ஒரு மனிதன்

ஒருவனது அம்மா சாகக் கிடக்கிறாள்
அவன் ஒரு மருத்துவரைப் பார்க்கப் போகிறான்
அழுகிறான்
போகும் வழியில் தன் மனைவி
இன்னொருவனுடன் இருப்பதைப் பார்க்கிறான்
அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்
சற்றுத் தொலைவிலிருந்து
மரத்திலிருந்து மரத்துக்குச் சென்று
அவர்களைப் பின்தொடர்கிறான்
அழுகிறான்
தன் இளம்பருவத் தோழன் ஒருவனைப் பார்க்கிறான்
நாம் பார்த்து எத்தனை ஆண்டுகளாயிற்று!
அவர்கள் ஒரு மதுபான விடுதியில் நிற்கிறார்கள்
உரையாடுகிறார்கள், சிரிக்கிறார்கள்
அந்த ஆள் பின்கட்டுத் தாழ்வாரத்துக்கு
ஒன்றுக்கிருக்கப் போகிறான்
ஒரு இளம்பெண்ணைப் பார்க்கிறான்
அது இரவு நேரம்
அவள் பாத்திரங்களைத் துலக்கிக்கொண்டிருக்கிறாள்
அவன் அவளிடம் செல்கிறான்
இடுப்பைப் பற்றியிழுக்கிறான்
இருவரும் சேர்ந்து சுழன்று நடனமாடுகிறார்கள்
சேர்ந்து அந்த இடத்தை விட்டுச் செல்கிறார்கள்
சிரிக்கிறார்கள்
ஒரு விபத்து
பெண் நினைவிழக்கிறாள்
அந்த ஆள் தொலைபேசியைத் தேடிச் செல்கிறான்
அழுகிறான்
விளக்கெரியும் வீடொன்றுக்கு வருகிறான்
தொலைபேசியைக் கேட்கிறான்
யாரோ அவனை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்
இரவுச் சாப்பாட்டுக்கு இருடா
இல்லை
தொலைபேசி எங்கே இருக்கிறது
சாப்பிடுடா
அப்புறம் போகலாம்
அவன் சாப்பிட உட்கார்கிறான்
வெறி பிடித்தது போல குடிக்கிறான்
சிரிக்கிறான்
அவர்கள் அவனிடம் கவிதை கூறக் கேட்கிறார்கள்
கூறுகிறான்
பிறகு ஒரு மேஜைக்கடியில் தூங்கிவிடுகிறான்

 

 

சூழ்நிலை இக்கட்டாகிக்கொண்டிருக்கிறது

புகைக் கண்ணாடி வழியே
சூரியனைப் பார்த்தாலே போதும்
நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று தெரியும்:
அல்லது எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது
என்று நீங்கள் நினைக்கிறீர்களோ என்னவோ.
நான் என்ன சொல்கிறேன் என்றால்
குதிரைகள் இழுத்துச் செல்லும் கார்களுக்கு
நீராவியில் இயங்கும் விமானங்களுக்கு
கல்லில் செதுக்கிய தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு
திரும்பிப் போய்விடுவோம்.
பெரிசுகள் சொன்னது சரிதான்:
நாம் திரும்பிப் போய்
மீண்டும் விறகை வைத்துச் சமைக்க வேண்டும்.

(நிகனோர் பர்ராவை மொழிபெயர்த்தலில், கவிதைகளின் செம்மையாக்கத்துக்கு உதவும் நண்பர் Ghostieக்கு நன்றி! தவறுகள் இருந்தால் அவை என்னுடையவை மட்டுமே!)