௌல், Indian Literature, 48.3 (221), pp 121-122. ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியாக தமிழில் தந்திருக்கிறேன். மராத்தியில் கவிதை இன்னும் சிறப்பாக இருக்குமெனத் தோன்றுகிறது.)