தற்காலத்தில் தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளராகத் திகழும் திரு ஆர். சிவக்குமாரின்  ‘உருமாற்றம்’ கதையை முன்வைத்து மொழிபெயர்ப்பு சார்ந்த சில கருத்தாக்கங்களைப் பகிர நினைக்கிறேன். முதலாவது மொழிபெயர்ப்பு என்ற பயன்பாட்டைவிட மொழிபெயர்த்தல் என்ற பயன்பாடு எனக்குப் பிடித்திருக்கிறது. மொழிபெயர்ப்பு என்பதில் ஒரு முடிந்துவிட்ட நிலை, ஆக்கப்பட்ட பொருள் (object) குறிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில் மொழிபெயர்த்தல் (அல்லது மொழியாக்கம் செய்தல்) என்பது ஒரு தொடர்ச் செயற்பாட்டை. ஒரு processஐக்  குறிப்பதாக உள்ளது. மொழிபெயர்த்தல் என்பது முடிந்துவிட்ட ஒன்றல்ல, பதிப்புக்குப் பின்னாலும் தொடரக்கூடியது, சில சமயம் அடுத்த பதிப்புகளில், சில சமயம் மொழிபெயர்ப்பாளரின் மனங்களில். தமிழினி பதிப்பித்திருக்கும்  ‘உருமாற்றம்’ (2014) நூலின் முன்னுரையில்,  சிவகுமார்  “மொழிபெயர்ப்பு ஒரு தொடர் செயல்முறை” என்று கூறுவதும்  “முதல் மொழிபெயர்ப்பில் இருந்த சில வார்த்தைகளையும் சில வாக்கிய அமைப்புகளையும் இப்பதிப்பில் மாற்றி [இருப்பதாக]” கூறுவதும் நாம் கவனிக்கத்தக்கது. அடுத்தடுத்த பதிப்புகளில் வேறு சில மாற்றங்களையும் அவர் செய்யலாம். மொழிபெயர்த்தல் என்பது  தொடர்ச் செயற்பாடு என்றால் அது எப்போதுமே திறப்புகளோடு கூடியது, திருத்தங்களுக்கு ஆகட்டும், செம்மைப்படுத்தல்களுக்கு ஆகட்டும்.

தொடர்ச் செயற்பாடாக இருக்கும் மொழிபெயர்த்தல் என்பதன்  இலக்கு என்ன, அந்த இலக்கை நோக்கி மொழிபெயர்ப்பாளரின் பயணம் எவ்வகையில் நடக்கிறது என்பது இச்சிறு கட்டுரையின் மையப்பொருள். கம்பனிலிருந்து தொடங்க விரும்புகிறேன். பாலகாண்டத்தில் பாயிரத்தில், இராமாவதாரம் எனப்படும் கம்பராமாயணத்தை ஆக்கியதன் நோக்கத்தை “தெய்வமாக் கவி மாட்சி தெரிவிக்கவே” எனும் கம்பன், “தேவபாடையின்” என்று தொடங்கும் பாயிரச் செய்யுளில் இந்த நூலாக்கத்தை தான்  “தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு” எனப் பாடுகிறான். “இது உணர்த்தல்” என்பது பொருட்செறிவு மிக்கது. வேறொரு மொழியின் மூல ஆக்கத்தை மொழிபெயர்த்தலின் வாயிலாக உணர்த்தல் என்ற பொருள் இதற்கு உண்டென்றாலும், மொழிபெயர்த்தல் அதனளவிலேயே  தான் கூறவந்ததை  உணர்த்தக்கூடியது என்ற பொருளையும் ஒருவர் கொள்ளலாம்.  முக்கியமாக, ‘உணர்த்தல்’ என்பது வாசகரை மையப்படுத்துவது என்பது கவனிக்கத்தக்கது.   “உணர்த்தல்” என்பதை வாசகரிடம் திறன்படத் தொடர்புறுத்தல் என்று பொருள்கொள்ள முடியும். மூல ஆக்கத்துக்கு மொழிபெயர்ப்பு உண்மையாக, நேர்மையாக இருத்தல் போன்றவையெல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படுகிற இன்றைய காலகட்டத்துக்கும் கம்பன்   மொழிபெயர்த்தலுக்கென முன்வைக்கிற இலக்கு பொருத்தமானது.

மொழிபெயர்த்தல் எனும் செயற்பாட்டின் இலக்கு திறன்படத் தொடர்புறுத்தல் எனக் கொண்டோமானால் மொழிபெயர்ப்பாளர் இதை முன்னிட்டுக் கைகொள்ளும் மொழிப் பயன்பாடு தொடர்பான உத்திகள், நிலைப்பாடுகள் ஆகியவற்றை ஆராய்வது மொழிபெயர்த்தல் தொடர்பான விமர்சனத் திறனாய்வுக்கு உதவக்கூடியதாக இருக்கும்.  இத்தகைய உத்திகள், நிலைப்பாடுகள் ஆகியவற்றைப் பேசும் வகையில் சமூகவியலாளரும் அறிஞருமான பியர் போர்தியு தன் நூலொன்றில் (Outline of a Theory of Practice) முன்வைக்கும் கருத்தாக்கமான  ‘bodily hexis’ என்பது உதவக்கூடும். இந்தக் கருத்தாக்கம் டேவிட் சார்ல்ஸ்டன் உள்ளிட்ட சில மொழிபெயர்ப்புத் திறனாய்வாளர்களால்  ‘translatorial hexis’ என்று மீள வடிவமைக்கப்பட்டு, முதன்மையாக மேலெடுக்கப்பட்ட ஒன்று.

விரிவாக இதைப் பேச இயலாவிட்டாலும், எளிமையாக இக்கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்த எண்ணுகிறேன்.  ‘Bodily hexis’ — இதை உடற்சார்பு என மொழிபெயர்க்கிறேன் — என்பதை  முகபாவங்கள், சைகைகள், நடை உள்ளிட்ட உடலார்ந்த செயற்பாடுகளின் (embodied practices)  ‘ஒழுங்கமைவு’ (schema) எனக் கூறலாம். ஓர் உதாரணம் தருகிறேன். திருமண மண்டபத்தில் மணமேடையை நோக்கி நிமிர்ந்து, சிரித்த முகத்தோடு நடந்து வரும் மணமகன். சமூக, பண்பாட்டு நியதிகளின், உற்றார், சுற்றத்தின் எதிர்பார்ப்புகளுக்கேற்றபடி, வடிவமைத்துக்கொள்ளும் அவனது  உடலார்ந்த ஒழுங்கமைவு, இதை மணமகனுக்கான உடற்சார்பு எனக் கூறலாம். இத்தகைய உடற்சார்பு என்பது தனிநபர் செயற்பாடாக முதல் பார்வையில் தோன்றினாலும் அவ்வாறு அது கருதக்கூடியதல்ல.  சமூகப் பண்பாட்டுத் தளத்தில் அவனுக்கு, ஏற்பை, அங்கீகாரத்தை, கௌரவத்தை, பண்பாட்டு முதலீட்டை ஈட்டித் தரக்கூடியது அது.  போலவே, ‘மொழிபெயர்ச் சார்பு’ (translatorial hexis) என்பது  பண்பாட்டு அறிவுச் சூழலில், பதிப்பக, வாசகச் சூழலில்  தொழிற்படும்  நியதிகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பொருந்த, ஏற்பும் அங்கீகாரமும் பெறும்வகையில், ஒரு மொழிபெயர்ப்பாளர் தன் மொழிபெயர்த்தலை வடிவமைத்துக்கொள்ளுதல் என்பதையே சார்ல்ஸ்டன் போன்றவர்கள் முன்வைக்கிறார்கள்.

சிவகுமாரின்  ‘உருமாற்றம்’ தொகுப்பில் அவரது மொழிபெயர்ச் சார்பை அணுகும் முகமாக, அவரது சில மொழிபெயர்ப்பு உத்திகளை, நிலைப்பாடுகளை பேச நினைக்கிறேன். இவற்றைப் பல கோணங்களில் பார்க்கலாம். அவர் கையாளும் பயன்பாடுகள், வழக்காறுகள் போன்றவை, மூல ஆக்கத்தை ஒப்பிடுகையில் அவர் சேர்க்கும், விடுக்கும், விளக்கும் வாக்கியங்கள் அல்லது விவரணைகள்; நூலுக்கான அவரது முன்னுரை போன்றவை. இந்த நூலைப் பற்றி அவர் எங்காவது எழுதியிருந்தால், நேர்காணலில் குறிப்பிட்டிருந்தால் அத்தகைய தகவல்கள் முதலான அனைத்துமே இந்த உத்திகளில், நிலைப்பாடுகளில் அடங்கும். இவை அனைத்துமே அவரது மொழிபெயர்ச் சார்பைக் கட்டியமைப்பவை. சிவகுமாரைப் பொறுத்தவரை, இந்தத் தொகுப்பு என்றில்லாமல் அவரது மற்ற மொழிபெயர்த்தல்களும் தமிழ் அறிவுச் சூழலில் பெரிய அங்கீகாரமும் வரவேற்பும் பெற்றிருக்கின்றன. இதற்குக் காரணம், அவரது மொழிபெயர்ச் சார்பு,  உணர்த்தல் என்பதில் கவனம் கொண்டிருப்பதாலேயே என நான் கருதுகிறேன். (என்னிடம் இந்தக் கூட்டத்துக்கு வரச் சொல்லி அழைத்த, கட்டுரை எழுதக் கேட்ட கவிஞர் இசை, சிவகுமாரின்  ‘உருமாற்றத்தை’ வாசித்துவிட்டு பல நாட்கள் தான் அலைக்கழிந்ததாக உணர்ச்சி மேலிடக் கூறியதை நான் இங்கே குறிப்பிட வேண்டும். இசையைப் போல பலரையும்  ’உருமாற்றம்’ பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.)

காஃப்காவின்  ‘உருமாற்றம்’ 1912ஆம் ஆண்டின் இறுதியில் எழுதப்பட்டு 1915இல் பிரசுரம் கண்ட, மூன்று பகுதிகளைக் கொண்ட கதை. இருண்மை நகைச்சுவையோடு ஒரு மனிதன் பூச்சியாவதைச் சொல்கிற கதை. உழைப்பிலிருந்தும் சமூகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் அந்நியமாதல், தனிமைப்படுதல், உறவுப் போராட்டங்கள் போன்றவற்றை விசாரணை செய்வதாகக் கதை உள்ளது. பூச்சியாக மாறுகிற மனிதன் எந்த அளவுக்குப் பூச்சி, எந்த அளவுக்கு மனிதன் என்ற அடையாளக் குழப்பத்தோடு கூடவே இருத்தலியல் சிக்கலுற்று உழலும் மனிதனின் சஞ்சலத்தையும் வேதனையையும் பேசுகிற கதை. சுரண்டல் மலிந்த, அக்கறையற்ற உலகில் தனிமனிதனின் நிலை குறித்த கலை விசாரணை இக்கதை எனலாம்.

1972இல் காஃப்காவைப் பற்றி கசடதபற இதழில் எழுதும் க.நா. சுப்ரமண்யம் காஃப்காவைத் தனக்குப் புதுமைப்பித்தன் அறிமுகப்படுத்தியதாக எழுதுகிறார். குறிப்பாக, 1937 மத்தியில்  ‘Metamorphosis’ கதையைப் பற்றி அவரும் புதுமைப்பித்தனும் உரையாடியதை நினைவுகூர்கிறார். இந்த நினைவுகூர்தலில், கதையின் தலைப்பை க.நா.சு.  ‘கூடுவிட்டுக் கூடு பாய்தல்’ அல்லது  ‘மாற்றம்’ எனத் தமிழ்ப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. மேலும், கநாசு எழுதுவதிலிருந்து புதுமைப்பித்தனுக்கும் கநாசுவுக்கும் இக்கதை குறித்து நடந்த உரையாடல் அவர்களுக்கு அவரவரின் தந்தைகளோடு இருந்த மனபேதத்தை மையமாகக் கொண்டிருப்பதுபோலத் தெரிகிறது.  “கரப்பான் பூச்சியாக மாறிவிட்ட தங்கள் பிள்ளையோடு, அருவருப்புடன், அலட்சியத்துடன்” வசிக்க நேரும் பெற்றோர் பற்றிய கதை என்று கநாசு எளிமைப்படுத்திச் சொல்வது இங்கே கவனிக்கத்தக்கது. கூட்டுக் குடும்ப அமைப்பு தகர்ந்துபோகத் தொடங்கிய காலகட்டத்தில் அவர்கள் உரையாடல் நடக்கிறது.

மாறாக, சிவகுமாரது மொழிபெயர்த்தல் தலைப்பே  ‘உருமாற்றம்.’  கநாசுவின்   ‘மாற்றம்,’ ’கூடுவிட்டுக் கூடுபாய்தல்’ ஆகியவற்றுக்கும் இதற்குமான வேறுபாடு முக்கியமானது. உருமாற்றம் எனும்போது மாற்றம் என்கிற சொல் சுட்டும் பொதுத்தன்மை இதில் இல்லை. கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்பது சுட்டும் ஒன்றிலிருந்து நகர்ந்து இன்னொன்றுக்குப் போவதும் இதில் இல்லை. உருமாற்றம் என்ற பயன்பாட்டில் மாற்றம் தன் உருசார்ந்தும், உள்முகமாகவும் இடையறாது நடந்துகொண்டிருக்கும் ஒன்றாக இருக்கிறது. சிவகுமார் தன் முன்னுரையில் கூறும் “எளிய மனிதனை அந்நியப்படுத்தல்,”  “சமூக அதிகாரத்தின் அபத்தமான அமைப்பும் சட்டங்களும் தம் கண்ணுக்குத் தெரியாத கைகளால் நவீன மனிதனை ஒடுக்கி அவனைப் பதற்றத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்குதல்” போன்ற அனைத்துமே கட்டமைக்கும் தன்னிலையாக உருமாற்றத்துக்கு ஆட்படும்  தன்னிலை உள்ளது. வெறும் தந்தை – மகன், அல்லது பெற்றோர் – மகன் உறவுகளில் விளையும் நெருக்கடி மட்டுமல்ல இது. கநாசுவின் பார்வையிலிருந்து சிவகுமாரின் பார்வை கொண்டிருக்கும் நகர்வு தலைப்பிலேயே வெளிப்படுகிறது. ஆக, ‘உருமாற்றம்’ என்ற தலைப்பே சிவகுமாரின் மொழிபெயர்ச் சார்பை, நவீன உலகத்தில் மனிதத் தன்னிலையின் அவலத்தை, வேறொன்றாக அது மாறும் அவலத்தை உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது எனலாம். இந்த அவலத்தைத் தன் முன்னுரையிலும் சிவகுமார் குறிப்பிடுவது இதைப் புரிந்துகொள்ளும் வகையில் கூடுதல் தகவலாக உதவுகிறது.

”நவீன மனிதனின் இருத்தலியல் கவலையை, அந்நியமாதலை” தமிழ் வாசக, அறிவுச் சூழலுக்கேற்ற வகையில்  “உணர்த்த,” தமிழ் வாசகர்களுக்கு ஏற்ப சில உத்திகளை கையாள்கிறார் சிவகுமார். முதலாவது, சொற்தேர்வுகள். சில உதாரணங்களை இங்கே தருகிறேன். “Heavenly Father! he thought,” என்ற வாக்கியம். சிவகுமார் இதை “கடவுளே!” என்று   மொழிபெயர்க்கிறார்.  போலவே, “The devil take it all!” என்று தன் வேலையைப் பற்றிய கதாபாத்திரத்தின் வெறுப்புப் புலம்பல், ”வேலையின் மோசமான அம்சங்கள்” என்று வருகிறது. நேரடியாக, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பொருத்தமின்றி மொழிபெயர்க்காமல், தமிழக வாசகச் சுழலுக்கு மேலதிகமாகப் பொருந்தக்கூடிய தன்மையை இந்த மொழிபெயர்த்தல்கள் கொண்டுவருகின்றன.  அதேபோல,  “desperate resolves” என்பது  “முரட்டுத் தீர்மானம்” என,   “Scoundrels“ அயோக்கியக் கூட்டம்” என, living room என்பது கூடம் என  “lodgers” என்பது  “குடித்தனக்காரர்கள்”என மொழிபெயர்க்கப்படுகின்றன.  கதைக்குப் பொருத்தமான வகையில், அதே நேரத்தில் தமிழ் வாசகருக்கு அணுக்கமான மொழிபெயர்த்தல்கள் இவை.

தமிழ்ப் பண்பாட்டுக்கு அந்நியமான சில சொற்கள் அவர் மொழிபெயர்த்தலில் இடம்பெறும் விதமும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, Fur என்பது முயல் போன்ற விலங்குகளின் மென்மயிரைக் குறிக்கும் சொல். Fur coat என்பதை அச்சாகத் தமிழ்ப்படுத்தினால்  ‘விலங்கின் மென்மயிராலான அங்கி’ என்று செய்யவேண்டியிருக்கும். கதையாடலின் போக்கைத் தொந்தரவுள்ளாக்கக்கூடிய பயன்பாடு இது. சிவகுமார் அந்தப் பயன்பாட்டைக் கைகொள்ளாமல், ’ஃபர் கோட்’ என்று சொல்லி விட்டுவிடுகிறார். Sofaவும் அதேபோல “நீள்சாய்விருக்கை” என்றெல்லாம்  நீட்டிக்கப்படாமல் சோஃபா என்று எளிமையாகச் சொல்லப்பட்டுவிடுகிறது.

மாறாக Grete என்ற பெண் பெயரை சிவகுமார் அறிமுகப்படுத்தும் விதம் நோக்கத்தக்கது. கதை தொடங்கிய சில பத்திகளிலேயே, கதையின் மையப்பாத்திரத்தின் (க்ரகர்) தங்கை கதைக்குள் வரும்போதே “அவனுடைய தங்கை க்ரீட்” என்று சிவகுமார் விவரிக்கிறார். சிவகுமார் பயன்படுத்தியிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பில்  இந்த அறிமுகக் கட்டத்தில் “அவனுடைய தங்கை” என்று மட்டும்தான் இருக்கிறது.  க்ரீட் என்ற பெயர் ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்தக் கதையிடத்துக்குப் பிறகே முதலில்  வருகிறது:  “Oh dear,” cried his mother, in tears, “perhaps he’s terribly ill and we’re tormenting him. Grete! Grete!” she called out then…, என்று க்ரகரின் அம்மா அவளை அழைக்கும், பின்னால் வருகிற இந்த இடத்தில். க்ரீட் என்பது தங்கையின் பெயர் என்று தமிழ் வாசகருக்கு முதலிலேயே தெரியாவிட்டால்,  “ஐயோ கடவுளே! அவனுக்கு உடல்நிலை ரொம்பவும் மோசமாக உள்ளது போலிருக்கிறது; நாம் அவனைச் சித்ரவதைப்படுத்துகிறோம். க்ரீட்! க்ரீட்!” என்று  வாசிக்கும்போது, க்ரீட் என்ற பரிச்சயமில்லாத சொல், சற்றே நெருடும். மொழிபெயர்ப்பாளர் கூடுதல் விவரணைகளை வாசகருக்குத் தந்து உதவும் விதம் இது. மொழிபெயர்த்தல் உத்திகள் என்று இவற்றையே நான் சொல்கிறேன்.

மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ச் சார்பைக் கட்டமைக்கும், வெளிப்படுத்தும் பயன்பாடுகளில், அவரது அரசியல்தத்துவச் சார்பையும் நிலைப்பாட்டையும் நாம் பார்க்க முடிகிறது. “chief” என்பதை “முதலாளி” என்றும் “employees” என்பதைத் தொழிலாளிகள் என்றும் சிவகுமார் மொழிபெயர்ப்பது இங்கே எண்ணத்தக்கது. இன்றைக்கு, இதே கதையை அவர் மொழிபெயர்த்தால் ஒருவேளை வேறு சொற்களைப் பயன்படுத்துவாரோ என்னவோ. ஆனால், முதலாளி, தொழிலாளிகள் என்ற பிரயோகங்களில், சிவகுமாரின் மார்க்சிய சார்பு அரசியல் நிலைப்பாடு  வெளிப்படுகிறது.  தன் முன்னுரையில்,  “… முதலாளித்துவம் விளைக்கும் அந்நியமாதல் தொடர்பான மார்க்சிய விளக்கத்துக்கும் அடிப்படை மனிதத் துயர் சார்ந்த விளக்கத்துக்கும் இக்கதைகள் அனைத்திலும் இடம் உண்டு” என்று அவர் எழுதும்போது, அது அவரது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கும் விதமாகவும் உள்ளது. வேறொரு இடத்தில் “மார்க்சியத் தத்துவத்துக்கு காஃப்காவின் எழுத்து வலு சேர்க்கிறது” என்றும் தன் பார்வையை எழுதுகிறார். மொழிபெயர்த்தல் ஆக்கத்தில் வெளிப்படும் மொழிபெயர்ச் சார்பை விளங்கிக்கொள்ள இவையும் உதவுகின்றன.

மொழிபெயர்த்தல் என்பது  ஒரு மொழியின் குறியீட்டுத் தளத்திலிருந்து இன்னொரு மொழியின் குறியீட்டுத் தளத்துக்கு நிகழ்கிற மாற்றம் என்பது குறுகிய புரிதல். இரு பண்பாடுகளுக்கிடையிலான பரிமாற்றம் என்பதும்  போதாமை கொண்ட புரிதலே. ஏனெனில் மொழிபெயர்த்தல் என்பது ஒரு மொழியில் புதிய நிகழ்த்துதலும்கூட. மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ச் சார்பு தன்னை வெவ்வேறு உத்திகளின் வாயிலாக, நிலைப்பாடுகளின் வாயிலாக நிகழ்த்திக்காட்டும் பரப்பு இது. மூல நூலின் ஆசிரியர் எனும் இருப்பு, அதிகார உரிமை இந்தப் பரப்பில் மீறப்படுகிறது. அதனால்தான், மூல ஆக்கத்தின் ஆசிரியர் தெரிவிக்காதவற்றையும் அவரது நோக்கத்தைத் தாண்டியவற்றையும் மொழிபெயர்த்தலில் நாம் எதிர்கொள்கிறோம்.

வாசகர்களுக்கு அணுக்கமாக  ‘உணர்த்தல்’ நடந்துவிடுகிறபோது, மேலே விவரிக்கப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்பாளரின்  ‘மொழிபெயர்ச் சார்பை’ வாசகர்கள் உறுத்தலாக நினைப்பதில்லை. ‘உணர்த்தல்’ நடக்காதபோது, அல்லது அது தோல்வியுறுகிறபோது விமர்சனங்களை ஈர்க்கும் பரப்பாக மொழிபெயர்த்தல் பிரதி தேங்கிவிடுகிறது. ஆனால், மொழிபெயர்த்தல் தொடர்ச் செயற்பாடு எனும்போது, அதன் நிகழ்த்துக்களம் மொழிபெயர்ப்பாளருக்கு எப்போதுமே திறந்திருக்கிறது. அவருக்கு இதைவிட வேறென்ன வரம் இருக்க முடியும்?

 

உதவிய நூல்கள் / கட்டுரைகள் / இணையதளங்கள்

கம்பர். கம்பராமாயணம் (இராமாவதாரம்). http://www.tamilvu.org/library/l3700/html/l3700ind.htm

காஃப்கா. உருமாற்றம். தமிழில் ஆர். சிவகுமார். சென்னை: தமிழினி, 2014.

Charlston, David. “Textual Embodiments of Bourdieusian Hexis:  J.B. Baillie’s Translation of Hegel’s Phenomenology.” The Translator 19.1: 51-80, 2014.

Kafka, Franz. “Metamorphosis.” Trans. Willa and Edwin Muir. Online resource http://fullreads.com/literature/the-metamorphosis/

(இக்கட்டுரை மறைந்த கவிஞர் தக்கை பாபு ஆர். சிவக்குமாரின் தமிழ்ப் பணியைக் கௌரவிக்க சேலத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சுருக்கி வாசிக்கப்பட்டது. பின்னர் தக்கை வெளியீடாக வந்த நூலிலும் இடம்பெற்றது.)