Odilon Redon, “The Smiling Spider,” 1887

 

கதவுக்கு வெளியே யாரோ ஸ்விட்சில் வைத்த கையை எடுக்காமல் ஒலிக்கவிட்டிருந்த அழைப்பு மணியின் தொடர் நாராசம் தாங்காமல், பாதிக் குளியலில் வேகவேகமாக நைட்டியை அணிந்தவாறு பாத்ரூமிலிருந்து ஓடிவந்து மூச்சிரைக்கக் கதவைத் திறந்தால், பரிச்சயமே இல்லாத ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள்.

“ஏய் எப்பிடி இருக்க?” என்று என்னை நெட்டித்தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள். “இந்தாடி.”  மூன்று பைகளில் பழங்கள், இனிப்புகள், ஒரு பையில் குர்தாவோ, சுடிதாரோ. ரெடிமேட் ஆடைகளுக்கென்றே பிரசித்தி பெற்ற கடைப் பை அது.

“ஒரு மாத்தமில்ல ஒன்கிட்ட. அதே கண்ணு, அதே மூக்கு” என்று தன் நகைச்சுவைக்குத் தானே சிரித்துக்கொண்டவளை யாரென்று எனக்கு அடையாளம் தெரியவில்லை.  என் வீட்டின் முன்னறையைத் தன் அகல விழிகளால் ஒரு சுற்று சுற்றிப் பார்த்தாள். “சுத்தமா வச்சிருக்கடி. படிக்கறப்ப ஒரு நாளாச்சும் தொடப்பத்தக் கையில எடுத்திருப்பியா?”

நான் முழித்ததைப் பார்த்தவள் என் கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டினாள். “தெரிலயா? சாந்திடி. கந்தசாமி காலேஜ்ல பிஸிக்ஸ் படிச்சோமே. உன் பெஞ்சில உக்காந்திருந்த ஜி. சாந்தி இல்ல. ரெண்டு ரோ பின்னாடி உக்காந்திருந்த பாப் சாந்தி. அப்டித்தானே எனக்குப் பட்டப்பேர் வச்சிருந்தீங்க?” பார்த்தேன். கேள்வி கேட்டவள் பாப்தான்  வைத்திருந்தாள். ஆனால் ‘பாப் சாந்தி’ என்ற பெயர் என் நினைவடுக்குகளில் கட்டக் கடைசி அடுக்கில்கூட இல்லை. எங்கள் பெஞ்சில் சுமிக்கு அடுத்து ஓரத்தில் அமர்ந்திருந்த ஜி.சாந்தியை நினைவிருக்கிறது, பருக்கள் வார்த்திருந்த அவள் முகம், ஐ லைனர் இல்லாமலேயே ஐ லைனர் போட்டது போலிருக்கும் அவள் கண்கள்….இருக்கட்டும், இவள் யார்?

“வந்தவளுக்கு ஒரு கிளாஸ் தண்ணி தர மாட்டியா, என்னத்தப் போ!” என்று அலுத்துக்கொண்டபடி “மொதல்ல தண்ணி கொண்டா, லெமன் இருந்தா லெமன் ஜூஸ்!” என்று கேட்டாள். சமையலறைக்குச் சென்றேன். உள்ளுக்குள் கொஞ்சம் பயம். ஒருவேளை இவள் திருட வந்தவளோ? கொள்ளைக்காரியோ? ஆனால் எந்தத் திருடி, கொள்ளைக்காரி ஸ்வீட் பாக்கட்டும் பழங்களும் துணிமணியும் வாங்கிக்கொண்டு வந்து கதவைத் தட்டப் போகிறாள்? அது சரி, யார் இவள்? கூடப் படித்தாளா, இல்லையா? எனக்கு ஏன் இத்தனை ஞாபக மறதி? சென்ற மாதம்தான் ஐம்பதைத் தொட்டிருக்கிறேன். ஆனாலும், கிழங்கட்டைகளைப் போல இப்போதே இத்தனை மறதி என்றால் மிச்ச நாளை எப்படி ஓட்டப்போகிறேன்? போகிற போக்கில் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து யாரோ என்று நினைத்துக்கொள்வேன் போல.

சோபாவில் ஹாயாகச் சாய்ந்திருந்தவளிடம் ஜூஸ் தம்ளரை நீட்டினேன்.  “ஒரு கிளாஸ் கிடையாதா வீட்ல? காப்பி மாதிரி தம்ளர்ல தரே?” என்றாள் உரிமையோடு. பிறகு கொஞ்சம் நேரம் கடலூர் கல்லூரி, கூடப் படித்த தோழிகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தொண்ணூறு சதவிகிதம் அவள்தான் பேசினாள். அவள் என்னிடம் கூறிய சில விஷயங்கள்—கல்லூரி ஆண்டு விழாவில் நாங்கள் நடனமாடிக்கொண்டிருந்தபோது மேடை பிளந்து விழுந்தது, பேராசிரியர் ஒருவர் கார் விபத்தில் மாண்டது முதலியவை—எனக்கும் ஞாபகமிருந்தன. சிலவற்றை அவள் இட்டுக்கட்டிச் சொல்கிறாளோ என்று சந்தேகமாக இருந்தது. என் ஞாபக மறதியும் அதே நேரத்தில் உறுத்திக்கொண்டிருந்தது.

ஆனால், அவள் பேசப் பேச என்னோடு என் வகுப்பில் மூன்று வருடங்கள் கூடவே படித்த பாப் சாந்தியை மறந்துவிட்ட என்னை உள்ளுக்குள் கடிந்துகொண்டிருந்தேன். பாப் சாந்தி  துபாயில் வசிக்கிறாளாம். கணவன் பெட்ரோல் கம்பெனியில் பொறியியலாளராம். கல்லூரி வகுப்பில் எனக்கு அடுத்து அமரும் சுமியிடம்  முகவரி வாங்கிக்கொண்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறாள். சுமியை நான் எப்போது கடைசியாகப் பார்த்தேன்? அதுவும் நினைவில்லை. சுமி என் தம்பியோடு, அதாவது என் சித்தப்பா மகனோடு, ஒரே அலுவலகத்தில் பணியாற்றுகிறாளாம். இதையும் பாப் சாந்திதான் சொன்னாள். நான் இந்த வீட்டில் குடியேறி ஒரு மாதம்தான் ஆகிறது. ஆனால், சுமி என் இப்போதைய முகவரியை என் தம்பியைக் கேட்டுத் தெரிந்துவைத்திருக்கிறாள்.  இதுவரை என்னை மறக்காமலிருக்கிறாள். கல்லூரியில் ஒன்றாகத் தேநீர் குடித்து, மசால்வடை தின்ற பிரியம் தொடர்கிறது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின்னும் நிலத்தடி நீராக ஒழுகும் நட்பு. நெகிழ்ந்து போயிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

”அபார்ட்மென்ட் அம்சமா இருக்கு, சுத்திக்காட்டேன்” என்றாள் ஜூஸ் தம்ளரைக் கீழே வைத்தபடி பாப் சாந்தி. “வாயேன்” என்று முதலில் சமையலறையைக் காட்டினேன். பிறகு ஹாலை ஒட்டி இருந்த பெரிய சிட்-அவுட்டுக்குப் போனோம். அங்கே சில செடித் தொட்டிகள் இருந்தன. நான் ஒழுங்காக தண்ணீர் ஊற்றிப் பராமரிக்காததால் வாடிப் போனவை. “செடியை வாட விடாதடி, பாவம்,” என்று எச்சரித்தாள்.  சிட்-அவுட்டிலிருந்து பார்த்தால் பக்கத்து வீட்டில்  ஒன்றே போல் வளர்ந்திருந்த மூன்று குட்டை மாமரங்கள் தெரியும். அழகான தோட்டத்தோடு உள்ள தனி வீடு அது.  ”தி. நகரில் இப்படி வியூ இருக்கற ஒரு அபார்ட்மென்ட் கிடைக்காது, இந்த வீட்டை விட்டுடாதே” என்று சிலாகித்தாள்.

என் வீடென்ன தாஜ் மஹாலா, இரண்டு படுக்கையறைகள் உள்ள 800 சதுர அடி சுமார் நடுத்தர வர்க்க வாடகைக் கூடு அது. இதை இவள் சுற்றிக்காட்ட வேறு சொல்கிறாள் என்று நினைத்தபடி இரண்டாவது படுக்கையறை குட்டிப் பெட்டிக்குள் நுழைந்து பார்த்துவிட்டு, பிறகு மாஸ்டர் படுக்கையறை என்ற சற்றுப் பெரிய பெட்டிக்கு வந்தோம். ஏ.சி சன்னமாக ஓடிக்கொண்டிருந்தது. கட்டிலின் மேற்புறம் ஒரு ரசம்போன நிலைக்கண்ணாடியை மாட்டியிருந்தேன். எதிர்ப்புறம் எனக்கு எப்போதோ யாரோ பிறந்த நாள் பரிசாக அளித்த குஸ்தவ் கிளிம்ட்டின் “The Kiss” ஓவியம், அதாவது அதன் பிரதி.

“தி கிஸ் தானே. பொன் சொரியரா மாதிரி லயிச்சி ரெண்டு பேரும்  முத்தம் கொடுக்கறாங்க…செவ்வக செவ்வகமா அவன், பூப் பூவா அலையலையா அவ” என்று என்னிடம் கூறுவதைப் போலப் படத்தைப் பார்த்துச் சொன்னாள்.  அவள் கண்கள் அந்த ஓவியத்திலேயே குத்திட்டு நின்றது போல் நின்றன. ஒரு கணம் கருவிழி மறைந்து முழுக்க வெள்ளை நிறமானதா அவள் கண்?

சில நிமிடங்கள் யுகங்களாக நகர்ந்தன.   படத்திலேயே தன்னை ஊன்றி நின்ற அவளை அங்கிருந்து கிளப்ப வேண்டி, “ரொம்பச் சின்ன அபார்ட்மென்ட் இது, இந்த அறையுமே  பன்னெண்டுக்குப் பத்துதான் இருக்கும். நாம ஹாலுக்கு போலாமா?” என்றேன். அங்கிருந்து நகரத் தொடங்கினேன்.

“ஹாலுக்குப் போலாமாவா, போய்டுவியா நீ, வுட்டுருவேனா நான்?” என்று அவள் தடாலென என்னைக் கட்டிலில் தள்ளி என்மேல் பாய்ந்து நான் நகராதபடி என் தோள்களை படுக்கையோடு சேர்த்து அழுத்தினாள்.

“பாப் சாந்தி, ஏன் இப்டி பண்றே, என்னாச்சு?” என்றேன். பயத்தில் எனக்குப் பாதி வார்த்தை வரவில்லை.

“பாப் சாந்தியா…இப்ப தெரியுதாடி அடையாளம். இதுவரைக்கும் தெரியாதபடிக்கு நடிச்சே. ஆமாம்டி, நான் பாப் சாந்திதான். இப்படித்தானே, இந்த ரெண்டு பேர் மாரிதானே அன்னிக்கு காலேஜ் வாசல்ல ஒட்டி நின்னுகிட்டு நிரஞ்சனுக்கு முத்தம் தந்தே….என்னை நம்ப வச்சிக் கழுத்தறுத்தே.” ஒரு விலங்கைப் போல பல்லை ஈயென்று காட்டியபடி என் தாடையைக் கடிக்கவந்தாள் பாப் சாந்தி.

நிரஞ்சனா, யார் நிரஞ்சன்? எனக்குத் தலை சுற்றியது. நான் படித்த கந்தசாமி நாயுடு கல்லூரி பெண்கள் கல்லூரி. ஆண் வாசத்தையே கல்லூரிச் சுற்றுச்சுவருக்குள் மட்டுமில்லாமல், சுற்றி இரண்டு மைலுக்கு அனுமதிக்காத கல்லூரி. கல்லூரி வாசலில் முத்தம் தந்தேனா?

“நிரஞ்சன்னு யாரையுமே எனக்குத் தெரியாது.”

“தெரியாது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உனக்கு பாப் சாந்தியையும்தான் தெரியாது…இப்பத் தெரியும் பாரு” என்று வலது கையால் என் இடது தோளுக்கும் கழுத்துக்கும் இடையில் வைத்து அழுத்தியபடி தன் இடது கையால் பின்பக்க ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் துழாவினாள். அந்தச் சில நொடிகளில் அவளைத் தள்ளிவிட்டுவிட்டு நான் கட்டிலிலிருந்து குதித்தேன்.

“போயிருவியா? ஒன்னக் கொல்லாம விடமாட்டேன், நட்புத் துரோகி.” பாப் சாந்தியின் கையில் இப்போது ஒரு குறுங்கத்தி. அந்தக் கணத்தில் நான் ஒரே ஓட்டமாக முன்னறைக்கு ஓடி வாசற்கதவைத் திறக்க, அவள் என்னைப் பின்னாலிருந்து இழுக்க, அதற்குள் மேல் தள அபார்ட்மென்டிலிருந்து இரண்டு  பேர் இறங்கிவர, “என்னாச்சு மேடம்? மேடம்?” என்ற குரல்கள் கேட்டபோது, நான் கீழே தள்ளப்பட,  காலடியில் தரை நழுவியது என்று எத்தனை கதைகளில் படித்திருக்கிறோம், இப்படித்தான் தரை நழுவியிருக்கும் போல என்று நினைத்தபோதே அந்த நினைப்பிலிருந்தும் நழுவிச் சென்றேன்.

ஒரு அரதப் பழைய மருத்துவமனையில் நான் இருக்கிறேன் என்று உணர்ந்தபோது இது நடந்து இரு நாட்கள் கடந்திருந்தன. புற நகரில் வசிக்கும் என் தங்கைக்கு அபார்ட்மென்ட்காரர்கள் யாரோ தகவல் தெரிவித்து வரச் சொல்லியிருந்திருக்க வேண்டும். நான் கண் விழித்தபோது என் தங்கையும் ஒரு டாக்டரும் மங்கலாகத் தெரிந்தார்கள். டாக்டர் போனபின் “ஒன்னுமில்லக்கா, லைட்டா விலாவிலதான் அடி, அதிர்ச்சில மயக்கம் போட்டுட்டே” என்றாள் தங்கை. ”நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிரலாம்.”

அவள் பிழிந்து தந்த சாத்துக்குடிச் சாற்றைக் குடித்துவிட்டு மெதுவாக  பாப் சாந்தி என்ன ஆனாள் என்று விசாரிக்க முனைந்தேன்.

”யாரக்கா அது?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.

“அதான், என்னைக் குத்தினவ.”

“உன்ன யாரும் குத்தலியே. நீ அபார்ட்மென்ட் கதவைத் திறந்துட்டு வேகமா வர்றப்ப அப்டியே சறுக்கி நிலையில விழுந்தேனு சொன்னாங்க.”

“அப்ப பாப் சாந்தி ஓடிப் போயிருப்பா.”

”யாருக்கா அது? பாப் சாந்தி பாப் சாந்திங்கறே?”

“ஒரு கிறுக்கு. அவ உளறின மாதிரி நான் நிரஞ்சனுக்கு முத்தம்லாம் தரல. எனக்கு நிரஞ்சன் யாருனே தெரியாது.   என்ங்கற எழுத்துல தொடங்கற பேர்லயே எனக்கு யாரையும் தெரியாது. மொதல்ல அவளையே எனக்குத் தெரியாது.”

தங்கை கவலையோடு என்னைப் பார்த்தாள்.

“ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருக்கே. ரெஸ்ட் எடுத்துக்கோ. சரியாயிடும். என்னோடயாவது வந்து நாலு நாள் இரேன்கா.”

“ம்.”

பாப் சாந்தி ஓடிப் போனதை மேல் தளத்திலிருந்து இறங்கி வந்த இருவர் பார்க்கவில்லை போல. இல்லாவிட்டால் இவளிடம் தெரிவித்திருப்பார்கள். நல்ல வேளை, இவளுக்குத் தெரிந்திருந்தால் பயப்படுவாள்.

ஆனால்,  நான் கீழே விழுந்த நேரத்திலேயே என்னை விசாரித்த அவர்கள் கண்ணில் படாமல் அவர்களைத் தாண்டி பாப் சாந்தி எப்படி ஓடிப் போயிருக்க முடியும்? ஒருவேளை என்னைத் தள்ளிவிட்டுவிட்டு என் அபார்ட்மென்டுக்குள் சட்டென மறைந்து இப்போது உள்ளே ஒளிந்துகொண்டிருக்கிறாளோ என்னவோ? இறங்கி வந்தவர்கள் நான் ஏதோ தரை வழுக்கி கீழே விழுகிறேன் என்று நினைத்துக்கொண்டிருக்கலாம். நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஒருவேளை பாப் சாந்தி  கத்தியால் மீண்டும் என்னைக் குத்த வரலாம். யாருக்குத் தெரியும்?

அன்றிரவு அரைகுறைத் தூக்கத்திலும் மருந்துகள் ஏற்படுத்திய மயக்கத்திலும்  விழிப்பு கண்ட சொற்ப நிமிட இடைவெளிகளில் தீவிர சிந்தனையிலும் சென்றது. அடுத்த நாள் காலை டிஸ்சார்ஜ் ஆனவுடன் தி.நகர் காவல் நிலையத்துக்குச் சென்று பாப் சாந்தியைப் பற்றிப் புகார் அளித்துவிட்டு என் வீட்டுக்குப் போகலாம் என்று முதலில் நினைத்தேன். பிறகு, தங்கையும் வீட்டில் என்னோடு தங்க வருவதாக இருந்ததால், நாங்கள் இருவரும் அவளைச் சமாளித்துவிடலாம் என்று நம்பினேன்.

நான் சந்தேகித்ததைப் போல் என் அபார்ட்மென்டில் பாப் சாந்தி அடுத்த நாள் இல்லை. என் தங்கை சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு அவள் வீட்டுக்குப் போய்விட்டாள். அதன் பின் அங்கு குடியிருந்தவரையில்  வீட்டின் அழைப்பு மணியை யார் அழுத்தினாலும் கதவில் பொருத்தியிருக்கும் உருப்பெருக்கிக் கண்ணாடி வழியாகப் பார்த்து உறுதி செய்துகொண்ட பின்னர்தான் திறப்பேன். பாப் சாந்தி அனுபவம் கற்றுத்தந்த பாடம்.

இரு வருடங்கள் கழித்து அங்கிருந்து மாறி ஆர்.ஏ. புரத்தில் இருந்த ஒரு வசதியான அபார்ட்மென்டுக்குச் சென்ற மாதம் குடி வந்தேன். சென்ற வாரம் அருகேயுள்ள நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டில் மாகி நூடில்ஸ் பாக்கட்டைத் தேடிக்கொண்டிருந்தபோது என் பெயரைச் சொல்லி அழைப்பது போல் கேட்டது. தள்ளுவண்டியோடு ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். பார்த்தவுடனேயே ஜி. சாந்தி என்று  தெரிந்துவிட்டது. ஐ லைனர் இல்லாமலேயே ஐ லைனர் வரைந்த மாதிரியான கண்கள். பரஸ்பர நல விசாரிப்பு முடிந்தவுடன் சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே இருந்த ஒரு சிறிய காப்பிக் கடையில் காப்பி குடிக்க வந்தோம்.  காப்பி குடித்துக்கொண்டிருக்கும்போது பாப் சாந்தி விவகாரத்தைப் பற்றி அவளிடம் சுருக்கமாகச் சொன்னேன்.

“நீ ஒரு சாந்திதானே நம்ம கிளாஸ்ல இருந்தது? ஆனா பாப் சாந்தினு தான் வந்தவ தன் பேரைச் சொன்னா…..”

ஜி.சாந்தி இடைமறித்தாள்.

“உனக்கும் அப்டி யாரையும் தெரியாதா? நம்ம கிளாஸ்னாளே” என்றாள்.

“எப்ப சொன்னா?”

“போன வாரம்  பாப் சாந்தினு ஒருத்தி என் வீட்டுக்கு வந்தா. நம்ம கிளாஸ்லதான் அவளும் படிச்சதா சொன்னா. அவதான் உன் வீட்டுக்கும் அப்ப வந்திருப்பா.”

”நீ வீட்டுக்குள்ள விட்டியா? நிரஞ்சன்னு யாரப் பத்தியாவது ஏதாவது கேட்டாளா?” என்று அவசரமாகக் கேட்டேன்.

“இல்ல, அஞ்சு நிமிஷம்தான் அவ இருந்தா. வீட்ல என் ஹப்பி இருந்ததால ரொம்பப் பேச முடியல. நம்ம கிளாஸ்ல நமக்கு ரெண்டு ரோ பின்னாடி உட்கார்ந்திருந்தா சொன்னா. நான் தான் அவளை மறந்துட்டேன்னு நினைச்சேன். உன் அட்ரஸ்தான் கேட்டா. ஆமா, யாரு நிரஞ்சன்?”

“என் அட்ரஸக் கொடுத்தியா என்ன?” என்றேன் பரபரப்பாக. கேட்டவுடனேயே தோன்றியது ஜி.சாந்தியிடம் என் புது அபார்ட்மென்ட் அட்ரஸ் இருக்க வாய்ப்பில்லை என்று. என் பரபரப்பு கிளம்பியவுடனேயே அடங்கிற்று.

”என்கிட்டே உன் அட்ரஸ் இல்ல. ஆனா உன்னோட மொபைல் நம்பர், முன்னாடி நீ எப்பவோ தந்தது, அதைக் கொடுத்தேன்” என்று தொடர்ந்தாள்.

என் தொலைபேசி எண்ணைக் கொடுத்தாளா, அந்த எண்ணை நான் இதுவரை மாற்றவில்லை.  அதை இன்னமும் எப்போதாவது உபயோகிக்கிறேன். அப்படியென்றால் என் முகவரியை அவளால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். யோசித்தபோது என் வயிற்றில் புளியைக் கரைத்தது. அதன்பின் ஜி.சாந்தி பேசிய எதிலும் என் மனம் நாட்டம் கொள்ளவில்லை.

ஜி.சாந்தியைச் சந்தித்த அடுத்த நாள் காலை முதல் காரியமாக என் தொலைபேசி எண்ணை மாற்றினேன். சீக்கிரத்திலேயே இந்த வீட்டை நான் காலி செய்துவிட வேண்டும் என்று வீடு தேடத் தொடங்கினேன்.

அன்றிரவு என் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. கண்ணாடி வழியாகப் பார்த்தேன். வாட்ச்மேன் நின்றுகொண்டிருந்தார். கதவைத் திறந்தேன். “மேடம், உங்களைப் பாக்கணும்னாங்க.” வாட்ச்மேனின் பின்னாலிருந்து பாப் சாந்தி வந்து நின்றாள்.

 

 

(இச்சிறுகதை காலச்சுவடு, ஆகஸ்ட் 2020 இதழில் பிரசுரமாகியுள்ளது. இதழுக்கு என் நன்றி!)