ஒரு நாள் மொத்த வசந்தத்தையும்
ஒரு ஊஞ்சலையும்
கொண்டுவரும்போது

  

ஒரு எறும்பு ஒரு கிடங்கு சர்க்கரை மூட்டைகளைக்
கொண்டுவருவது மாதிரி
அது சர்க்கரை மூட்டையின் மேல் நின்று
அறிவிக்கிறது
“எல்லா ஆசிகளும் தரப்பட்டுவிட்டன”
மனதின் வடக்கு தெற்குக் கண்டங்களில்
சாந்தமுற்ற பீடபூமிகளில்
உதவாக்கரை தீவுகளில்
பத்து தலைப் பாம்பு நடமாடும் பாலைகளில்
ஒரேயடியாக
வசந்தம் அருள்பாலிக்கிறது
ஒரு ஊஞ்சல் வானத்திலிருந்து
இறக்கிவிடப்படுகிறது
அதன் கயிறுகளைக் கண்டுகொள்ளாதவரை
என்ற புள்ளி வரை
தரப்பட்டிருக்கிறது இந்த நாளின் ஆயுள்

 

 

Eric Rohmer’s La Collectionneuse (1967)

 

 

வேற்றுலகங்களில் இருக்கிறோம்

 

பேசிக்கொள்ள முடியாதென்று
பேசிக்கொள்ள முடிவதில்லை
இங்கே புற்கள் சுவர்களிலிருந்து முளைக்கின்றன
மழை பச்சையாய்ப் பெய்கிறது
வீடுகளில் புத்தகங்களைக்
கட்டிப்போட்டு வளர்க்கிறார்கள்
பூனைகளைச் சமைக்கிறார்கள்

அங்கே உன் அன்றாடம் மாறியிருக்காது
அதே கோலாகலங்கள் இளம்பெண்களுக்கு
புன்னகைத்தபடி கதவைத் திறந்துவிடும் நாகரிகங்கள்
நான் நுழைந்து சென்ற
ஓடிவந்த அதே கதவு
ஆனால்
நான் தொலைந்துவிடவில்லை
குளிரில் நோகின்றன எலும்புகள்
போர்வையின் இருளுக்குள்
உன் பெயரின் முதல் எழுத்தாக மாறி
கதகதக்கிறது உடல்
இப்படித்தான் தொடர்பு கொள்கிறாய்
இப்படித்தான் உறவு கொள்கிறோம்