இக்கவிதை 1963இல் பிரசுரிக்கப்பட்டது. எதிர்கவிதையின் கொள்கை விளக்கமென்று சொல்லத்தக்க வகையில் அமைந்திருக்கும் கவிதை இது. தந்த கோபுரத்திலிருந்தும் இறை நிலையிலிருந்தும் கவிஞர்கள் இறங்கிவர வேண்டியதை எடுத்துரைக்கும் கவிதை இது.

 

கொள்கை விளக்க அறிக்கை

சீமான்களே, சீமாட்டிகளே
இது எங்கள் கடைசி வார்த்தை
–எங்கள் முதலும் முடிவுமான வார்த்தை—
ஒலிம்பஸிலிருந்து கவிஞர்கள் இறங்கி வந்துவிட்டார்கள்

மூத்தவர்களுக்கு
கவிதை ஒரு சொகுசுப் பொருள்
எங்களுக்கோ
அது அத்தியாவசியம்
கவிதையில்லாமல் எங்களால் வாழ முடியாது
மூத்தவர்களைப் போலன்றி
— இதை மரியாதையோடுதான்  சொல்கிறேன்—
நாங்கள் கருதுவது இதையே:
கவிஞன் ரசவாதியல்ல
கவிஞன் எல்லா மனிதர்களையும் போல ஒரு மனிதன்
தன் சுவரை எழுப்ப செங்கல் அடுக்குபவன்
ஜன்னல்களையும் கதவுகளையும் செய்பவன்
நாங்கள் அன்றாட வார்த்தைகளில் பேசுகிறோம்
மறைபொருள் குறிகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை
இன்னொன்று,
கவிஞன் இருக்கிறானே அவன்
மரம் கோணலாக வளராமல் பார்த்துக்கொள்கிறான்

இதுதான் எங்கள் செய்தி.
கடவுளை ஒத்த கவிஞனை நாங்கள் மறுதலிக்கிறோம்
கரப்பான்பூச்சி கவிஞன்
புத்தகப்புழு கவிஞன்
இந்த சீமான் கவிஞர்களை எல்லாம்—
மிகுந்த மரியாதையோடு இதைக் கூறுகிறேன் –
கூண்டில் குற்றவாளியாக நிறுத்தி
விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்
ஆகாயக் கோட்டைகள் கட்டியதற்காக
நேரத்தையும் இடத்தையும் வீணடித்ததற்காக
நிலாவுக்கு உணர்ச்சிப்பாக்களை எழுதியதற்காக
சமீபத்திய பாரிஸ் ஃபாஷனைப் பின்பற்றி
தற்செயலாக வார்த்தைகளைக் கோர்த்து வைத்ததற்காக
இது நமக்கானதல்ல
எண்ணம் என்பது வாயில் பிறப்பதல்ல
இதயத்திலிருந்து பிறப்பது
குளிர்கண்ணாடிக் கவிதைகளை
அங்கிக்குள் மறைந்த உடைவாள் கவிதைகளை
அலங்காரத் தொப்பிக் கவிதைகளை
நாங்கள் மறுக்கிறோம்
அதற்குப் பதிலாக
கண்ணாடி அணியாத கண்ணின் கவிதைகளை
மயிரடர்ந்த மார்பின் கவிதைகளை
வெறுந்தலையின் கவிதைகளை
முன்மொழிகிறோம்
வனதேவதைகளில் கடற்தெய்வங்களில்
எங்களுக்கு நம்பிக்கையில்லை
கவிதை இப்படி இருக்கவேண்டும்
கோதுமை வயலில் ஒரு பெண்ணாக
இல்லாவிட்டால் அது ஒன்றுமேயில்லை

சரி, இப்போது அரசியல் தளத்திலோ
எங்கள் நேரடி முன்னோர்களான
அருமையான நேரடி முன்னோர்களான அவர்கள்
ஒரு கண்ணாடி ஸ்படிகம் வழியாக
திசை மாறி, சிதறடிக்கப்பட்டு
வெளியே வந்தார்கள்
ஒருசிலர் கம்யூனிஸ்ட்களாக
உண்மையிலேயே கம்யூனிஸ்ட்களா என்று தெரியாது
கம்யூனிஸ்ட்கள் என்றே வைத்துக்கொள்வோம்
எனக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்:
அவர்கள் மக்கள் கவிஞர்கள் அல்ல
அவர்கள் தலைக்குமேல் வைத்துக் கொண்டாடப்பட்ட
பூர்ஷ்வாக் கவிஞர்களின்றி வேறில்லை

இதை நாம் எதிர்கொள்வோம்:
எப்போதுமே
ஒருவரோ இருவரோதான் மக்கள் மனதில்
இடம்பெற்றார்கள்
அவ்வாறு இடம்பெற்றபோது
எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம்
ஆற்றுப்படாத கவிதைக்கு எதிராக
நிகழ்காலத்தின் கவிதைக்கு எதிராக
பாட்டாளிகளின் கவிதைக்கு எதிராக
சொல்லாலும் செயலாலும்
தங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டார்கள்
அவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்றே வைத்துக்கொள்வோம்
ஆனால் அவர்கள் கவிதையோ விபரீதம்
இரண்டு கை மாறிய சர்ரியலிஸம்
காயலான்கடை சீரழிவு
கடல் அடித்துக்கொண்டு வந்த பழைய மரப்பலகைகள்
உரிச்சொல் கவிதை
முனகல் முக்கல் கவிதை
தான்தோன்றிக் கவிதை
நூல்களிலிருந்து பிரதியெடுக்கப்பட்ட கவிதை
வார்த்தைப் புரட்சியை அடிப்படையாகக் கொண்ட கவிதை
—ஆனால் உண்மையில் கவிதை
சிந்தனைப் புரட்சியிலிருந்து
ஊற்றெடுக்கவேண்டும்—
முடிவற்ற வட்டத்தின் கவிதை
தேர்ந்தெடுக்கப்பட்ட அரை டஜன் பேருக்கான
“முழுமுற்றான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்”
இன்று நாம் தலையைச் சொறிந்துகொண்டு யோசிக்கிறோம்
ஏன் இதையெல்லாம் எழுதினார்கள்
குட்டி பூர்ஷ்வாக்களைப் பயமுறுத்தவா?
என்ன ஒரு நேர விரயம்!
குட்டி பூர்ஷ்வா அவன் வயிற்றுப்பாட்டுக்கு
பிரச்னை வந்தால் தவிர எதிர்வினையாற்ற மாட்டானே
அது சரி, கவிதைக்கு யார் பயப்படப் போகிறார்கள்!

இதுதான் நிலைமை:
அந்திக் கவிதைகளை
நள்ளிரவுக் கவிதைகளை
அவர்கள் ஆதரித்தார்கள்
நாங்களோ
விடியலின் கவிதையை ஆதரிக்கிறோம்
இதுதான் எங்கள் செய்தி:
கவிதையின் ஒளிச்சிதறல் நம் ஒவ்வொருவருக்குமானது
கவிதை நம் எல்லாருக்கும் போதுமானது
அவ்வளவுதான் தோழர்களே!
—இதையும் மரியாதையோடுதான் சொல்கிறேன்—
நாங்கள்
குட்டித் தெய்வங்களின் கவிதையை
புனிதப் பசுவின் கவிதையை
ஆவேசக் காளையின் கவிதையை
கண்டனம் செய்கிறோம்
மேகங்களின் கவிதைக்கு எதிராக
வைரம் பாய்ந்த நிலத்தின் கவிதையை வைக்கிறோம்
—குளிர்ந்த கைகள், வெதுவெதுப்பான நெஞ்சம்
சந்தேகமேயில்லாமல்
நாங்கள் வைரம் பாய்ந்த நிலத்துக்காரர்கள்—
கஃபே கவிதைக்கு எதிராக
திறந்தவெளிக் கவிதையை வைக்கிறோம்
வரவேற்பறைக் கவிதைக்கு எதிராக
பொதுச் சதுக்கக் கவிதையை
சமூகத்தின் எதிர்ப்புக் கவிதையை

ஒலிம்பஸிலிருந்து கவிஞர்கள் இறங்கிவந்துவிட்டார்கள்