மூன்றாவது கிளாஸ் ஒயினில்
குளிர் இரவை மூழ்கடிக்கிறேன் ஜன்னலுக்கு
வெளியே பார்க்கிங்கில் ஒரு கார்
என் பக்கத்து அபார்ட்மெண்டில் வசிப்பவன்
அந்தப் பெண்ணை இதற்குமுன் பார்த்ததில்லை
அவனைவிடக் குள்ளம்
இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்
அந்தப் பெண் கையை ஆட்டி ஆட்டிப் பேசுகிறாள்
கத்துகிறாள்
கண்ணாடி அறைந்த ஜன்னல் வழியே
அப்படித்தான் தோன்றுகிறது
அவன் அவளை அறைகிறான்
அவள் கீழே விழப்போகிறாள்
அவன் தாவி அவளைப் பிடிக்கிறான்
அவள் அவன் நெஞ்சை ஆவேசமாகக் குத்துகிறாள்
காதல் நாடகத்தில் இதெல்லாம் சகஜம்
காதல் நாடகமாகத்தான் இருக்க வேண்டும்
குளிர் தொடங்கிவிட்டது
மைனஸுக்குச் சென்றுவிட்டது
கொரோனா என் சமூக உறவுகளைக் கொன்றுவிட்டது
இல்லாத என் சமூக உறவுகளை
ஜீரோவிலிருந்து ஜீரோவுக்கு என்றாலுமே
எப்போதாவது கண்ணில் நீர் துளிர்க்கிறது
அப்போது ஒயின் குடிக்கிறேன்
ஜன்னல் வெளியே பல நாட்களாய்
குருவி கூட நடக்காத நிலம்
இலையுதிர்த்துவிட்ட மரம்
அபூர்வமாக ஒரு காதல் நாடகம்
அவன் அவள் தலைமுடியைப் பற்றியிருக்கிறான்
அவள் அவனிடமிருந்து விடுபட முயல்கிறாள்
தன் தலையை இப்படி அப்படி ஆட்டுகிறாள்
அவன் இப்போது இன்னொரு அறையை வைக்கிறான்
இது காதல் நாடகம்தானா
ஜன்னல் திரையை மூடுகிறேன்
எனக்கும் இதற்கும் சம்பந்தமுமில்லை
நான் ஒருவேளை அந்தப் பெண்ணாக இருந்தால்
அதன்பின்
ஆறு வருடங்கள் அவனோடு பேசியிருக்க மாட்டேன்
ஆறு வருடங்கள் மட்டும்தான்.
Art by Marcel Duchamp, 1946-1966.
Étant donnés, “Given: 1. The Waterfall, 2. The Illuminating Gas”