பகுதி ஒன்று:  ‘கௌரவக் கொலை’ என்னும் மொழிப் பயன்பாடு

தமிழகத்தில் காதலுறவு மற்றும் மணவுறவு சார்ந்து  பட்டியலினத்தவருக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறை மற்றும் படுகொலைகள் பற்றிய சொல்லாடல்களை இரு பகுதிகளில் விவாதிக்கிறது இக்கட்டுரை.

என்னுடைய சமூக-பண்பாட்டு இடத்தை முதலில் சொல்லவேண்டும். என்னுடைய பார்ப்பனப் பிறப்படையாளம் சாதிப் படிநிலையில் ஆக்கிரமிக்கும் ”பயன்மிக்க இடம்” இரு வகையான உணர்வுகளில் என்னை ஆழ்த்துகிறது. ஒன்று, சாதிப் படிநிலையில் ஆகவுயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிற சாதி என்பதால் சாதியின் பெயரால் நடக்கும் ஒவ்வொரு வன்முறையிலும் எனக்கும் என் சாதிக்கும் பங்குண்டு என்கிற குற்ற உணர்வு; இன்னொன்று, பால் படிநிலையில் ஒடுக்கப்படுகிற இடத்தில் இருப்பதாலும் அதன் காரணமாக சில ஒடுக்குமுறைகளையும் அனுபவித்திருப்பதாலும் வன்முறைக்கு ஆளாகுபவர்களோடு சிறிதாவது உண்டாகும் அடையாள உணர்வு. இந்த இரண்டாவது உணர்வு பால் படிநிலையில் ”தாழ்த்தி வைக்கப்பட்டிருக்கும்” பெண்ணுடையது என்றாலும் சமூகத்தில் ஆக ஒடுக்கப்படுகிற இடத்திலிருக்கும் பட்டியலினப் பெண்ணை நான் பிரதிநிதித்துவப்படுத்த இயலாது என அறிவேன். என்றபோதும், சாதி ஒடுக்குமுறை குறித்த சொல்லாடல் களத்தில் உரையாடல் செடியை வளர்த்தெடுக்கும் போக்கில் ஒரு கைப்பிடி நீரை இக்கட்டுரை வார்க்குமென நினைக்கிறேன்.

இன்றைக்கு “கௌரவக்கொலை” என்னும் மொழிப் பயன்பாடு மாறிவருவதைப் பார்க்கிறோம். கோகுல்ராஜ் படுகொலையைக் கண்டித்து அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம்  13 ஜூலை 2015 அன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் திரு. தொல். திருமாவளவன் ”சாதி ஆணவக்கொலை” என்ற பயன்பாட்டைப்  பயன்படுத்தியிருந்தார். அவர் மட்டுமல்லாமல், தொடர்ந்து இணைய தளங்களிலும் ஊடகத்திலும் “சாதி ஆணவக்கொலை” என்பது மட்டுமல்லாமல் “வறட்டு கௌரவக்கொலை” “சாதியக்கொலை” ”சாதித்திமிர்க் கொலை” முதலிய பயன்பாடுகளையும் ஓரிரு ஆண்டுகளாக எதிர்கொள்கிறோம். சாதியாதிக்க உணர்வை வெளிப்படுத்த மட்டுமல்லாமல், அதை மீண்டும் மீண்டும் நிறுவவும் செய்யப்படும் கொலைகளுக்கு “கௌரவ” என்கிற அடைமொழி தகாதென்பது இம்மாற்றுப் பயன்பாடுகளின் உள்ளிடை,

உலக அளவில் சிவில் சமூகம் மற்றும் ஊடகக் கவனங்களைக் கோரவும் பெறவும் “கௌரவக் கொலை” என்ற மொழிக்குறி உதவுகிறது என திரு எவிடென்ஸ் கதிர் போன்ற சில கடப்பாடுடைய களப்பணியாளர்கள் கருதுகிறார்கள்.  ஜூலை 8, 2015 அன்று அவர் இட்டிருந்த முகநூல் நிலைத்தகவலில் இந்த வன்முறையின்பால் சர்வதேசிய சமூகத்தைக் கவர  ஒரு உத்தி இதுவென்று எழுதியிருந்தார். அவருடைய நிலைப்பாட்டை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்றபோதும் ”கௌரவ” என்கிற அடைமொழியில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைக் கூற வேண்டியிருக்கிறது. சர்வதேசிய சிவில் சமூகத்தைப் பற்றிப் பேசும்போது உலக அளவில் பல்வேறு அறிஞர்கள், வரலாற்றுச் சிந்தனையாளரான உமா சக்ரவர்த்தியிலிருந்து இந்தர்பால் கிரெவல், பிரேம் சௌத்ரி, லிலா அபு-லகாட் வரை பலரும் இப்பயன்பாட்டில் உள்ளோடும் சிக்கல்களை  எடுத்துரைத்திருப்பதை நாம் கவனிக்கவேண்டும்.

முதலாவதாக, ”கௌரவக்கொலை” என்கிற பயன்பாடு, வன்முறையை ”மற்றமைகளோடு” இணைத்துக் கட்டமைக்கிறது. ஒரு தளத்தில், மேற்காசிய மற்றும் தெற்காசியச் சமூகங்களையும் மக்கள் தொகுதியினரையும் ”பகுத்தறிவற்ற,” “மூடப் பழக்கங்கள் கொண்ட,” ”நாகரீகத்தில் பின் தங்கிய அல்லது நாகரீகமற்ற” மற்றவர்களாக அடையாளப்படுத்துகிற வகையில் இந்தப் பயன்பாடு செயல்படுகிறது (அபு-லகாட் 2013; சக்ரவர்த்தி 2006).  குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகளில் புழங்கும் சொல்லாடல்களில் இஸ்லாமியர்களைப் பழங்காலத்திய, பிற்போக்குப் பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களாகக் கட்டமைக்க இந்தப் பயன்பாடு உபயோகிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் மீதான வெறுப்புச் சொல்லாடலிலும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான சொல்லாடலிலும் இப்பயன்பாட்டைக் காண்கிறோம் (அபு-லகாட் 2013; கிரெவல் 2014). காலனியம், இனம் போன்றவற்றில் சார்புற்றுச் செயல்படும் புவியரசியலோடு இயைந்து,  “ஆணாதிக்கக்” கருத்தியல், அதுசார்ந்த வன்முறை போன்றவை மேற்கத்திய பண்பாடுகளில் இல்லாதவை போலவும், இவை மற்ற பண்பாடுகளுக்கே பொருந்துபவை என்றும் இவ்வகையில் காட்டப்படுகிறது. தாராளவாதிகளாகவும் சமத்துவத்தைக் காக்கும் நவீனர்களாகவும்  மேற்கத்திய பண்பாடுகள் தம்மைக் காட்டிக்கொள்வதற்காக, ”ஆணாதிக்கம்” மற்ற பண்பாடுகளுக்கானது என வெளியே தள்ளும் போக்கில் இந்தச் சொல்லாடல்களுக்குப் பங்குண்டென்று  விமர்சிக்கிறார் இந்தர்பால் கிரெவல் (2014). ஊடகக் காட்சிப்படுத்தலாக வலம்வரும் ”கௌரவக்கொலை” என்னும் கருத்தாக்கம் எவ்வாறு  உலகளாவிய கார்ப்பரேட் வலைப்பின்னல்களோடும் நிதி ஆதாயங்களோடும் நல்கை அரசியல்களோடும் நெருங்கிய தொடர்புகொண்டிருக்கிறது என்பதையும் விவரித்து விமர்சித்திருக்கிறார் அவர் (2014).

இன்னொரு தளத்தில், புவி-அரசியல், காலனியம், இனம் போன்றவைகளைத் தாண்டி உள்ளூர் அளவிலும்கூடத் ”தான்” அற்ற “மற்றமைக்கே” உரித்தான குணாம்சத்தைச் சுட்டுவதாக அமைகிறது இம்மொழிப் பயன்பாடு. நம் அச்சு ஊடகங்களில்  வாசகர்கள் பின்னூட்டங்களை அல்லது இணையதளப் பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியும், ஏதோ சாதிசார்ந்த “கௌரவக்கொலை” வன்முறை, நாகரீகத்தில் “பின் தங்கிய கிராமங்களில்” மட்டுமே இருப்பது போலும் நகரத்தில் சாதிப்பிரிவினையே இல்லாதது போலும் கிராமம்x நகரம் இருமையைப் பேணி எழுதுவதைப் பார்க்கலாம். பார்ப்பனர்கள், ”பார்ப்பனரல்லாதவர்கள்தானே இதைச் செய்கிறார்கள், நாங்களா செய்கிறோம்” என்று ”மற்ற” ஆதிக்கச் சாதிகளின் பண்பாக இவற்றைச் சொல்லிவிட்டு, சிறிதும் குற்றவுணர்வோ பொறுப்போ இல்லாமல் வசதியாக ஒதுங்கிக்கொள்வதையும் பார்க்கிறோம். ஆக, தான், மற்றமை, இந்த இரண்டுக்கும் இடையில் நாகரீகத்தின் அடிப்படையில் படிநிலையொன்றை உருவாக்கிக்கொள்ள இப்பயன்பாடு உதவுவதாக உள்ளது.

ஒரு வன்முறைச் செயலை, குற்றத்தை ஏன் குறிப்பிட்ட பண்பாட்டில் வைத்து, பண்பாட்டுக் கூறாகப் பார்க்கவேண்டும் என்று மானுடவியல் அறிஞரான அபு-லகாட் (2013) எழுப்பும் கேள்வியும் யோசிக்கத்தக்கது. ”கௌரவக்கொலை” என்கிற பெயர், சூழலில் தேவையான சட்ட திருத்தங்கள், களத்தில் காவல்துறையினர் பெறவேண்டிய பயிற்சி, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம், தங்க தற்காலிக இடம் போன்றவை பெறும் வழியை எளிதாக்குகிறது; என்றாலும், வன்முறையை குறிப்பிட்ட பண்பாட்டுக்கே “உரித்தான” ஒன்றாக   அடையாளப்படுத்தாமல் இந்த நன்மைகளை எட்ட வழியுண்டா என்று கேட்கிறார் அவர்.  பண்பாட்டுக்கு உரிய குணாம்சமாக இத்தகைய வன்முறையைப் பேசும்போது, அது பகைமையையும் வன்முறையையும் இன்னும் அதிகரிக்கும்; பெண்களுக்கும் இதனால் பாதுகாப்பில்லை என்பது அவர் கருத்து.  .

பட்டியலின மக்களின் சுயமரியாதையை நிலைநிறுத்தும் அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகர அரசியலோடு மகாத்மா காந்தியின் ”ஒருங்கிணைக்கும்” அணுகுமுறையைச் சேர்க்கவேண்டிய தேவையை  எடுத்துரைக்கும் சிந்தனையாளர் டி. ஆர். நாகராஜ் காந்தியின் கருத்தாக முன்வைப்பது இங்கே யோசிக்கத்தக்கது: ”இத்தகைய [காந்தியின்] புரிதலில் சுயமும் மற்றமையும் பிரிக்கமுடியாதவை. தலித் மற்றும் சாதி இந்துச் சமூகங்கள் ஒன்றோடொன்று கூட்டுறுப்பாகப் (organic) பின்னிப்பிணைந்திருப்பதால் தீண்டாமை எனும் கருத்தாக்கம் சாதி இந்துச் சமூகத்தின் மூளையிலிருந்தும் இதயத்திலிருந்தும் மறையவேண்டும். மற்றமை மாறவேண்டும். மற்றமையோடு தொடர்ந்த, ஆழமான உரையாடல்கள் இன்றி தீண்டாமையை ஒழிக்கும் எம்முயற்சியும் பயன்தராது. மற்றமையைப் பற்றிக்கொண்டு, அதனோடு ஒருமித்த நிலையில் போராடுவதன் மூலமாக மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இது காந்திய அணுகுமுறை” (2010).  நாகராஜ் கூறுவதுபோலச் சாதி வன்முறைக்குத் தீர்வு காணும் வகையில் ஆதிக்கச் சாதி மற்றமையோடு தொடர்ந்த உரையாடல்களின் வழி போராடுதல் அவசியமானது என்று நினைக்கிறேன்.  வன்முறை குணாம்சத்தைக் குறிப்பிட்ட சமூகத்தினரின் பண்பாடாகச் சாரப்படுத்திப் பேசும்போது பயன் தரும் வகையிலான உரையாடல்களின் வழிகள் அடைபடக்கூடுமோ என்றும் ஐயம் ஏற்படுகிறது.

இரண்டாவதாக, “கௌரவக்கொலை” என்பதிலிருக்கும் ”கௌரவம்” வன்முறையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கிறதே அல்லாமல் வன்முறைக்கு இலக்காகுபவர்களை அல்ல. நான் அறிகிறவரை கொங்குப் பகுதியில் இந்தப் பயன்பாட்டை ஆதிக்கச்சாதியினரும் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. என்றாலும் கௌரவம் என்கிற உணர்வு அவர்களோடான உரையாடல்களில் கோடிட்டுக் காட்டப்படுகிறது. இவ்விடத்தில்தான் கௌரவம் என்பது யாருடைய கௌரவம், அதன் வரையறை என்னவென்பது  போன்ற விசாரணைகளும் முக்கியமாகின்றன. சிலநாட்களுக்குமுன் கொங்குப் பகுதிக்குச் சென்றிருந்தபோது  சாதி கடந்த திருமணத்தையும் காதலையும் பற்றிய உரையாடல்களில் கௌரவம் பேச்சுப் பொருளாக வந்தது.  “கவுண்டர்களுக்கு ஜீன்களிலேயே கௌரவமிருக்குங்க, அதை எப்படிங்க விடமுடியும்? எங்களை எசமான்ங்க, அரண்மனை, ராசாங்க என்று கூப்பிட்டுக்கிட்டு இருந்தவங்க…அப்படியிருந்தவங்களோட மணவுறவுனா அது எப்படிங்க” என்று ”ஆதங்கத்தோடு” வினவினார் மித்ரன் என்கிற அரசு ஊழியர்.  கௌரவம் பற்றிப் பேச்சு வரும்போது அது  “வாழ்க்கைத்தரம்” என்று சொல்லிய திருச்செங்கோடு பகுதியைச் சார்ந்த பத்திரிகை நிருபர் ஒருவர், கூடவே “வழிவழியா வருகிற முறை,” “முன்னோர்கள் சொன்ன முறை” என்று சாதிப் பிரிவினை “மரபையும்” சுட்டத் தவறவில்லை. அப்போது கூடவே இருந்த  அண்மைப்பகுதி ஒன்றின் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர், “இல்லாட்டி எதுக்குங்க அன்னிக்கே சாதி சாதியா பிரிச்சி வச்சாங்க?” என்று உடனே உரையாடலில் பங்குகொண்டு பதில் கேள்வி கேட்டார். (இவர்கள் அனைவரும் கவுண்டர் சாதியினர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பெயர்கள் தரப்படவில்லை).  “வாழ்க்கைத் தரம் பற்றிக் கூறுகிறீர்களே, இப்போது இறந்த கோகுல்ராஜ் நன்கு படித்தவர்தானே, பி.இ படித்திருக்கிறாரே” என்று நான் கூறியபோது உடனடியாக “இல்ல, நீங்க நினைக்கற அளவுக்கெல்லாம் நல்லவரில்லீங்க, அவர் அஞ்சாறு அரியர்ஸ் வைத்திருந்தார்” என்று பதில் வந்தது.

பட்டியல் பிரிவினரோடு சாதி கடந்த திருமணம் பற்றி ஈரோடு அருகே வெள்ளக் கோயிலில் கவுண்டர் சாதியைச் சார்ந்த சிலரோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வுரையாடலிலும் ஜீன்கள் முக்கியத்துவம் பெற்றன. ”ஒவ்வொரு சாதிக்கும் ஒரு ஜீன் உண்டு, ஏன் செட்டியார்கள் குறிப்பிட்ட ரத்தப் பிரிவினரோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை என்றால் இதனால்தான்” என்று கூறினார் விவசாயத் தொழிலில் ஈடுபடுகிற ராம்குமார். ”செட்டியார் வியாபாரம் செய்ய முடியும், கவுண்டர் செய்ய முடியுமா? முடியாது” என்று அடித்துப் பேசினார் அர்ஜுனன் என்கிற இன்னொரு விவசாயி. ஆனால், ”பட்டியலின மக்களோடு திருமணத்துக்கான மனத்தடை ஏன் இருக்கிறது? ஏன் இத்தனை வன்முறை” என்ற கேள்விக்கு அர்ஜுனன் “நீங்கள் கிராமத்தில் அவங்க  வீடுகளைப் பாத்திருக்கீங்களா? மிக எளிமையா இருக்குங்க. அந்த வாழ்க்கை முறை நம்ம பெண்களுக்கு சரிவராதுங்க. ஸ்கூல் போறதுக்கே கார்ல கொண்டுவிடறோம், அழைச்சிக்கிட்டு வரோம். பண வசதியில்லாம சரிவராதுங்க அவங்களுக்கு. நாளைக்கு பால்பவுடர் வாங்க காசிருக்காது. இப்ப கூட சுத்தறது அப்ப உதவுமா” என்று பதில் தந்தார். ”கவுண்டர் ஆண்கள்கூட இந்தச் சமூகத்தில் பெண்கள் அருகிவிட்ட காரணத்தால வெளியூர்களுக்கோ மலைக்கோ போய் சாதி கேட்காமலோ, தலித் பெண்களையோகூட மணம்செய்து கூட்டிக்கொண்டுவரமுடிகிறது. ஆனால் ஒரு கவுண்டர் பெண் ஒரு தலித்தைத் திருமணம் செய்தால் கௌரவக் குறைச்சலாகத்தான் பாக்கறாங்க” என்று நிலைமையைப் பகிர்ந்துகொண்டார் திருச்செங்கோட்டில் ஒரு படித்த கவுண்டர் சாதிப் பெண்.

இந்த உரையாடல்களை இங்கே நான் குறிப்பிடுவது ஒன்றைச் சுட்டிச் செல்லத்தான். வெள்ளக்கோவிலைச் சேர்ந்த நண்பர் மைதிலி தெளிவாகச் சொன்னதைப்போல கௌரவம் என்பது “சாதி கௌரவம்” தான், ஆதிக்கச்சாதிகளுக்கே காலம்காலமாக இருக்கிற தாங்கள் உயர்ந்தவர்கள் என்கிற பெருமிதம்தான், இதில் .ஐயமேயில்லை. ஆனால், கௌரவத்தைப் பற்றிய  சொல்லாடல்களில் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் போன்றவையெல்லாம் சாதி அந்தஸ்தோடு இணை வைத்துப் பேசப்படுவதைக் கவனிக்கவேண்டும். சாதிப் படிநிலையில் ஒருவர் உயர்ந்திருந்தால் வாழ்க்கைத் தரம்  உயர்ந்திருக்கும் என்கிற அனுமானத்தின், விழைவின் எதிர்ப் புள்ளிதான் (counter point), பட்டியல் பிரிவைச் சார்ந்த ஒருவர் நன்கு படித்திருக்க முடியும், அவர் நல்ல வசதியான வாழ்க்கையில் இருக்கமுடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பது அல்லது ஏற்க மறுப்பது. இந்த எதிர்ப்புள்ளிதான் பட்டியல் பிரிவினர் நல்ல படிப்பு வேலை போன்ற வாழ்வாதாராங்களிலும், மாடிவீடு,  ஊர்திகள் போன்ற வசதிகளிலும் சமமாகவோ அல்லது உயர்ந்தோ இருக்கிறபோது அவர்கள்மீது ஆதிக்கச் சாதி வன்மம் ஆழக் கால்கொள்ளும் புள்ளி.

“கௌரவம்” என்கிற சொல்லை பட்டியலினத்து மக்கள் எதிர்கொள்ளும் வன்முறை குறித்த சொல்லாடல்களில் அப்படியே பயன்படுத்துகிறபோது, அந்தச் சொல்லுக்கு ஆதிக்கச் சாதியின் பொருட்கோடல்களிலிருக்கும் இந்த அனுமானம், விழைவு போன்றவையெல்லாம் கூட வெளிப்படுவதில்லை, ’உயர்சாதி, ஆகவே அவர்களின் கௌரவம்’ என்பதுபோல கௌரவம் இயல்பு சார்ந்த வழிச் சொல்போல ஒற்றைப் பரிமாண அர்த்தத்தில்  வெளிப்படுகிறது. முக்கியமாக, கௌரவம் என்கிற அடைமொழியைக் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுக்குத்  தருகிறபோது, அது மற்ற யார் யாருக்கு அதேநேரத்தில் மறுக்கப்படுகிறது என்பதைப் பற்றிய கவனம் அவசியம்.  வன்முறைச்  செயல்களுக்கு அவற்றை முன்னெடுப்பவர்களின் நோக்கிலிருந்து அடைமொழி தருகிறபோது, அவற்றால் பாதிக்கப்பட்டு அவற்றை எதிர்த்து நிற்கும் பெண்களாகட்டும், பட்டியல் பிரிவினராகட்டும் அந்த அடைமொழிக்கு வெளியே நிறுத்தப்படுகிறார்கள். அல்லது, இப்படி அடைமொழிக்கு வெளியே அவர்கள் நிறுத்தி வைக்கப்படுவதன் மூலம் ஆதிக்கச் சாதி ஆணின் கௌரவம் தொடர்ந்து உறுதிப்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால், ஆதிக்கச் சாதியினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் “கௌரவத்தை” சாதி எதேச்சிகாரத்துக்கு எதிரான பிரயோகமாக, ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமையான பயன்பாடாக மீட்டெடுப்பது முக்கியம். இதை எழுதும்போது “சாதி வன்முறைக்கெதிராக ஒடுக்கப்பட்டவர்களின் கௌரவ இயக்கம்,” ”சாதி எதிர்ப்புக் கௌரவப் பேரணி” போன்ற சொற்றொடர்கள் மனதிலோடுகின்றன.

மூன்றாவதாக, ”கௌரவம்” குறிப்பிட்ட சாதியினரின் உணர்வை (sentiment) அடிக்கோடிட்டு உரைப்பதாக இருக்கிறது. இந்தவுணர்வு காலங்காலமாக வரும் மாறாத ஒன்றாகவும் சுட்டப்படுகிறது.  இப்படி உணர்வை மையப்படுத்துவதால் வன்முறையின் வேறுசில இன்றியமையாத இயக்கங்களை, பரிமாணங்களைத்  தவறவிடுகிறோமோ என்று சந்தேகம் எழுகிறது. (”கௌரவத்துக்கு” மாற்றாக உபயோகப்படுத்தப்படும் ”சாதி ஆணவம்” போன்ற உணர்வு சார்ந்த பயன்பாட்டிலும் இந்தச் சிக்கல் உள்ளது.)  உணர்வுக்கு அதிக அழுத்தம் தருகிறபோது, பொருண்மையான பொருளாதார உறவுகள், அரசியல் கருத்தியல்களின், கட்சிகளின் தாக்கங்கள்,  கட்சிகள் செய்யும் கட்டைப்பஞ்சாயத்துகள், அவற்றுக்கு வன்முறையால் கிடைக்கக் கூடிய விளம்பரம், அரசியல் ஆதாயம், படிப்படியாகவேனும் மாற்றங்கண்டுவரும் பால் உறவுகள், பால் அதிகாரம், உலகமயமான நவீனத்தின் தொழில்ரீதியான தாக்கம் போன்ற தொடர்புற்ற பலவும் போதிய கவனத்தைப் பெறுவதில்லை. முக்கியமாக, பட்டியல் பிரிவினரோடு சாதி கடந்த திருமணத்துக்கு எதிராக வன்முறை தொடர்வதில், வலுப்படுவதில் காவல்துறை, நீதிமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட நவீன அரசு நிறுவனங்களின் பங்கு அல்லது அவற்றுக்கிருக்க வேண்டிய பொறுப்பு, இவையெல்லாம் ஊடகம் உள்ளிட்ட பொதுவெளிகளில் பெரிதாக விவாதிக்கப்படுவதில்லை. உணர்வுக்குத் தரப்பட்டிருக்கிற ஒளிவட்ட முக்கியத்துவத்தில் இவையெல்லாம் மங்கிப்போய்விடுகின்றன.

மேலும் மணமான பெண்களின் சொத்துரிமை குறித்து பரவியிருக்கும் விழிப்புணர்வு சாதி கடந்த திருமணத்துக்கான எதிர்ப்பை வலுப்படுத்தியிருக்கிறதா என்பதும் விரிவாக ஆராயப்பட வேண்டியதாக உள்ளது.  1989-ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் (தமிழக அரசின் திருத்தச் சட்டம்) படி திருமணமான பெண்களுக்கும் பரம்பரைச் சொத்தில் சமமான பங்குரிமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. என்றாலும் நடைமுறையில் பெண்ணுக்குச் சொத்தில் சமமான பங்கு கிடைப்பது அத்தி பூப்பது போலத்தான். ”நூறு ஏக்கர் தோட்டமிருந்தாலும் ஆண்கள்தான் அனுபவிக்கிறாங்க; சகோதரிகளுக்குப் பேருக்கு ஒன்றிரண்டு கொடுப்பாங்க. மற்றபடி சீர் செய்ததாகச் சொல்லிடுவாங்க,” என்று என்னிடம் கூறினார் ஈரோட்டில் ஒரு கவுண்டர் சாதிப் பெண். அவரைப் போல்  வேறு சில பெண்களும் “சொத்தில் சம உரிமை கேட்கறதா? அதெல்லாம் கேட்டா பொறந்த வீட்டில் ஒதுக்கி வச்சிருவாங்க” என்று வருத்தப்பட்டார்கள். கொங்குநாட்டில் ஆதிக்கச் சாதிகளில் திருமணத்தின்போதே ”எழுதி வாங்குதல்” என்ற ஒரு வழக்கம் நிலவி வருவதாகக் கொங்குப் பகுதியின் பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். ”சொத்தில் உரிமை கேட்கமாட்டேன்” என்று பெண்ணிடம் அவள் திருமணத்தின்போது பிறந்தவீட்டார் பத்திரம் எழுதி வாங்குவது இப்போது பெரிதும் வழக்கத்திலிருக்கிறது என்று அவர் கூறினார். இத்தகையதொரு கடும் பாலினப் பாகுபாட்டுச் சூழலில் வீட்டுக்குத் தெரியாமல் நடக்கும் எந்த ஒரு திருமணமும் பெண்வீட்டில் சொத்து ரீதியான ”பதற்றத்தை” ஏற்படுத்தக் கூடியதே. அதுவும் குறிப்பாகப் பட்டியல் பிரிவினரோடு திருமணம் என்னும்போது தங்கள் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் மூலமாகச் சொத்து அவரிடம் சென்றுவிடக்கூடும் என்பது சாதி அதிகாரப் பிடிமானத்துக்கு விடப்படுகிற பெருஞ் சவாலாக உணரப்படுகிறது.

பெண்கள் தங்களது நியாயமான சம சொத்துரிமைக் குரலை எழும்பும் முன்பே இப்படி முடக்கப்படுகிறார்கள். தவிர, பொதுவாகவே சாதி கடந்த திருமணத்துக்கு எதிரான ”கௌரவக்கொலை” உள்ளிட்ட சொல்லாடல்களில் பெண்கள் சாதி அடையாளத்துக்குள்ளும் அதைத் தாண்டியும்  மௌனமாக்கப்படுவதும் நடக்கிறது. , குடும்பத்திலிருந்து சாதியிலிருந்து கிளைக்கும் வன்முறையானது பெண் தன்னிலையை எப்படிக் கட்டமைக்கிறது என்பவை ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியவை.

(இக்கட்டுரையின் முதல் பகுதியும் பகிர இருக்கும் அடுத்த பகுதியும் 2015ஆம் ஆண்டு காலச்சுவடு இதழ்களில் வெளிவந்தன. இதழுக்கு நன்றி. செம்மை செய்யப்பட்ட வரைவை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.)